tamilnadu

img

பிரதமரின் அறிவிப்புகள் போதுமானவை அல்ல: சிபிஎம்

புதுதில்லி:
பிரதமரின் அறிவிப்புகள், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு நிச்சயம் போதுமானவை அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமரின் அறிவிப்புகள், நாட்டில் கோடானு கோடி மக்கள் எதிர்கொண்டிருக்கும் இன்றைய நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கு நிச்சயம் போதுமானவை அல்ல.  ஐந்து கிலோ உணவு தானியங்கள் மற்றும் ஒரு கிலோ பருப்பு வகைகள் நிச்சயம் கடந்த மூன்றுமாதங்களாக வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்கள் தாங்கள் ஜீவித்திருப்பதற்கு நிச்சயம் போதுமானவையல்ல. ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்கள் என்கிற விதத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்சம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

குறைந்தபட்சம் 14 கோடிப் பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளார்கள். எட்டு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள், கடந்த இரண்டு மாதங்களாக வீதிகளில் இருப்பதாக அரசாங்கமே ஒப்புக்கொண்டிருக்கிறது. நாட்டு மக்களைக் காப்பாற்றிட, குறைந்தபட்சம், வருமானவரி வரம்புக்குள் வராத அனைத்துக் குடும்பத்தினருக்கும் ஆறு மாதங்களுக்கு மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம்  ரொக்கப்பணம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அனைத்து ஜன்தன் கணக்குகளுக்கும் 500 ரூபாய் என்று அறிவித்திருப்பது அற்பமாகும்.  இது மக்களின் வேதனைகளைக் கேலி செய்வதுபோல் இருக்கிறது.  

வீடு திரும்பியுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படும் என்று கூறியிருப்பதும் போலித்தனமானதாகும். கூடுதலாக ஒரு கோடி பேருக்கு ஆண்டுக்கு 100  நாட்களுக்கு வேலை அளிக்க வேண்டுமானால், அதற்கு 2.46 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு தேவை. ஆனால், பட்ஜெட் ஒதுக்கீடும், தற்போது சமூகமுடக்கக் காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் சேர்த்தே 1.5 லட்சம் கோடி ரூபாய்க்குக் கீழ்தான் வருகிறது. நாடு முழுதும் வேலையின்றி திண்டாடிக்கொண்டிருப்பவர்களுக்கு, அவர்களுக்கு ஆதாயம் அளிக்கக்கூடிய விதத்தில் வேலை கிடைக்கும்வரை, வேலையின்மைக்கான நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்.

பிரதமர் மோடி, 2,000 ரூபாய் நேரடி ரொக்க மாற்று மூலமாக ஒன்பது கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளதாகக் கூறியிருக்கிறார். பிரதமர் கிசான் யோஜனாவின் கீழ் 2019 பொதுத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் இது அறிவிக்கப்பட்டது. நாட்டிலுள்ள 14 கோடி விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளில் அளிக்கப்படும் என்று அந்த அறிவிப்பு கூறியிருந்தது. இந்த அறிவிப்பு என்பது, இந்தத் திட்டத்தில் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது தவணைக்கான ஒன்றேயாகும். இவ்வாறு முந்தைய அறிவிப்பே மறுபடியும் அறிவிக்கப்பட்டிருக்கிறதேயொழிய, புதிதாக கூடுதலாக நிவாரணம் எதுவும் இல்லை. மேலும், முன்பு கூறியதுபோன்று 14 கோடி பேருக்கு இது வழங்கப்படவில்லை. மாறாக இப்போது இது வெறும் ஒன்பது கோடி பேர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறாக ஐந்து கோடி விவசாயிகள் இந்த அற்ப நிவாரணத் தொகையை வாங்குவதிலிருந்தும்கூட தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி,  கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை இந்தியா வெற்றிகரமானமுறையில் முறியடித்துவிட்டதாகப் பீற்றிக்கொண்டிருக்கிறார். உலகில் மிகவும் குறைவானமுறையிலேயே மக்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கக்கூடிய இப்போதைய நிலையில்கூட, உலகில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்ததாக மூன்றாவது நாடாக அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வாழும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. மற்றும் இறப்போர் எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம், மத்திய அரசாங்கம் இப்போதாவது சுகாதார வசதிகளை, போர்க்கால அடிப்படையில், அதிகரித்திட முன்வர வேண்டும்.சுய பாதுகாப்பு உபகரணங்களை (ஞஞநுள) அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் அளித்திட வேண்டும். அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை அளித்திட வேண்டும்.

பிரதமரின் பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றால் கொரோனா வைரஸ் தொற்றை முறியடிக்கப்போகிறோம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வசூலிக்கப்பட்டிருப்பதை கீழ்க்கண்ட நிவாரணப்பணிகளுக்காக உடனடியாக விடுவித்திட வேண்டும். 

நிவாரண நடவடிக்கைகள்

 பொதுச் சுகாதார வசதிகளை அதிகப்படுத்துக!

 வருமானவரி வரம்புக்கு உட்படாத அனைத்துக் குடும்பத்தினருக்கும், ஆறு மாதங்களுக்கு, மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் ரொக்க மாற்று செய்திடுக!

 தேவைப்படும் அனைவருக்கும், அடுத்த ஆறு மாதங்களுக்கு, மாதத்திற்கு 10 கிலோ உணவு தான்யங்கள் அளித்திடுக!

;