tamilnadu

img

இந்திய விவசாயத்துறையை அடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்... செப்.25 போராட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு

புதுதில்லி:
நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, விவசாயம் சம்பந்தமான சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றியிருப்பதற்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனை எதிர்த்து செப்டம்பர் 25 அன்று நடைபெறும் அகில இந்திய எதிர்ப்பு இயக்கத்திற்குத் தங்களின் முழு ஆதரவினைத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதற்கான சட்டங்களை பாஜக அரசாங்கம், நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிமுறைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு,  அடாவடித்தனமாக நிறைவேற்றியிருப்பதற்கு இடதுசாரிக்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றன. நாடாளுமன்ற ஜனநாயகத்தை இவ்வாறு அழித்திருப்பது, இவர்களின் பாசிச பாணி வெறித்தனத்தை வெளிப்படுத்துகிறது. வாக்கெடுப்பு கோரிய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பதால், பாஜக அரசாங்கம் எதிர்க்கட்சியினரின் வாயை மூடச்செய்துவிடலாம் என நினைத்தால், அது முடியாது. இடதுசாரிக் கட்சிகள், இந்திய நாடாளுமன்றத்தையும், இந்திய அரசமைப்புச்சட்டத்தையும், நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசையும் பாதுகாத்திட தங்கள் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்திய அரசமைப்புச்சட்ட குடியரசுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்று மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.

உணவுப் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தல் 
நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டங்கள் இந்தியாவின் விவசாயத்தையும்,  விவசாயிகளையும் அழித்துவிடும். இந்திய விவசாயத்தை ஒட்டுமொத்தமாக வேளாண் வர்த்தகக் கார்ப்பரேட்டுகளிடம் முழுமையாக ஒப்படைத்திடுவது, விவசாயிகளுக்கு அளித்துவரும் குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக்கட்டவும், பொது விநியோக முறையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதற்கும், மனசாட்சியற்ற வர்த்தகர்கள் மற்றும் பகாசுர கார்ப்பரேட்டுகள் உணவுப் பொருள்களைப் பதுக்கி, அதன்மூலம் செயற்கையாக உணவுப்பற்றாக்குறையை உருவாக்குவதற்கும், உணவுப்பொருள்களின் விலைகளை வானளாவ உயர்த்துவதற்கும் இட்டுச்செல்லும்.  இந்தச் சட்டங்கள் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்குக் கடுமையான முறையில் அச்சுறுத்தலை ஏற்படுத்திடும்.

இடதுசாரிக்கட்சிகள், நாடு முழுவதும் உள்ள தங்களின் கிளைகளை அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, இந்தச் சட்டங்களை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி, செப்டம்பர் 25 அன்று நாடு முழுவதும் நடத்தவுள்ள கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு, தங்கள் முழு ஆதரவினையும், ஒருமைப்பாட்டையும் அளித்திட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றன.  இடதுசாரிக் கட்சிகள், இந்தச் சட்டங்களை மத்திய அரசு விலக்கிக் கொள்வதற்குக் கட்டாயப்படுத்திட, மாநில அளவில் இயங்கும் இதர அரசியல் கட்சிகளுடன் கலந்துபேசி, மாநில அளவில் மேற்கொள்ளவேண்டிய எதிர்ப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும் என்று அனைத்து மாநிலக்குழுக்களையும் கேட்டுக்கொள்கின்றன.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                    **************

முறை தவறி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஜனாதிபதி திருப்பி அனுப்பிட வேண்டும்: சிபிஎம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவிட்-19  வைரஸ் தொற்று வேகமாகப்பரவிவரும் சூழ்நிலையைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிடாமல், இந்த சுருக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே, பாஜகஅரசாங்கம் தான் பிறப்பித்திருந்த 11 அவசரச் சட்டங்களையும் சமூக முடக்கக்காலத்திலேயே சட்டமாக நிறைவேற்றிக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறது.
மாநிலங்களவையில் இந்தச் சட்டமுன்வடிவுகளின் மீது உறுப்பினர்கள் விவாதம் மேற்கொள்வதற்கான வாய்ப்பை மறுத்தும், இதன்மீது வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்கிற அவர்களின் உரிமையை நிராகரித்தும், இந்தியாவின் விவசாயத்தையும், விவசாயிகளையும் கடுமையாகப் பாதித்திடும் அவசரச்சட்டங்கள் அடாவடித்தனமாக நிறை வேற்றப்பட்டுள்ளன. இதுபோல் முன்னெப் போதும் நடந்ததில்லை. இது ஜனநாயகப் படுகொலைக்கு ஒப்பான செயலாகும்.

