tamilnadu

ரயில்வே தனியார்மயம்... 1ம்பக்கத் தொடர்ச்சி

உத்தரப்பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் வெள்ளியன்று  (அக்.4) அம்மாநிலத் தலைவர் லக்னோவில் இருந்து தில்லிக்குச் செல்லும் ஐஆர்சிடிசி-யின் முதலாவது தனியார்  தேஜஸ் விரைவு ரயிலைத் துவக்கி  வைக்க உள்ளார். 
விரைவில் மற்றொரு தனியார் ரயில் மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு விடப்படவுள்ளது. இதற்கான  தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த இரண்டு வண்டிகளும் 2வது மோடி அரசின் ‘100 நாள் ரயில்வே திட்டத்தின்’ முதல் தனியார் ரயில்கள் ஆகும். ஐஆர்சிடிசி மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக  இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

லக்னோவிலிருந்து  புதுடில்லி வரை செல்லக்கூடிய தேஜஸ் என்ற நாட்டின் முதலாவது  தனியார் ரயில்சேவையை உத்தரபிரதேச  முதல்வர் யோகி ஆதித்தியநாத் வெள்ளியன்று துவக்க உள்ளதை கருப்பு தினமாக அனுஷ்டிக்கும் வகையில் டிஆர்இயு சார்பில் சென்னை தெற்கு பொதுமேலாளர் அலுவலகம் முன்பு வியாழனன்று (அக். 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கோட்ட செயலாளர் கே.பாபு தலைமை தாங்கினார். இணைப்பொதுச்செயலாளர் ஏ.வெங்கட்ராமன், உதவித்தலைவர் ஆர்.இளங்கோவன், துணைப்பொதுச்செயலாளர் பேபி சகிலா ஆகியோர் பங்கேற்று பேசினர். 24 வழித்தடங்களில்  தனியார் ரயிலை இயக்கும் நாளான அக்டோபர் 4(இன்று) கருப்பு தினமாக டிஆர்இயு அனுசரிக்கிறது.

சென்னை - மதுரை
இரு முக்கிய நகரங்களுக்கு இடையே ஓடும் 14 ரயில்களையும் அதோடு இரவு நேரம் உட்பட நீண்ட  தூரம் இயக்கப்படும் 10 ரயில்களையும் சென்னை உள்பட 4 புறநகர் வழித் தடங்களையும் தனியாருக்குத் திறந்து விட கடந்த மாதம் 27ஆம் தேதி ரயில்வே  வாரியம் முடிவெடுத்தது. இதில் இரு நகரங்களை இணைக்கும் வழித் தடங்களில் சென்னை- கோயம்புத்தூர், சென்னை - மதுரை, சென்னை- பெங்களூரு அடங்கும். அதேபோல சென்னை-மும்பை,சென்னை- தில்லி,சென்னை- ஹவுரா ஆகிய நீண்ட தூர வழித் தடங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய புறநகர் ரயில் சேவையையும் தனியா ருக்குத் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
150 வண்டிகள் தனியார் மயம்
உடனடியாக 150 பயணிகள் வண்டி களைத் தனியார் மூலம் இயக்கப் போவதாக ரயில்வே வாரியத் தலைவர் எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அண்மையில் அளித்துள்ள பேட்டி யில் தெரிவித்துள்ளார். இந்த வண்டி களில் ஓட்டுநர் ,கார்டு, டிக்கெட் பரிசோத கர் அனைவரும் தனியார் ஊழியர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறி யுள்ளார். இப்படி 100 நாள் திட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களை மோடி அரசு அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.
பறிபோகும் சலுகைகள்
நாடுமுழுவதும் மொத்தம் 50 வழித்தடங்களைத் தனியார்மயமாக்க கடந்த மாதம் 27அன்று முடிவு செய்யப்பட்டது. இந்த ரயில்களில் சிசன் டிக்கெட், மூத்த குடிமக்களுக்கான சலுகை, நோயாளிகளுக்கான சலுகை ஆகிய எதுவும் இருக்காது. யோகி ஆதித்யநாத் துவக்கிவைக்கக்கூடிய தேஜஸ் ரயில் வண்டியிலேயே முதியோர் சலுகை யும் குழந்தைகளுக்கான அரை டிக்கெட்டும் வேறு எந்த சலுகையும் கிடையாது என்று ஏற்கனவே அறிவித்துவிட்டனர். இந்த ரயிலுக்கான கட்டணத்தை ஐ.ஆர்.சி.டி.சி தீர்மானித்துக் கொள்ளும். விரைவில் விடப்போகிற 150 தனியார் ரயில்களிலும் எந்த சலுகையும் இருக்காது. கட்ட ணத்தை தனியாரே தீர்மானித்துக் கொள்ள மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. இது முதல் படிதான். ஏற்கனவே மத்திய அமைச்சரவை முடிவின்படி தனியாருக்கு ரயில்வேயில் ‘சமவாய்ப்பு’ வழங்கவேண்டும். அதாவது பிரதான வழித்தடங்களும் பிரதான நேரங்களும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். இதன் மூலம் லாபம் வரக்கூடிய வழித்தடங்களும் முக்கியமான நேரங்களும் தனியாருக்குச் செல்லும் அபாயம் எழுந்துள்ளது.  படிப்படியாக இப்போது ரயில்வே இயக்கிக்கொண்டிருக்கும் வண்டிகள் தனியா ருக்குப் போகும். இதைத் தொடர்ந்து மத்திய  அமைச்சரவை முடிவின்படி சரக்கு வண்டி களும் தனியாரிடம் விடப்படும்.குறிப்பாக மும்பையிலிருந்து தில்லிக்கும் லூதியானாவில் இருந்து கொல்கத்தாவில் உள்ள டான்புனிக்கும் மேற்கு- கிழக்கு தனி சரக்கு பாதைகள் போடப் பட்டு வருகின்றன.

