tamilnadu

img

தில்லியில் சீத்தாராம் யெச்சூரி கைது

புதுதில்லி, டிச. 19- குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும்,  தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுதும் விஸ்தரிப்பதற்கு எதிராகவும்,  அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்திருந்தன. அதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை புதுதில்லி, மண்டி ஹவுசிலிருந்து நாடாளுமன்ற வீதி (ஜந்தர்மந்தர்) நோக்கி பேரணி செல்ல இடதுசாரிக் கட்சிகள் திட்டமிட்டிருந்தன. எனினும் தில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பேரணிக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனால் பேரணிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஹன்னன்முல்லா முதலானவர்கள் மண்டி ஹவுஸ் பகுதியிலேயே கைது செய்யப்பட்டு, பேருந்தில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டனர்.  பேரணி கலந்து கொள்வதற்காக வந்த மக்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தில்லியில் ஊரடங்கு உத்தரவுபோன்ற நிலைமையைத் திணித்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். இது நாட்டின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும். இதன்மூலம் பாஜக அரசாங்கம் தன் உண்மை சொரூபத்தை காட்டியிருக்கிறது என்றார். பேரணிக்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, தில்லியின் 14 மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில் கதவுகளை தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் மூடிவிட்டது. வியாழக்கிழமை காலையிலேயே ஜமியா மிலியா, ஜூமா மசூதி, முனீர்கா மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில்களை மூடியது. பின்னர் பட்டேல் சவுக், லோக் கல்யாண் மார்க், உத்யோக் பவன், சென்ட்ர்ல் செக்ரடேரியர், ஐடிஓ, பிரகதி மைதான், கான் மார்க்கெட் மெட்ரோ நிலையங்களின் வாயில் கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிற்கவில்லை.

பாட்னா

பீகாரில் இடதுசாரி கட்சிகள் அறிவித்திருந்த பொதுவேலை நிறுத்தம் (பந்த்) பெரும் வெற்றி பெற்றது. பல்வேறு இடங்களில் ரயில் மறி யல், சாலை மறியல்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் அணி திரண்டனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்ட னர். சிபிஎம், சிபிஐ, சிபிஐஎம் (லிபரேசன்) ஆகிய இடதுசாரி கட்சிகள் தலைமையில் நடந்த பொதுவேலை நிறுத்தத்துக்கு ஆர்ஜேடி, பாஜக தவிர அனைத்து கட்சிகள் ஆதரவளித்தன.

உத்தரகாண்ட்

உத்தரகண்ட் மாநிலத்தில் இடதுசாரி கட்சிகள்   அறிவித்திருந்த  பொதுவேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் டேராடூன் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங் களில் ஈடுபட்டனர். கர்நாடகம், ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இத்தகைய போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.