tamilnadu

img

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி பாக்கி....மூடிக்கிடக்கும் 212 சர்க்கரை ஆலைகள் விலை கிடைக்காமல் எரிக்கப்படும் கரும்புத் தோட்டங்கள்

திருப்பதி:
கரும்பு விவசாயிகளின் முதல் அகில இந்திய மாநாடு ஆந்திர மாநிலம் திருப்பதியில் டிசம்பர் - 20,21 தேதிகளில் நடைபெற்றது. 11 மாநிலங்களில் இருந்து 128 பிரதிநிதிகள், மாநாட்டில் கலந்து கொண்டனர். கரும்பு விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து விவாதித்த இம்மாநாடு ஒரு டன் கரும்புக்கு ரூ.4500 விலை கேட்டு மற்றும் கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2020 ல் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றம் நோக்கி கரும்பு விவசாயிகளின் பேரணி - ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்தது.அனைத்து மாநிலங்களிலும் கரும்பு விவசாயிகளின் மாநில அமைப்புகளை பலப்படுத்துவது என்றும் ‘அகில இந்திய கரும்பு விவசாயிகளின் மகா சம்மேளனம்’ என்கிற பெயரில் அகில இந்திய அமைப்பாக செயல்படுத்துவது எனவும் மாநாடு தீர்மானித்தது.

பேரணி - பொதுக்கூட்டம்
மாநாட்டின் முதல் நிகழ்வாக டிசம்பர் 20 அன்று காலை திருப்பதியில் கரும்பு விவசாயிகள் ஊர்வலம் - பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து ஆயிரம் கரும்பு விவசாயிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு குமாரரெட்டி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க அகில இந்திய இணை செயலாளர் விஜூகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் என்.கே.சுக்லா,  மல்லா ரெட்டி, டி.ரவீந்திரன், சூரிய நாராயணராவ், ஹரிபாபு, டி.ஜனார்தனன் உட்பட தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசினர். பிரஜா நாட்டிய மண்டலி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பிரதிநிதிகள் மாநாடு
20.12.2019 மாலை 4 மணிக்கு திருப்பதி சிவசக்தி கல்யாண மண்டபத்தில் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக கரும்பு சங்க கொடியை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்  துணை தலைவர் மல்லா ரெட்டி ஏற்றி வைத்தார். ஆந்திர மாநில கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சூரியநாராயணராவ்  வரவேற்றுப் பேசினார். மல்லா ரெட்டி (ஆந்திரா), என்.பழனிச்சாமி (தமிழ்நாடு), மாருதி மான்படே (கர்நாடகா), சித்தப்பா கல்ஷெட்டி (மகாராஷ்ட்ரா) சாதுசரண் (உத்திரபிரதேசம்), பிரபுராஜ்(பீகார்) ஆகியோர் தலைமைக்குழுவாக தேர்வு செய்யப் பட்டனர்.மாநாட்டில் அரசியல் மற்றும் விவசாயிகள் நிலமைகள் குறித்த அறிக்கையை  விஜூகிருஷ்ணன் சமர்ப்பித்தார். அமைப்பின் செயல்பாட்டு அறிக்கையை அகில இந்திய கன்வீனர் என்.கே.சுக்லா சமர்ப்பித்தார். அனுபவங்கள் பற்றியும் அகில இந்திய அளவில் கரும்பு விவசாயிகளை அமைப்பு ரீதியில் திரட்ட வேண்டியதன் தேவை குறித்தும் டி.ரவீந்திரன் பேசினார். 

