tamilnadu

img

வாஜ்பாய் ஆட்சி முடியும் போது நடத்தப்பட்ட 34 கருத்துக் கணிப்புகளும் பொய்த்தன - முரளிதரன் காசிவிஸ்வநாதன்

2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்தியத் தேர்தல்கள் தொடர்பாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஆங்கிலத்தில் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் பிரணாய் ராய், தோரப் ஆர். சோபரிவாலா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கும் The Verdict: Decoding India’s Elections புத்தகம் மிக முக்கியமானது. சுவாரஸ்யமானது.

பிரணாய் ராய் நாடறிந்த ஊடகவியலாளர். தேர்தல் தொடர்பான செய்தி சேகரிப்பிற்காக மிகவும் அறியப்பட்டவர். சோபரிவாலா, என்.டி.டி.வியின் ஆசிரியர் குழு ஆலோசகர். இந்தியாவிலும் இங்கிலாந்திலும் சந்தை ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றியவர். இந்தியாவில் தேர்தல்கள் எப்படி நடத்தப்படுகின்றன? என்னென்ன முறைகள் பின்பற்றப்படுகின்றன? என்பது போன்ற தகவல்களை விவரிப்பதல்ல இந்தப் புத்தகத்தின் நோக்கம். மாறாக, இந்தியத் தேர்தல்களையும் தேர்தல் முடிவுகளையும் எப்படிப் புரிந்துகொள்வது என்பதைத்தான் இந்தப் புத்தகம் ஆராய்கிறது. இந்தியாவில் தேர்தல்களில் வெற்றியையும் தோல்வியையும் எந்தக் காரணிகள் தீர்மானிக்கின்றன? ஆளும் கட்சிகளுக்கு எதிரான அலை என்ற அம்சம் மெல்லமெல்ல இந்தியத் தேர்தல்களில் இருந்து நீங்கி வருகிறதா? கருத்துக் கணிப்புகளையும் வாக்குச் சாவடிகளுக்கு வெளியில் எடுக்கப்பட்ட கணிப்புகளையும் நம்ப முடியுமா? வேட்பாளர் தேர்வு என்பது எந்த அளவுக்கு வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கிறது? எலெக்ட்ரானிக் வாக்கு எந்திரங்களை ‘ஹாக்’ செய்து வெற்றிபெற முடியுமா ? ஆகிய கேள்விகளை இந்தப் புத்தகம் பிரதானமாக ஆராய்கிறது.


மேலே சொன்ன கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தையும் ஆச்சரியம் அளிக்கக் கூடிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் விளக்குகிறது. இந்தப் புத்தகத்தின் மிக மிக முக்கியமான அம்சமே இந்த புள்ளிவிவரங்கள்தான். ‘ஆளும்கட்சிக்கு எதிரான அலை’ - என்ற அம்சம் 1977-2002வரை இந்தியா முழுவதும் கோலோச்சியது என்பதால், ஒரு முறை ஆட்சியில் இருக்கும் அரசுகள் மற்றொரு முறை தேர்வுசெய்யப்படுவது கடினமாக இருந்தது. ஆனால், அந்தப் போக்கு மாறிவருவதை புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. 2002 - 2010 வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 48 சதவீத ஆளும் கட்சிகளும் கூட்டணிகளும் ஆட்சியைப் பிடித்திருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர்கள், ஆட்சி நன்றாக இருந்தால் மீண்டும் வாக்களிக்க மக்கள் தயங்குவதில்லை என்கின்றனர். இதற்கு முந்தைய காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த அரசுகள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் விகிதம் என்பது வெறும் 29 சதவீதமே இருந்தது என்கிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பது எப்படி தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்பதை சில காரணிகள் மூலம் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். முதலாவதாக சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிப்பவர்களைவிட உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிப்பவர்களின் சதவீதம் அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டும் புத்தகம், அதிகாரம், நிதி ஆகியவற்றைக் கூடுதலாக இந்த அமைப்புகளுக்கு அளிக்க வேண்டும் என்கிறார்கள்.


வாக்குச்சாவடி கைப்பற்றுதல்

இந்தியா முழுவதுமே சுயேச்சைகளுக்கு வாக்களிப்பது குறைந்திருப்பதை ஜனநாயகத்தில் ஒரு சாதகமான அம்சமாக பார்க்கும் நூலாசிரியர்கள், வாக்குப் பதிவு எந்திரங்கள் வந்த பிறகு, வாக்குச் சாவடியை கைப்பற்றும் சம்பவங்கள் கிட்டத்தட்ட இல்லாமலேயே போயிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். வாக்குப் பதிவு எந்திரங்கள் வந்த பிறகு, வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவது ஏன் நடக்காமல் போனது? காரணம், வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றினால் உடனடியாக வேண்டிய சின்னத்திற்கு முத்திரை குத்தி வாக்குப் பெட்டிக்குள் போட்டுவிடலாம். ஆனால், வாக்குப் பதிவு எந்திரத்தில் 12 வினாடிகளுக்கு ஒரு முறைதான் வாக்குப் பதிவுசெய்யும் பொத்தானை அழுத்த முடியும். அப்படியானால், 100 வாக்குகளை பதிவுசெய்ய 20 நிமிடங்களாகும். 1000 வாக்குகளைச் செலுத்த கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரமாகிவிடும். ஆகவே, அது இயலாத காரியம் என்கிறது புத்தகம்.


கருத்துக்கணிப்புகள்

இந்தப் புத்தகத்தின் முக்கியமான பதிவு, தேர்தல் கருத்துக் கணிப்புகள் பற்றியது. இந்தியாவில் செய்யப்படும் கருத்துக் கணிப்புகள் எத்தகையவை, அவற்றில் கணிக்கப்படுவது நடக்கிறதா ஆகிய இரு கேள்விகளுக்குமான பதில்கள் சுவாரஸ்யமானவை. 1980லிருந்து தற்போதுவரை 833 தேர்தல் கணிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் சட்டமன்றத் தேர்தல்களில் 700 கணிப்புகளும் நாடாளுமன்றத் தேர்தல்களில் 133 கணிப்புகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் 75 சதவீத கருத்துக் கணிப்புகள் உண்மையாகியிருக்கின்றன என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. இதையெல்லாம்விட இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் இந்தப் புத்தகம் சொல்கிறது. அதாவது மக்களவைத் தேர்தலுக்கென செய்யப்பட்ட கணிப்புகளில் 72 சதவீதக் கணிப்புகள் மட்டுமே உண்மையாகியிருக்கின்றன. ஆனால், 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காகச் செய்யப்பட்ட கருத்துக் கணிப்புகளை நீக்கிவிட்டால் இந்தியாவில் நடந்த கருத்துக் கணிப்புகளில் 97 சதவீதம் கருத்துக் கணிப்புகள் உண்மையாகியிருக்கின்றன!! ஏன் அப்படி? 1999 - 2004 காலகட்டத்தில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி முடியும்போது 34 கருத்துக் கணிப்புகள் செய்யப்பட்டன. இந்த 34 கருத்துக் கணிப்புகளுமே பொய்த்துப்போயின என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதைவிட சுவாரஸ்யம், 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் நடந்ததைப்போலவே, 2019ஆம் ஆண்டுத் தேர்தலும் கருத்துக் கணிப்புகளைச் செய்வதற்கு மிகச் சவாலான தேர்தலாம்.

இன்னொரு தகவலையும் இப்புத்தகம் சொல்கிறது. இந்தியாவில் கருத்துக் கணிப்புகளைச் செய்வதற்குக் கடினமான ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று!

நன்றி : பிபிசி தமிழ்

;