tamilnadu

img

நோய்களால் அவதியுறும் பேரா. சாய்பாபாவை சிறையிலிருந்து விடுவித்து, சிகிச்சை அளித்திடுக... ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை வலியுறுத்தல்

புதுதில்லி:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆர்வலர்களிடம் மத்திய அரசும், மகாராஷ்டிர மாநிலஅரசும் கருணையின்றி நடந்துகொள்ளும் விதம் கண்டிக்கத்தக்கது என்றும், முனைவர் ஜி.என்.சாய்பாபா அவருக்குள்ள உடல் நலிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக அவரை பிணையில் விடுவித்திட வேண்டும்என்றும் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் பேராசிரியர் முனைவர் ஜி.என். சாய்பாபா போன்றவர்களைக் கையாளும் விதம் சர்வதேச அளவிலான மாநாடுகளையும், நம் நாட்டிலுள்ள 2016 ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தினையும், சிறைக் கையேட்டையும்  மீறும் விதத்தில் உள்ளன. சுமார் 90 சதவீத அளவிற்குஊனம் பெற்றுள்ள முனைவர் சாய்பாபாவிற்கு 19 வகையான மோசமான உடல்நலிவு நிலையால் பாதிக்கப்பட்டவர்.  இவற்றில் சில உயிருக்கு ஆபத்தைவிளைவிக்கக்கூடியவை. இவரதுஊனம் பிறப்பிலேயே ஏற்பட்ட போலியோவுடனும் இணைந்திருக்கிறது. இதனால் இவருடைய இரு கால்களும் நடக்க முடியாத அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளன., அவருடைய வாழ்க்கைத் துணைவியாரின் கூற்றுப்படி இப்போது அவருடைய இரு கைகளும்கூட செயல்படவில்லை. ஒன்று, அவர் கைது செய்யப்படும்போது காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் காரணமாகவும், மற்றொரு கை சிறையில் உரிய சிகிச்சை அளிக்க மறுத்ததன் காரணமாகவும் ஏற்பட்டிருக்கின்றன. 

தற்போது அவர் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாக்பூர் மத்திய சிறையில் அவர் பயங்கர சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். சிறை வளாகத்திற்குள் எவரும் அணுகமுடியாத நிலை. அவர் அங்கே காவல்துறையினராலும், சிறைத் துறையினராலும் தவறான முறையில் நடத்தப்பட்டுவருகிறார். மேலும் அவர் தனிமைச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால், இதற்கு முன் சிறைவாசிகள் அவருக்கு அளித்து வந்த உதவிகள் கூட இப்போது அவருக்குக் கிடைக்கவில்லை. இவற்றின் விளைவுகளால் அவர் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.  

இத்தகைய மிகவும் மோசமான நிலைமைகளின் காரணமாகவும், நாக்பூர் மத்திய சிறையில் அதிக அளவில் கைதிகள் இருப்பதன் காரணமாகவும், சிறை ஊழியர்கள் மற்றும் சிறைக் கைதிகள் (இவர்களில் ஒருவர் இவருக்கு அடுத்த செல்லில் இருக்கிறார்) பலக்கு கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாலும், இவருக்கும்கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. உடல் நலிவின் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று அவருக்கு ஏற்படுமானால் அது அவருக்கு மிகப்பெரிய அளவில் ஆபத்தைக் கொண்டுவந்துவிடும். சாய்பாபா, தற்போது அவருக்குள்ள பல்வேறு நோய்களுக்காக, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறார். எனினும் அவருக்கு இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.  இத்தகைய சூழ்நிலைமைகளில், சாய்பாபா விருப்பத்திற்கிணங்க, அவர் சிகிச்சை பெறுவதற்கு வசதி செய்துதருவதற்காக, அவரை மத்திய அரசும், மகாராஷ்டிர மாநில அரசும் அவரை பிணையில் உடனடியாக விடுவிக்க வேண்டும் .இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். (ந.நி.)

;