tamilnadu

img

தில்லி வெறியாட்டம்... நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லி:
தில்லியில் நடத்தப்பட்டுள்ள பயங்கர வன்முறை வெறியாட்டம் தொடர்பாக நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியில் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தில்லியில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக சட்டம் . ஒழுங்கு பிரச்சனைக்குப் பொறுப்பு வகிக்கும் மத்திய அரசாங்கம் நடந்துகொள்ளும் விதம் எந்தவிதத்திலும் ஏற்கக் கூடியதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

குறிப்பாக மதவெறி வன்முறை வெறியாட்டங்களை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் குறித்தும் அரசியல் தலைமைக்குழு குறிப்பிட விரும்புகிறது. ஒவ்வொன்றும் காவல் துணை ஆணையர் பதவிக்குக் குறையாத அதிகாரிகளால் தலைமை தாங்கப்படுகிறது. இந்த புலனாய்வுக் குழுக்கள் ஷாஹீன் பாக், ஜேஎன்யு, ஜாமியா மிலியா வன்முறைகளின்போது அவற்றைக் கையாண்ட விதம் கேள்விக்குறியனவாகும். உண்மையில், இவர்களில் ஒரு குழுவைக் குறித்து ஏற்கனவே தேர்தல் ஆணையம் இடித்துரைத்திருக்கிறது.

வன்முறை பற்றி முன்கூட்டியே தெரிந்தும்தில்லி காவல்துறை அதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய விதத்தில் நடந்துகொண்டதா என்பதும் மிகவும் கேள்விக்குரியதாகும். இந்த வன்முறை வெறியாட்டங்களின் விளைவாக இதுவரை 38 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்திருக்கிறார்கள், ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரங்கள் தொலைந்துவிட்டன. இந்நிலையில் இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி கயவர்களின் அட்டூழியங்களை மூடிமறைப்பதற்கான ஒன்றேயாகும்.

அஜித் தோவலின் அலட்சியம்
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசும்போது, “நடந்தவை நடந்தவைதான்” என்கிற முறையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அறிக்கை அளித்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதே நிலைப்பாட்டைத்தான் தில்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட அணுகுமுறையும் வெளிப்படுத்தியது. மதவெறியைத் தூண்டும் விதத்தில் பொது மேடைகளில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து,உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு காவல்துறையினர் இறுமாப்புடன் பதிலளித்தனர்.இந்த சமயத்தில் தேவைப்படுவது வடகிழக்கு தில்லி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதும், அவர்களிடம் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைப் போக்குவதுமாகும் என்று அரசியல் தலைமைக்குழு கருதுகிறது. இதனைச்செய்வதற்குப் பதிலாக, வன்முறையை ஏவியவெறியர்களின் நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்காகவும், அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்கிற முறையில் அறிவித்திடவும் இப்போது அமைக்கப்பட்டிருக்கின்ற புலனாய்வுக் குழுக்கள் பயன்படுத்தப்படுமானால், இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவை இது மேலும் விரிவுபடுத்திடவே இட்டுச்செல்லும்.வன்முறை வெறியாட்டங்களின் போது தில்லி காவல்துறை நடந்துகொண்டுள்ள விதம்மிகவும் சந்தேகத்திற்குரிய ஒன்றாக இருப்பதால், இவற்றை விசாரித்திட பணியில் உள்ளஉச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளப்படுவதன் மூலம் விசாரணை ஒருதலைப்பட்சமின்றி நடைபெற்றது என்கிற நம்பிக்கையை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தும் என்பதால் இது அவசியமாகும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.    (ந.நி.)

;