tamilnadu

img

புரத ஆம்புலன்ஸும் டிஎன்ஏ ஆஸ்பத்திரியும் - ஈ.கோலை

தகவல் அறிவோம்

அன்றாடம் பலவித தாக்குதல்களுக்கு உட்படும் நம் உடல் உறுப்புகள் பல்வேறு ரணகளங்களைச் சந்திக்கவேண்டி இருக்கிறது. இதே நிலை உசுப்பிவிட்ட டி.என்.ஏக்களுக்கும் இருப்பதால் ஒவ்வொரு வினாடியிலும் அவைகள் காயமடைகின்றன. சில மூலக்கூறு கத்திகள் அவற்றை வெட்டி விளையாடுவதையே ஒரு தேர்ந்த ரவுடியின் பொழுதுபோக்கிற்கு சவால் விடும்படியாக இருக்கின்றன. 
விரலை அறுத்துக் கொண்டால் மருத்துவமனைக்குச் சென்று கட்டுப் போடுவதைப் போலவே ஒவ்வொரு செல்லிலும் (பேட்டரி செல்லோ, ஜெயில் அறையோ இல்லிங்க) மருத்துவர், செவிலியர் புரோட்டீன்களும் இருக்கின்றன. சில சமயங்களில் உலவும் போலி டாக்டர்களைப் போல சில புரதங்கள் வெட்டுப்பட்ட விரல்களில் கட்டைவிரல் எது?, சுண்டு விரல் எது? எனத் தெரியாமல் டி.என்.ஏ.வில் இருக்கும் நைட்ரஜன் காரங்களை இணைத்து ஒருவித திடீர் மாற்றத்தை உண்டாக்கிவிடுகின்றன. 

அவற்றை சரி செய்வதற்காக இருக்கிற அமைப்புதான் டி.என்.ஏ ரிப்பேர் என்கிற ஆஸ்பத்திரி. “ஒரு வேலை  டி.என்.ஏ.ல இருக்கிற இரண்டு இழையும்(strand) வெட்டுப்படும் பட்சத்தில் அவைகள் உட்கரு அப்டீங்கிற கிணத்துக்குள்ள ஜாலியா நீச்சல் அடிச்சிட்டு இருக்கும்” இவ்வாறு பல வருடங்களாக ஆராய்ச்சியாளர்கள் நினைத்துக் கொண்டிருக்க அவர்களின் நினைப்பில் பெரிய பாராங்கல்லே 2015ல் விழுந்தது. 

‘மிதக்கவில்லை, போக்குவரத்து மோட்டார் புரதங்கள்  அவற்றை சரியான இடத்திற்கு, குறித்த நேரத்தில்  கொண்டு செல்கின்றன’ என்கிற கல்லைத் தள்ளியவர் கரிம் மிட்கைல். இத்தகைய புரதங்களை ‘ஆட்டோபான்ஸ்’ என்றழைத்தார்கள். ஏறக்குறைய அவைகள் அம்புலன்ஸ்களைப் போன்றவைகள். 

சமீபத்தில் பிப்ரவரி 4ல் nature communications சஞ்சிகை வெளியிட்ட கட்டுரையில் கரிம் மிட்கைலைத் தலைமையாகக் கொண்ட ஆய்வாளர்கள் மேலுமொன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். உடைந்த மரபுப் பொருளும் ஊசி போடும் புரதங்களும் ஒரு துளியைப் போல ஒன்று சேர்ந்து அதாவது ஒரு பல்நோக்கு மருத்துவமனையைப் போலச் செயல்படுகின்றனவாம். இத்துளிகள் ஒரு சிலந்தியைப் போல நட்சத்திர வடிவில்  செயல்பட,  புரத இழைகள் பிஸ்டன்களைப் போல புரத அம்புலன்சை இயக்கும் என்ஜினாகச்  செயல்படுகின்றன. அறிவியல் வேகம் அனைத்தைவிடவும் நன்று. 

Reference: 
Nature communications and Science daily