தனியார் சரக்கு ரயில்கள்
இந்த சரக்குப்பாதைகளை தனியார் நிர்மாணிக்க ரயில்வே எவ்வளவு வேண்டிக் கொண்டும் ஒரு தனியாரும் முன்வரவில்லை. ஆனால் இப்போது அந்த சரக்குப்பாதைகள் முடி வடையும் தருவாயில் உள்ளன. ரயில்வேயே முதலீடு செய்துவருகிறது. இந்த சரக்குப் பாதையில் தனியார் சரக்கு வண்டிகளை ஓட்டிக் கொள்ள அனுமதிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. எனவே அடுத்த 3 ஆண்டு களில் 50விழுக்காடு சரக்குவண்டிகளும் பயணி கள் வண்டிகளும் தனியார் வசம் போகும்.
விபத்துக்கள் அதிகரிக்கும்
ஏற்கனவே சென்னை பெரம்பூர் ஐசிஎப் உள்பட உற்பத்தி பிரிவுகளையும் 44 ரயில்வே  பணிமனைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக 100 நாள் திட்டத்தில் கூறப்பட்டுள் ளது. தனியார் ரயில் ஒட்டினால், லாபம் தான் அவர்களின் குறியாக இருக்கும். அப்படி இருக்கும் போது அவர்கள் பராமரிப்புக்கு செலவு செய்யமாட்டார்கள். இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும்.
மோசமான இங்கிலாந்து உதாரணம்
இங்கிலாந்து நாட்டில் ரயில்வே தனியார்மய மாக்கப்பட்ட பின்னர் பல ரயில்கள் விபத்துக்கு உள்ளாகின. அந்த நிலைதான் இந்திய ரயில்வேக்கு ஏற்படும் என்று தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) தலைவர்களில் ஒருவரான ஆர்.இளங்கோவன் எச்சரிக்கிறார். தனியார்மயமனால் இந்திய ரயில்வே வருமானம் பாதியாகக் குறையும். ஏர்  இந்தியா போல இந்திய ரயில்வேயும் சம்பளமும் ஓய்வூதியமும் கொடுக்க முடியாமல் தள்ளாடும் நிலை ஏற்படும்.
டி.ஆர்.இ.யு கண்டனம்
ரயில்வே ஊழியர்கள் ஒன்று, தனியார்மய மாக்கப்படுவார்கள்; அல்லது வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள். மோடி அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து  தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம்முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரு வாரம் தெற்கு ரயில்வே முழுவதும் கண்டன இயக்கங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வேயில் உள்ள ஏ.ஐ.ஆர்.எஃப் மற்றும் என்.எஃப்.ஐ.ஆர் சம்மேளனங்களும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகப் போராட முன்வரவேண்டும் என்று டிஆர்இயு அழைப்பு விடுத்துள்ளது.

;