tamilnadu

img

70 ஆண்டில் இல்லாத பணப்புழக்க நெருக்கடி... நாட்டில் பிரச்சனைகள் மேலும் தீவிரமாகும்

புதுதில்லி:
நாட்டில், இதற்கு முன் இல்லாத அளவிற்கு தற்போது பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.‘நிதி ஆயோக்’ துணைத்தலைவர் ராஜீவ்குமார், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.“கடந்த 70 ஆண்டுகளில் இந்த வகையான பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை. முழு நிதித்துறையும் சிக்கலில் உள்ளது”என்று கூறியுள்ள ராஜீவ் குமார், “தனியார் துறையின் சில அச்சங்களை அகற்ற, மத்திய அரசு, உடனடியாக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

“நிதித்துறையில் பிரச்சனை உள்ளது; பணப்புழக்கம் நொடித்துப் போயிருக்கிறது என்பதை அரசாங்கம் முற்றிலும் அங்கீகரிக்கிறது; ஆனால் அதைச் சரிசெய்வதில்தான் தடுமாற்றம் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ள ராஜீவ் குமார், “இங்கு யாரும் யாரையும் நம்பத் தயாரில்லை; யாருக்கும் கடன் கொடுக்க விரும்பவில்லை. யாரும் எதையும் தலைமை தாங்கி நடத்தவும்கூட தயாராக இல்லை” என தெரிவித்துள்ளார். “இது அரசாங்கத் துறையில் மட்டுமல்லாமல், தனியார்துறைக்குள்ளும் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.மேலும், இந்த பிரச்சனைகள் இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள ராஜீவ்குமார், “அது நிறுத்தப்பட்டாக வேண்டுமென்றால், இரண்டு வழிகளே உள்ளன; ஒன்று, அரசானது அசாதாரணமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; இரண்டாவதாக, தனியார் துறையினருக்கான சில அச்சங்களை அகற்ற அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

2019 நிதியாண்டின் முதல் காலாண்டில், ஜி.டி.பி வளர்ச்சி, 5.7 சதவிகிதமே இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குறைவான நுகர்வு, மிகவும் குறைந்த முதலீடுகள், சேவைத் துறையில் சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஜி.டி.பி வீழ்ச்சி ஏற்படும் என்று நோமுரா உள்ளிட்ட நிறுவனங்கள் கணித்துள்ளன.இந்நிலையில், நிதி ஆயோக் துணைத்தலைவர் கொடுத்துள்ள எச்சரிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதுடன், இந்தியப் பொருளாதாரம் எவ்வளவு ஆபத்தில் இருக்கிறது என்பதை வெளிச்சம் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

;