tamilnadu

img

பகத்சிங் எப்படி கம்யூனிஸ்ட் ஆனார்? - என்.ராமகிருஷ்ணன்

இந்திய விடுதலைப் போராட்ட நாயகர்களில் ஒருவரான மாவீரன் பகத்சிங், தூக்குக் கயிற்றை முத்தமிட்டத் தருணத்தில் ஒரு கம்யூனிஸ்ட்டாக மிளிர்ந்தார். அவர் எப்படி மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டார் என்பது ஒரு சுவையான கதை. இதுவரையிலும் சொல்லப்படாத அந்தக்கதை,  இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின்  மகத்தான அத்தியாயங்களில் ஒன்று.

1928ஆம் ஆண்டில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, படிப்பை முடித்து வழக்கறிஞருக்கான எல்.எல்.பி. பட்டப்படிப்பை மாணவர் பூரண சந்திர ஜோஷி என்ற பி.சி.ஜோஷி படித்துக் கொண்டிருந்தார். மார்க்சிய லட்சியத்தில் ஆர்வம் கொண்டிருந்த அந்த இளம் மாணவர் அச்சமயத்தில் இந்தியாவிற்குள் கடத்தி வரப்பட்ட மார்க்சிய நூல் பலவற்றை தனது பெட்டிக்குள் வைத்திருப்பார். தன் சக மாணவர்களிடையே முற்போக்குச் சிந்தனையுள்ள, தேசபக்தியுள்ள மாணவர்களிடையே ஒவ்வொரு புத்தகமாக கொடுத்து படிக்க வைத்து அவர்களை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈர்த்துக் கொண்டிருந்தார்.  அச்சமயத்தில் ஒருநாள் அந்தப் பல்கலைக்கழக சக மாணவர் அஜய் குமார் கோஷ் ஒரு இளம் சீக்கிய வாலிபரை அழைத்து வந்து “ஜோஷி, நீ வைத்திருக்கும் புத்தகங்களை ஒவ்வொன்றாக இவருக்கு கொடு, படித்து விட்டு தந்துவிடுவார் என்று கூறினார்.” ஜோஷியும் சம்மதித்தார். அச்சமயத்தில் அஜய்குமார் கோஷிற்கு பயங்கரவாத புரட்சியின் மீது நம்பிக்கை உண்டு. எனவே அவர் அழைத்து வருபவர்களின் அல்லது அவருடன் பேசிக்கொண்டிருப்பவர்களின் பெயர்களை ஜோஷி கேட்க மாட்டார். இப்பொழுதும் இந்த சீக்கிய வாலிபர் யார்? என்று அஜய் கோஷிடம் கேட்கவில்லை. 

அஜய் கோஷ் சொன்னபடியே தன்னிடமுள்ள ஒவ்வொரு புத்தகத்தையும் அந்த சீக்கிய வாலிபரிடம் கொடுப்பார். அவரும் சில நாட்கள் கழித்து அதைக் கொண்டு வந்து திருப்பி தருவார். ஆனால் அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்களைக் குறித்து ஜோஷியிடம் அவர் விளக்கம் கேட்பார். இப்படியே பல வாரங்கள் சென்றன. பின்னர் அந்த வாலிபர் அடிக்கடி பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு இரவில் வந்து கலந்துரையாடுவார். ஜோஷி, மார்க்சியம் குறித்து தான் புரிந்து கொண்டதை அவருக்கு விளக்குவார். சில சமயங்களில் நள்ளிரவாகி விடும். அந்த இளைஞர் ஜோஷியுடன் மாணவர் விடுதி உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு அங்கே தங்கிவிடுவார். இது நாளாக நாளாக இந்த சந்திப்பு அதிகரித்தது. பல மாதங்களுக்கு பிறகு அந்த இளைஞர் வரவேயில்லை. ஜோஷியும் சிறிது காலம் அவரை எதிர்பார்த்தார். ஆனால் அவர் வரவில்லை.  1929ஆம் ஆண்டில் பி.சி.ஜோஷி மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு மீரட் சிறையில் அடைக்கப்பட்டார். சிறிது காலம் கழித்து காலைப் பத்திரிகை ஒன்றில் ஒரு செய்தியைப் படித்து ஜோஷி அதிர்ச்சியடைந்தார். அந்தச் செய்தியானது இந்திய நாடாளுமன்றத்தில் முந்தைய நாளில் மூன்று வாலிபர்கள் வெடிகுண்டை வீசி, அது வெடித்ததாகவும் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாகவும் கூறி அவர்கள் மூவரின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தது. அந்த மூவரில் ஒருவர் ஏற்கெனவே இவரைச் சந்தித்து பேசிய சீக்கிய வாலிபர்! அந்த படத்திற்குக் கீழே அவர் பெயர் பகத்சிங் என்று போட்டிருந்தது. அப்பொழுதுதான் ஜோஷிக்கு தன்னைச் சந்தித்து நீண்ட உரையாடல் நடத்திய வாலிபர் பகத்சிங்தான் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஏனென்றால் அவர் பகத்சிங் குறித்து ஏராளமாக கேள்விபட்டிருந்தார். ஆனால் அவரை ஒருமுறை கூட சந்தித்ததில்லை. அத்துடன் அவரை அறிமுகப்படுத்தும் பொழுது அஜய் குமார் கோஷூம் அவர் யார் என்று சொல்லவில்லை. அக்கால வழக்கப்படி ஜோஷியும் அவர் பெயரைக் கேட்கவில்லை. 

