tamilnadu

img

ரதின் ராய், ஷாமிகா ரவியை நீக்கியது மோடி அரசு

புதுதில்லி:
நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிறது என்று தொடர்ந்து உண்மையைக் கூறிவந்த- பொருளாதார வல்லுநர்கள் ரதின் ராய்,ஷாமிகா ரவி ஆகியோர் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து (Economic Advisory Council to the Prime Minister - EAC-PM) நீக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பான விவரம் வருமாறு: இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்று மத்திய அரசுத் தரப்பிலிருந்தே ஒலித்த முதல் குரல் என்றால், பிரதமர்நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரதின் ராயின் குரல்தான் அது.“தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்றுமதி அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி உள்ளது. பிரேசில், தென்னாப்பிரிக்காவில் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கே பொருளாதார வளர்ச்சி உள்ளது. ஆனால்,
நம்முடைய நாட்டின் தற்போதைய பொருளாதாரபின்னடைவால், மேலே கண்ட நாடுகளை விட வளர்ச்சியில் கீழே செல்ல வாய்ப்பு உள்ளது. உண்மையில் இந்த பாதிப்பு கடுமையானது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி உள்ளது.”

- இது, கடந்த மே மாதம் ரதின் ராய் பேசியதாகும்.அடுத்ததாக 2019-20 நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, ஜூலை மாதமும், பொருளாதார நிலை குறித்த தனது கவலையை அவர் வெளிப்படுத்தத் தவறவில்லை.“இந்தியா இன்றைக்கு வெளியில் பகிரங்கமாக தெரியாத நிதியாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. வரி வருவாயில் ஏற்படும் பற்றாக்குறையே இந்த பொருளாதாரச் சிக்கலுக்கான முக்கியக் காரணம். ஜிஎஸ்டி மற்றும் தனிநபர் வருமான வரி ஆகிய இரண்டும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நடப்பு 2019-20 நிதியாண்டில், வரி வருவாயாக ரூ. 25 லட்சத்து 53 ஆயிரம் கோடி திரட்டுவது என்று மத்திய அரசின்நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. என்னுடைய தொழிற்திறன் சார்ந்த கணிப்பின்படி, 2019-20 நிதியாண்டில், திட்டமிட்ட அளவில் வரிவருவாய் ஆதாரத்தை நாம் திரட்டிவிட முடியாது.எனவே, நாம் அதிகம் கடன்வாங்க வேண்டியதிருக்கும், அல்லது செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகம் கடன்வாங்கினால், அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், செலவுகளை அதிகமாக குறைத்தாலும் பொருளாதாரத்திற்குப் பாதிப்புதான். மொத்தத்தில் இந்தியா ஒரு வெளியில் தெரியாத பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது” என்று ராய் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்ல, மத்திய அரசின் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சுமார் 1 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய்கணக்கில் காட்டப்படவில்லை என்ற அதிர்ச்சிகரமான உண்மையையும் ரதின் ராய் அம்பலப்படுத்தினார்.“பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும் திருத்தப் பட்ட மதிப்பீடுகளின்படி, கடந்த 2018 - 19-ஆம்ஆண்டில் இந்திய அரசின் வருவாய் 17.3 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பொருளாதார அறிக்கையில் 15.6 லட்சம் கோடி என்று விவரம் தரப்பட்டுள்ளது. அப்படியானால் 1.7 லட்சம் கோடிஎங்கே போனது?” என்ற அவரது கேள்விக்குஇப்போது வரை மோடி அரசு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரதின் ராய் வரிசையில், அவரைப் போலவே,பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றிருந்த மற்றொரு பொருளாதார வல்லுநர் ஷாமிகா ரவி. நாட்டின் பொருளாதார சிக்கலை, மிக முக்கியமான நேரத்தில் பேசி தனது கடமையை ஆற்றியவர்.நாட்டில், இதற்கு முன் இல்லாத அளவிற்குதற்போது பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார், கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியபோது, அது பரபரப்பை ஏற்படுத்தியது. “இந்தியா கடந்த 70 ஆண்டுகளில் இந்த வகையான பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை. முழு நிதித்துறையும் சிக்கலில் உள்ளது; பணப்புழக்கம் நொடித்துப் போயிருக்கிறது. இதனை அரசாங்கம் முற்றிலும் அங்கீகரிக்கிறது; ஆனால் அதைச் சரிசெய்வதில்தான் தடுமாற்றம் உள்ளது” என்று ராஜீவ் குமார் கூறினார். 

ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனை அடியோடு மறுத்தார். அவர் தனியாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, பொருளாதாரம் ஆஹோ ஓஹோவென்று இருப்பதாக கூறினார். இதையொட்டி, அனைத்து மட்டங்களிலும் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன.அப்போது, நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - இவர்கள் இருவரில் யார் சொல்வது உண்மை? என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினரான ஷாமிகா ரவியிடம்,ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். ஷாமிகா ரவியும் அதற்கு பதிலளித்துஇருந்தார். “இந்தியா தற்போது பெரும் பொருளாதாரதேக்கநிலையைச் சந்தித்து வருகிறது. இதுஉண்மைதான். இதனைச் சமாளிக்க அனைத்துத்துறைகளுக்கும் இலக்கு நிர்ணயித்து, தேசியவளர்ச்சித் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். பொருளாதாரத்தை சீர்படுத்த பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்படும்; வெறும் ஒட்டுவேலைகள் பயன்தராது. பொருளாதார வீழ்ச்சியை நிதியமைச்சகத்திடம் மட்டும் விட்டுவிடுவது, நிறுவனத்தின் மொத்த வளர்ச்சியையும் கணக்குகள் துறையிடம் ஒப்படைப்பது போன்றதாகவே இருக்கும்” என்று அவர் கூறினார்.அதேபோல, கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி,இ-சிகரெட்டிற்கு மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள தடை சரிதானா? என்றும் ஷாமிகா ரவியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, “அதிக வரிகள் இருக்கும்போது தடைகள் எதற்கு? அது தேவையில்லைதான். மற்ற சிகரெட் மற்றும் புகையிலைப்பொருட்கள் இருக்கும் போது இ-சிகரெட்டுக்கு மட்டும் தடைவிதிப்பது விசித்திரமானதே. தடை விதிக்கும் முடிவானது, மக்களின்சுகாதாரம் சார்ந்தா, அல்லது நிதி சார்ந்தா? எந்த வகையில் பார்த்தாலும் இதில் தர்க்க நியாயம் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து உண்மைகளைப் பேசிவந்த பின்னணியிலேயே, புதன்கிழமையன்று மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து ரதின் ராயும், ஷாமிகா ரவியும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பகுதிநேர ஆலோசகர்களாக குழுவில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதுஅவர்களுக்குப் பதில், ஜே.பி. மார்கன் நிறுவனத்தைச் சேர்ந்த சாஜித் செனாய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தவிர, நிதி ஆயோக்கைச் சேர்ந்தபிபேக் டெப்ராய், ரத்தன் வாட்டல் ஆகியோர் முழுநேர உறுப்பினர்களாகவும், இந்திராகாந்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிமா கோயல் பகுதிநேர உறுப்பினராகவும் தொடர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மோடி ஆட்சிக்கு வந்தபின், ரகுராம் ராஜன்துவங்கி அரவிந்த் சுப்பிரமணியன், உர்ஜித் படேல், விரால் ஆச்சார்யா என பொருளாதார வல்லுநர்கள் பலரும் அரசு நிர்வாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;