tamilnadu

img

எங்கள் மக்களை திரும்ப பெற்றுக் கொள்கிறோம்... குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தையொட்டி வங்கதேசம் அதிரடி அறிவிப்பு

புதுதில்லி:
இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள தங்கள் நாட்டு மக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக, ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.1955-இல் இயற்றப்பட்ட இந்தியக்குடியுரிமைச் சட்டம், ‘11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்’ என்று கூறியது. இதில், நாடு, மதம், இனம், மொழி குறித்த பாகுபாடுகள் எதுவும் இல்லை. ஆனால், மத்திய பாஜக அரசு தற்போது கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தில், “பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பௌத்தர்கள் ஆகியோரிடம் உரிய ஆவணம் இல்லையென்றாலும் அவர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்தியக் குடியுரிமையை வழங்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, முஸ்லிம்களைத் தவிர்த்துமற்றவர்களுக்கு மட்டும் குடியுரிமைவழங்குவோம் என்று மத அடிப்படையிலான பாகுபாடு புகுத்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக நாடு முழுவதும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மற்றொரு புறத்தில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்து உட்பட எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தங்களின் மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று வடகிழக்கு மாநில மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள தங்கள் நாட்டு மக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

இது பற்றிப் பேசியுள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆலோசகர் கோஹர் ரிஸ்வி, (Gowher Rizvi), “இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டம் மற்றும் அதனால் நடக்கும் போராட்டம் போன்றவை அந்நாட்டின் உள்விவகாரம். ஆனால், எங்கள் நாட்டிலிருந்து வெளியேறி சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் மக்களை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். முன்னதாக, அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள்
சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிறார்கள் என்பதையும் இந்தியா நிரூபிக்க வேண்டும். இது பொதுவான ஒரு நடைமுறைதான். இதில் சிக்கலை உருவாக்கவேண்டிய அவசியமில்லை என நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.\

“மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சமுதாயத்துக்கு வங்கதேசம் ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. இங்கு இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள் போன்ற அனைவரும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ள கோஹர்ரிஸ்வி, “தேசியக் குடியுரிமைப் பதிவேடு குறித்து வங்கதேசம் கவலைப்படத் தேவையில்லை” என இந்தியப் பிரதமர் மோடி தங்களுக்கு உறுதியளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன், இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள வங்கதேச மக்களில் பட்டியலைத் தருமாறு கேட்டுள்ளார். மேலும், அவர்களை மீண்டும் வங்கதேசம் திரும்ப அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

;