tamilnadu

img

ஜேஎன்யு கட்டண உயர்வு வாபஸ் என்று பித்தலாட்டம் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்

புதுதில்லி:
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யு) கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டிருப்பதாக பல்கலைக் கழகத்தின் தரப்பில் கூறப்பட்டி ருப்பது, பித்தலாட்டமான ஒன்று என்றும், கட்டண உயர்வு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப் படும் வரை போராட்டம் தொடரும்என்றும் ஜேஎன்யு மாணவர் பேரவை கூறியுள்ளது.ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் குழு, உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்வதாக புதன் அன்று அறிவித்தது. பல்கலைக் கழக மாணவர் பேரவை இதனைப்பித்தலாட்டமான (gimmick) ஒன்று என்றும், திட்டமிடப்பட்டிருக்கிற உயர்வினை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும் “இது தொடர்பாக பல்கலைக் கழகம்எங்களுக்கு எதுவுமே தெரிவித்திடவில்லை என்றும், ஊடகங்கள் வாயிலாகத்தான் பல்கலைக் கழகத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள்தெரிந்து கொள்ள முடிகிறது” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

போராடும் ஜேஎன்யு மாண வர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ள துணை வேந்தர் எம். ஜகதீஷ் குமார், “ஜேஎன்யுவின் நிர்வாகக் குழு பெரிய அளவில் சலுகைகள் வழங்கியிருப்பதாகவும், எனவே மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்,” என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.ஜேஎன்யு நிர்வாகக் குழு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் விடுதிக் கட்டணங்களில் 50 சதவீதம் சலுகை வழங்கியிருப்பதாக, பல்கலைக் குழு பதிவாளர் தெரி வித்துள்ளார்.அதேபோன்று உணவு விடுதி டெபாசிட் (refundable mess security deposit) 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 5,500 ரூபாயாகக் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.  விடுதிகளில் தனியாகத் தங்கியிருக்கும் மாணவரின் அறை வாடகை மாதத்திற்கு 20 ரூபாயாக இருந்தது, தற்போது அனைத்து மாணவர்களுக்கும் 600 ரூபாய் என உயர்த்தப்பட்டிருக்கிறது. இவர்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழான மாணவர்களாக இருந்தால் 300 ரூபாய் அளித்திட வேண்டும். இருவர் தங்கும் அறைவாடகை 10 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழான மாணவர்களாயிருப்பின் 150 ரூபாய் செலுத்திட வேண்டும்.

ஜேஎன்யு நிர்வாகக் குழுவின் இந்த முடிவுகளை ஜேஎன்யுமாணவர் பேரவை ஒருமனதாக நிராகரித்துள்ளது. மாணவர் பிரதிநிதிகளைக் கலந்தாலோ சிக்காமல் நிர்வாகமே தன்னிச்சையாக இம்முடிவினை எடுத்திருக்கிறது. எங்களின் பல்கலைக் கழக வாழ்க்கையை முழுமையாகப் பாதிக்கக்கூடிய விதத்தில் நிர்வாகம் முடிவுகளை மேற்கொண்டி ருக்கிறது. முடிவுகள் மேற்கொள்வது தொடர்பாக எங்களுக்கிருந்த உரிமைகளை அங்கீகரிக்கவே நிர்வாகம் மறுக்கிறது என்றும் மாணவர் பேரவை கூறியுள்ளது.நடைபெற்றதாகக் கூறப் பட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மாணவர்களின் பிரதிநிதிகள் மட்டுமல்ல, ஆசிரியர் சங்கப் பிரதி நிதிகளும் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை.நிர்வாகக் குழுவின் அங்கமாக இருக்கின்ற ஆசிரியர் பிரதிநிதிகள், நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறவிருந்த கன்வென்ஷன் மையத்திற்குச் சென்றபோது, நிர்வாகக் குழு முடிவுகள் குறித்து எதுவும் துணைவேந்தர் தங்களிடம் காட்டவில்லை என்று கூறியுள்ளனர்.புதன்கிழமை சுமார் 12.40 மணியளவில் எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில்,  நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்ததாகக் கூறப்பட்டிருந்தது; “விடுதிகளை நடத்துவதில் பல்கலைக் கழகம் தன்னை முழுமையாகக்  கைகழுவிக்கொண்டு விட்டது” என்று ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

அநியாயமான உயர்வு
“மாணவர்களில் பெரும்பாலா னவர்களுக்கு மாதத்திற்கு மூவாயிரம் ரூபாய் வரைக்கும் உயர்வினை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள மாணவர்களால்கூட இந்த கட்டண உயர் வினை எதிர்கொள்வது சிரமமாகும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவர்களும் மாதத்திற்கு குறைந்தது 1500 ரூபாய் செலுத்திட வேண்டும். இதனை எந்த மாணவராலும் செலுத்திட முடியாது. இந்த கட்டண உயர்வு மிகவும் அநியாயமாகும்,” என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.சுமார் ஆயிரம் மடங்கு உயர்த்தப்பட்டுள்ள விடுதிக் கட்டண உயர்வு முழுமையாகத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று மாண வர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.(ந.நி.)

;