tamilnadu

img

உணவு, குடிநீரின்றி யாரும் சாகவில்லையாம்... ஏற்கனவே நோயிருந்ததால் உயிரிழந்தார்களாம்...

புதுதில்லி:
உணவு, குடிநீர் இல்லாமல் எந்தபுலம்பெயர் தொழிலாளியும் உயிரிழக்கவில்லை என்று உச்சநீதிமன்றத் தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனாவால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கில் சிக்கி எந்தபுலம்பெயர் தொழிலாளியும் உணவு,குடிநீர், மருந்துகளின்றி உயிரிழக்கவில்லை, அவர்களுக்கு ஏற்கெனவே இருந்த உடல்பாதிப்புகளால் உயிரிழந்தார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில்மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்தஊர் செல்ல முடியாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கி அவதியுற்றனர்.இந்தக் காட்சிகளையும், நடந்துசெல்லும் நிகழ்வுகளையும், சைக்கிளில் செல்லும் சம்பவங்களையும் நாளேடுகள், தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தும், படித்தும் உணர்ந்தஉச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து மே மாதம் 26-ஆம் தேதி வழக்காகப் பதிவு செய்தது.உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன்கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கைவிசாரித்து வருகின்றது. இந்த வழக்குவெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தொண்டு நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,  மகுவா மொய்த்ரா சார்பில் வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கில் உதவ மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகினர்.

ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு,குடிநீர் இல்லாமல் ரயில்களில் உயிரிழந்ததாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு தரப்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.அவர் வாதிடுகையில் “ஊரடங்குகாலத்தில் எந்த புலம்பெயர் தொழிலாளியும் உணவு, குடிநீர், மருந்துகள் இல்லாமல் உயிரிழக்கவில்லை. அவ்வாறு உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்துள்ளன.இப்போதுள்ள சூழலில் தனிமைப்படுத்துதற்கான புதிய விதிமுறைகள் எதையும் உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டாம், இப்போதுள்ள நடைமுறையே தொடரட்டும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் சொந்த ஊர் செல்லட்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அப்போது நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர்  “புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் சென்றவுடன் அந்த மாநிலஅரசு அவர்கள் எந்த மாநிலத்திலிருந்து வந்துள்ளார்கள். சொந்த மாநிலத்தில் எந்த மாதிரியான வேலை தேவை என்பதை அறிந்து ஒருபதிவேட்டை மாவட்டந் தோறும் உருவாக்கலாம்” எனத் தெரிவித்தனர்.“புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த விதமான வேலைவாய்ப்பு தேவை என்பதையும் கேட்டறிந்து அதை வழங்க வேண்டும். தேவையான நிவாரண உதவிகளையும் மாநில அரசுகள் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கைசெவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

;