tamilnadu

img

முகமது தாரீப் யூசுப் தாரிகாமியைக் கொணர உச்சநீதிமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி ஆட்கொணர்வு மனுதாக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமியை ஒப்படைத்திட வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சிதைத்து இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய நாளுக்கு முன்பிருந்தே, அம்மாநிலத்தினை ராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மத்திய அரசு கொண்டுவந்துவிட்டது. அம்மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருந்த அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் கைது செய்து பல்வேறு சிறைகளில் அடைத்து வைத்திருக்கிறது. அவர்களை எந்தச் சிறையில் வைத்திருக்கிறது என்றே தெரியவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி உடல் நலிவுற்றிருப்பதாகக் கேள்விப்பட்டு, அவருக்குத்  தேவையான மருந்துகளை வாங்கிக்கொண்டு, ஸ்ரீநகருக்குச் சென்றபோதும், காவல்துறையினர் விமானநிலையத்திலிருந்து வெளியே செல்வதற்குத் தடை ஏற்படுத்தி, பின்னர் திருப்பி அனுப்பிவிட்டனர்.

இந்நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி அரசமைப்புச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ், காஷ்மீர் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், நான்கு முறை ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான, முகமது யூசுப் தாரிகாமியைக் கொணர்ந்திடவேண்டும் என்று கோரி, ஆட்கொணர் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இதற்கிடையில் இன்றையதினம் (சனிக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள காஷ்மீர் மக்களைப் பார்ப்பதற்காக ஸ்ரீநகர் நோக்கி செல்கின்றனர்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, கே.எஸ். வேணுகோபால் (காங்கிரஸ்), சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), து. ராஜா (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), திருச்சி சிவா (திமுக),மனோஜ் ஜா (ராஷ்டரிய ஜனதா தளம்), தினேஷ் திரிவேதி (திரிணாமுல் காங்கிரஸ்), மஜீத் மேமன் (தேசியவாதக் காங்கிரஸ்), குபேந்திர ரெட்டி (மதச்சார்பற்ற ஜனதா தளம்) ஆகியோர் இவ்வாறு செல்கின்றனர்.

இது தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், “அம்மாநில ஆளுநர், மாநிலத்தில் இயல்புநிலை திரும்பியிருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் வந்து பார்க்கலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.  அதனையொட்டி அவரது அழைப்பிற்கு மதிப்பளித்து நாங்கள் இன்றையதினம் ஸ்ரீநகர் செல்கிறோம்” என்று கூறியுள்ளார்.  

இவ்வாறு ஆளுநர் கூறியிருந்தபோதிலும், ஜம்மு-காஷ்மீர் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகருக்குள் வரக்கூடாது என்று நேற்றிரவு ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அங்குள்ள மக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்று அது மேலும் கூறியிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் முன்னுக்குப்பின் முரணாக அறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

“ஜம்மு-காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது என்று அரசாங்கம் சொல்கிறது. பின் ஏன், தலைவர்களை மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்க மறுக்கிறீர்கள்? உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, பரூக் அப்துல்லா ஆகியோரை ஏன் வீட்டுக்காவலில் வைத்திருக்கிறீர்கள்? இயல்பு நிலை திரும்பிவிட்டது என்பது உண்மையானால் இவ்வாறு ஏன் அவர்களை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறிர்கள், எங்களைச் சந்திக்க விடாமல் ஏன் தடுக்கிறீர்கள்?” என்று குலாம் நபி ஆசாட் கேட்டார்.  

400க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் இன்னமும் வீட்டுக்காவலில் இருக்கின்றனர் எனத் தெரிகிறது. மாநிலத்தின் பல இடங்களில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.

(ந.நி.)

;