நாடாளுமன்றத்தின் முன் ஒப்புதலுக்காக வரும் எந்த விஷயமாக இருந்தாலும் அதன்மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருவது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பின ருக்கும் இருந்துவரும் பிரிக்க முடியாத உரிமையாகும்.இந்த உரிமை முற்றாக அவமதிக்கப்பட்டு, காலில்போட்டு மிதிக்கப்பட்டிருக்கிறது.  வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிய,  எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.இந்தச் சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றிக்கொள்ள பாஜக கூட்டணிக்கு மாநிலங்கள வையில் தன்னை ஆதரிக்கும் கட்சி உறுப்பி னர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால்கூட பெரும்பான்மை கிடைக்காது என்பது நன்கு தெளிவாகி இருந்தது.எனவே, இந்தப் புதிய சட்டங்கள் முறை தவறியவையாகும், சட்டவிரோதமானவை யாகும். எனவே குடியரசுத் தலைவர் இவற்றை, அரசமைப்புச்சட்டத்தின் 111ஆவது பிரிவின்கீழ்,மீண்டும் மாநிலங்களவைக்கு, மறுபரிசீ லனைக்காக, திருப்பி அனுப்பிட வேண்டும்.\

இந்தப் புதிய சட்டங்கள் இந்தியாவின் விவசாயத்தை, நம் விவசாய விளைபொருள்களை, நம் சந்தைகளை அந்நிய மற்றும் உள்நாட்டு வேளாண் வர்த்தக பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தூக்கிக் கொடுக்கின்றன. இது நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் சொல்லொண்ணா துன்பத்தையும் துயரத்தையும் அளித்து, அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அறுவடை செய்வதற்கு அபரிமிதமான முறையில் வாய்ப்பளித்திடும். குறைந்தபட்ச ஆதார விலை ஒழித்துக்கட்டப்படும்.குறைந்தபட்ச ஆதார விலை இப்போது நாட்டில் பல பகுதிகளில் பெயரளவில் அமல்படுத்தப்பட்டுவந்தபோதிலும், அது ஓர ளவுக்காவது விவசாயிகளின் வருமானத்திற்குப் பாதுகாப்பை அளித்து வந்தது.  இப்போது இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டிருப்பதன் மூலம்,அத்தியாவசியப் பொருள்கள் பதுக்கப்படு வதற்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. இதன்மூலம்செயற்கையான முறையில் உணவுப் பற்றாக்குறை உருவாக்கப்பட்டு, அத்தியா வசிய உணவுப் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டு, நாட்டையும், நாட்டு மக்களையும் அச்சுறுத்திடும். கார்ப்பரேட் கம்பெனி கள் நிலங்களை குவிப்பதற்கு உதவும் வகையிலான முன்மொழிவுகள் மற்றும் வேளாண்வர்த்தகத்திற்கு லாபம் அளிக்கும்விதத்தில் ஒப்பந்த முறை சட்டப்பூர்வ மாக்கப்பட்டிருப்பது பாரம்பர்ய விவசாய முறையை முற்றிலுமாக அழித்து ஒழித்து விடும். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

மேலும், விவசாயம் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் மாநிலப் பட்டியலில் உள்ளது.இந்தச் சட்டமுன்வடிவுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை ஓரங்கட்டிவிட்டு, சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இது நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிநாதமாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்தை யும் ஆழமான முறையில் அரித்து வீழ்த்துவ தாகும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு, வரும் செப்டம்பர் 25 அன்று நாடு தழுவிய அளவில் மாபெரும் கிளச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாய சங்கங்கள் விடுத்திருக்கும் அறை கூவலுக்கு, தன் முழு ஆதரவினை உரித் தாக்கிக் கொள்கிறது.நாட்டின் நலன்கள் கருதியும், நமக்கு உணவு அளித்திடும் உழவர்களின் நலன்கள் கருதியும், உணவுப் பாதுகாப்புக்கான மக்களின் உரிமைகளுக்காகவும், மத்திய அரசாங்கம் இந்தச் சட்டமுன்வடிவுகளைத் திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)

;