tamilnadu

img

சபரிமலை சீராய்வு மனுக்களை இப்போது விசாரிக்கப் போவதில்லை : உச்சநீதிமன்றம்

புதுதில்லி, ஜன.13- சபரிமலை வழக்கிற்காக அமைக்கப்பட்ட ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரணை தொடங்கியது. அப்போது, சபரிமலையில் இளம் பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனுக்களை இப்போது விசாரிப்பதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்தது. மத வழக்கங்கள் தொடர்பான அரசமைப்பு சாசன ரீதியிலான கேள்விகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தின் விரிவான அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. சீராய்வு மனுக்களை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு  முன்வைத்த ஏழு கேள்விகளுக்கு விடைகாண  ஒன்பது நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு விடப்பட்டிருந்தது. அதுகுறித்து இப்போது விசாரணை தொடங்கியுள்ளது. சபரிமலை தொடர்பான 61 மனுக்கள் தற்போது விரிவான அமர்வின் விசாரணைக்கு வந்துள்ளன.  

மத சுதந்திரம் குறித்த அரசமைப்பு சாசன பிரிவுகளின் சாரம், அரசமைப்பு சாசன சட்ட வரையறை, இந்து பிரிவுகள் என்பதன் பொருள், ஏதேனும் மதம் அல்லது அதன் பிரிவுகளின் தவிர்க்க முடியாத  மத  நடைமுறைகளுக்கு அரசமைப்பு சாசன பாது காப்பு வழங்கப்பட்டுள்ளதா; தர்காவிலோ, மசூதியிலோ முஸ்லீம் பெண்கள் நுழைதல், பார்சி அல்லாத நபர்களை திருமணம் செய்த பார்சி பெண்களின் வழிபாட்டுத்தல நுழைவுக்கான அனுமதி, தாவூதி போஹ்ரா சமூகத்தில் பெண்களின் சேலா கர்மம் போன்ற பிரச்சனைகளை முக்கியமாக கொண்டு ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உள்ளது. மத்திய அரசுக்காக சொலிசிட்டர் ஜெனரல் ஸுஷார் மேத்தா ஆஜரானார். சபரிமலை தரிசனத்துக்கு முயன்ற பிந்து அம்மணிக்காக இந்திரா ஜெய்சிங் ஆஜரானார்.

;