tamilnadu

img

தில்லி வன்முறைகள் கொல்லப்பட்டோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளித்திடுக... தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம் தீர்மானம்

புதுதில்லி:
தில்லி வன்முறை வெறியாட்டங்களில் கொல்லப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்காவது அரசு வேலை அளித்திட வேண்டும் என்று தில்லி பத்திரிகையாளர் சங்கம் கோரியுள்ளது.டியுஜே எனப்படும் தில்லி பத்திரிகை யாளர் சங்கத்தின் (Delhi Union of Journalists) செயற்குழுக்கூட்டம் மார்ச் 7 அன்றுநடைபெற்றது. கூட்டத்தில், தில்லியில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை வெறி யாட்டங்களில் உயிர்நீத்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தில்லி காவல்துறை வன்முறை வெறி யாட்டங்களை முன்கூட்டியே அறிந்து, தடுத்திடுவதிலோ அது பல இடங்களுக்குப் பரவாமல் தடுத்திடுவதிலோ (இதனை வெளியாகியுள்ள பல வீடியோக்களும், செய்தியாளர்களின் அறிக்கைகளும் மெய்ப்பிக்கின்றன) தோல்வி அடைந்திருப்பது கண்டு நாங்கள் அதிர்ச்சி கொள்கிறோம். இத்தகைய இக்கட்டான நேரத்தில் மத்திய அரசு, மாநில அரசு ஆகியவற்றின் பங்கு குறித்தும் அதிர்ச்சி அடைகிறோம்.வன்முறை வெறியாட்டங்களை தனிப்பட்ட முறையில் ‘ரிஸ்க்’ எடுத்துக்கொண்டு சம்பவ இடங்களுக்கு நேரடியாகச் சென்று அறிக்கை கள் அனுப்பிய வீரமிக்க ஊடக வீரர்களையும் வீராங்கனைகளையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். அவர்களின் தைரியத்தை வெகுவாகப் பாராட்டுகிறோம். உண்மையை உலகுக்குப் பறைசாற்றிய மலையாளம் தொலைக்காட்சி அலைவரிசைகளான ஆசியாநெட், மீடியா ஒன் ஆகியவற்றுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.வன்முறை வெறியாட்டங்கள் பத்திரிகை யாளர்கள் பலரையும் பாதித்திருக்கிறது. இரவு ஷிப்டுகளில் பணிசெய்துவிட்டு, அகாலநேரத்தில் பாதுகாப்பற்ற பகுதிகளில் வீடுகளுக்குத் திரும்பியோரைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.அரசாங்கத்தால் நிவாரணப் பணிகள் நத்தை வேகத்தில் நடைபெறுவது கண்டும் வருந்துகிறோம். வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டவர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் உரிய இழப்பீடுகள் உடனடியாக அளிக்கப்பட வேண்டும். வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் கொல்லப்பட்ட குடும்பத்தில்ஒருவருக்கு அரசு வேலை அளித்திட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி செய்யச் சென்றிடும் தொண்டர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.வன்முறை வெறியாட்டங்களின்போது நடைபெற்ற கொலைகள், தாக்குதல்கள் மற்றும் தீக்கிரை சம்பவங்கள் குறித்த அனைத்து வழக்குகள் குறித்தும் முதல் தகவல் அறிக்கைகள் உடனடியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். ஒருசிலரை மட்டும் குறி வைத்து முதல் தகவல் அறிக்கைகள் பதியப்படுவதற்கும் எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

வன்முறை வெறியாட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்த வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அவர்களின் துணிச்சலான தீர்ப்பினை வரவேற்கிறோம். வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் எந்தப்பக்கத்திலிருந்து வந்தாலும் அவற்றை கண்டிக்கிறோம்.வன்முறை வெறியாட்டங்களின்போது சக குடிமக்களை சாதி-மதம் பாராது காப்பாற்றி அடைக்கலம் கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள்தான் நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். அனைத்துசமூகத்தினருக்கும் இடையே சமூக நல்லிணக்கத்தைப் பேணும் விதத்தில் அனைத்து ஊடகங்களும் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.ஊடகங்களில் ஒரு பிரிவு, எதிர்மறையான முறையிலும் ஒருதலைப்பட்சமாகவும் செயல்படு வதை நாங்கள் கண்டிக்கிறோம். நாடு முழு வதும் உள்ள அனைத்து அரசாங்கங்களும் மதவெறித் தீ பரவுவதைத் தடுத்திடவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உத்தரவாதப்படுத்திடவும் முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு டியுஜே தன் தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.(ந.நி.)

;