இப்பொழுது ஜோஷி சம்பந்தப்பட்ட மீரட் சதி வழக்கு துவங்கியது. அதே நேரத்தில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சிவவர்மா, அஜய் குமார் கோஷ் மற்றும் பல தோழர்கள் மீது லாகூர் நீதிமன்றத்தில் சதி வழக்கு துவங்கியது. ஜோஷி தவறாமல் அந்தச் செய்திகளைப் படித்து வந்தார். இறுதியில் லாகூர் நீதிமன்றம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. சிவவர்மா, டாக்டர் கயா பிரசாத், பண்டிட் கிஷோரிலால் போன்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அஜய் குமார் கோஷ் வயது குறைந்தவராக இருந்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். பகத்சிங்கும்,சுகதேவும், ராஜகுருவும் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். 

ஜோஷியை பகத்சிங் சந்தித்தபின் நடந்தது என்னவென்றால், அவர் தன் சக தோழர்களுக்கு குறிப்பாக ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு மார்க்சியத்தை குறித்து ஜோஷி கூறியதை மனதில் கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில்தான் புரட்சி நடக்கமுடியும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்களோ அந்த தனிநபர் பயங்கரவாதத்திலிருந்து விடுபடவில்லை. நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசுவது, கைதானால் தூக்கு மேடை ஏறுவது என்ற முடிவுக்குப் போய்விட்டனர். அதன் விளைவாகத்தான் அந்த மூவரும் வெடிகுண்டுவீசி கைதானது. சிறையில் பகத்சிங் கிடைத்த மார்க்சிய நூல்கள் அனைத்தையும் படித்தார். மார்க்சியம்தான் ஏற்ற லட்சியம் என்ற முடிவுக்கு வந்தார். நீதிமன்ற முடிவுப்படி அவர் மார்ச் 24ஆம் தேதிதான் தூக்கிலிடப்பட வேண்டும். ஆனால் ஆங்கிலேய அரசாங்கமோ அந்த நாளில் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் இருக்கும் என்று கருதி மார்ச் 23ஆம் தேதி நள்ளிரவில் தூக்கிலிட முடிவு செய்தது. அந்த நாளின் முன்னிரவில் சிறைக்காவலர்கள் வந்து பகத்சிங்கிடம் உங்களை “இப்பொழுது தூக்கிலிடப் போகிறோம், தயாராகுங்கள்” என்று கூறியபொழுது பகத்சிங் கேட்டிருக்கிறார். “நாளைதானே எங்களை தூக்கிலிட வேண்டும், ஏன் இன்றே தூக்கிலிடப் போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்” “நாளை பெரிய பிரச்சனையாகும்.ஆதலால் இப்பொழுதே அதைச் செய்யப் போகிறோம்” என்று கூறினார்கள். அச்சமயத்தில் அவர் படித்துக் கொண்டிருந்தது லெனினுடைய புத்தகங்களில் ஒன்று. அதை மூடி வைத்துவிட்டு அவர் தூக்கு மேடைக்குச் சென்றார். நள்ளிரவில் அவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். இரவோடு இரவாக ரவி ஆற்றங்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்கள் உடல்கள் எரிக்கப்பட்டன. 
 

இச்சம்பவம் நடந்து 41 ஆண்டுகளுக்கு பின்னால் 1969 ஆம் ஆண்டில் பி.சி.ஜோஷி தனது கடந்த கால இயக்க வரலாறை நினைவு கூரும் பொழுது பகத்சிங்கை தான் முதலில் சந்தித்தது, அவருடைய தியாகம், அவருடைய போர்க்குணம் ஆகியவற்றை குறித்து பின்வருமாறு எழுதினார்:

...நாளை தொடரும்

;