பிரதிநிதிகள் விவாதம்
டிசம்பர் 21 அன்று 11 மாநிலங்கள் சார்பில் 14 பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்றுபேசினார்கள். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் என்.பழனிச்சாமி, செ.நல்லாக்கவுண்டர், தனலட்சுமி ஆகியோர் பேசினர்.கரும்பு விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளை விவாதத்தில் பிரதிநிதிகள் கூறினார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரும்பு கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. ஆனால் இதே காலத்தில் கரும்பு உற்பத்தி செலவு அதிகரித்துவிட்டது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மூடிக்கிடக்கும் 212 சர்க்கரை ஆலைகள்
நாட்டில் உள்ள 736 சர்க்கரை ஆலைகளில் 524 மட்டுமே செயல்படுகின்றன. 212 சர்க்கரை ஆலைகள் மூடிக்கிடக்கின்றன. நாடு முழுவதும் இருபது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கரும்பு பண பாக்கி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய் நிலுவை உள்ளது. கரும்பு பணத்தை கேட்டால் உ.பி பாஜக அரசின் முதல்வர் ஆதித்யா, விவசாயிகளிடம், கரும்பு பயிர் செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் 18 மாதங்கள் வரை கரும்பு வெட்டாமல் வயலிலேயே கிடக்கிறது. பல விவசாயிகள் விலை கிடைக்காமல் கரும்புத் தோட்டத்தையே தீ வைத்து எரிக்கிறார்கள்.கூட்டுறவு -பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் நாடு முழுவதும் 347 உள்ளன. இவற்றை ஆளும் அரசுகள் பலவீனப்படுத்துகின்றன. கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966 ஐ மத்திய அரசே நீர்த்துப் போகச் செய்து கொண்டுள்ளது. தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாக 9.5 சதம் பிழிதிறனுக்கு விலை என்று இருந்ததை 10 சதம் பிழிதிறனுக்கு என கட்டுப்பாட்டை கடுமையாக்கி மத்திய அரசு விலையை அறிவிக்கிறது. ரங்கராஜன் குழுவின் சிபாரிசின் பேரில், வருவாய் பங்கீட்டு முறைப்படி கரும்பு விலை நிர்ணயிக்கும், (Revinew sharing farmulaw) சட்டத்தை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர். இத்தகு சூழலில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுத்திட வலுமிக்க போராட்டம் அவசியம் என பிரதிநிதிகள் கூறினர்.நிறைவாக என்.கே.சுக்லா தொகுப்புரை வழங்கினார். 

புதிய நிர்வாகிகள் தேர்வு 
அகில இந்திய கரும்பு விவசாயிகள் மகா சம்மேளனத்தின் அகில இந்திய தலைவராக டி.ரவீந்திரன், பொதுச்செயலாளராக என்.கே.சுக்லா, துணை செயலாளராக விஜூகிருஷ்ணன் உட்பட 29 பேர் கொண்ட மத்தியக்குழுவை மாநாடு தேர்வு செய்தது. தமிழ்நாட்டில்இருந்து டி.ரவீந்திரன், என்.பழனிச்சாமி, எம்.சின்னப்பா, சி.பெருமாள், செ.நல்லாக் கவுண்டர் ஆகியோர் மத்தியக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
· கரும்பு உட்பட அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் சாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவுடன் ஐம்பது சதம் கூடுதலாக விலை நிர்ணயித்துவழங்கிட வேண்டும். 9.5 பிழி திறன் கொண்ட
ஒரு டன் கரும்புக்கு ரூ.4500 விலையாக அறிவித்து வழங்கிட வேண்டும்.

· விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்திட முடியாமல் அவதிப்படும் நிலையில் ஒரு முறை விவசாய கடன்களை மத்தியமாநில அரசுகள் தள்ளுபடி செய்திட வேண்டும்.

· கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966ஐ கறாராக அமல்படுத்திட வேண்டும்.

· கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை பாதுகாத்து மேம்படுத்திட மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கி மாநிலங்களுக்கு வழங்கிட வேண்டும்.

· நாடுமுழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு வர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளதை விவசாயிகளுக்கு வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

· கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்தி 2020 மார்ச் முதல் வாரத்தில் கரும்பு விவசாயிகளின் பேரணி - ஆர்ப்பாட்டம் தில்லியில் நாடாளுமன்றம் முன்பு நடத்திடவும் மாநாடு தீர்மானித்தது.

பிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக...
· மேலும், கரும்பு விவசாயிகளுக்கு இந்திய அரசு அதிகமான மானியம் வழங்குகிறது என்றும் இது சர்வதேச விதிகளுக்கு முரனாணது என்றும்கூறி பிரேசில் அரசு, உலக வர்த்தக மையத்தில் இந்தியாவிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. அந்த நாட்டின் பாசிச வெறிபிடித்த ஜனாதிபதி பொல்சானரோ ஜனவரி 26ல் இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி25 அன்று நாடு முழுவதும் கண்டனஆர்ப்பாட்டம் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.

;