புதுதில்லி, செப். 20-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் உள்ள மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் செப்டம்பர் 18, 19 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
இந்திய அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உரிமைகளின் மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள்
மோடி-2 அரசாங்கம், இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்ட உரிமைகளின் மீது பல முனைகளிலும் தாக்குதல்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்தைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், அதனைத் தொடர்ந்து அங்கே மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உத்தரவாதங்களின் மீதும் ஆழமான தாக்குதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. மாநிலத்தைத் தனிமைப்படுத்தி இருத்தல், மாநிலத்தின் அனைத்துத் தகவல் ஒளிபரப்புச் சாதனங்களுக்கும் தடை விதித்திருத்தல், பொதுப் போக்குவரத்து செயல்படாமை, பள்ளிகளும், கடைகளும் தொடர்ந்து மூடப்பட்டிருத்தல் ஆகிய அனைத்தும் அம்மாநில மக்களுக்கு, அதிலும் குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களுக்கு, சொல்லொண்ணா துன்பதுயரங்களை ஏற்படுத்தியிருப்பதோடு, அம்மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைத்திருக்கிறது. அரசாங்கத்தின் தரப்பில் இயல்பு வாழ்க்கை திரும்பியிருப்பதாகக் கூறப்பட்டபோதிலும், எதார்த்த வாழ்க்கை என்பது இதற்கு முற்றிலும் எதிரானதாகவே இருந்து வருகிறது. இதனை பல சர்வதேச மற்றும் நம் நாட்டின் குறிப்பிட்ட சில ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சர், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மீறி அறிக்கைகள் வெளியிடுவது தொடர்கிறது. ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற அவரின் கருத்து மிக விரிவான அளவில் எதிர்ப்பினை எதிர்கொண்டதைத் தொடர்ந்து அவ்வாறு கூறியதிலிருந்து அவரைப் பின்வாங்க வைத்திருக்கிறது. இப்போது அவர் ‘நாட்டில் பல கட்சி அமைப்புமுறை அவசியமா’ என்கிற கேள்வியை எழுப்பிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர், நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், மனித உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் ஆகிய அனைத்தின்மீதும் தாக்குதல்களை ஏற்படுத்திக்கொண்டிருப்பது தொடர்கிறது.
தேசியக் குடிமக்கள் பதிவேடு
நாட்டில் பல்வேறு பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், தங்கள் மாநிலங்களிலும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC-National Register of Citizens) கொண்டுவரவேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். தேசியக் குடிமக்கள் பதிவேடு என்பது, அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இது அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டுமே பொருந்தும் ஒன்றாகும். உச்சநீதிமன்றத்தின் கட்டளையின்கீழ் இது மேற்கொள்ளப்பட்டது. அஸ்ஸாமில் சுமார் 20 லட்சம் மக்கள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். உண்மையான இந்தியக் குடிமக்கள் எவரும் விடுபடக் கூடாது. இவ்வாறு விடுபட்டவர்களின் மேல்முறையீடுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, நீதித்துறையினரால் எவ்விதப் பாகுபாடுமின்றி தீர்ப்பளிக்கப்பட வேண்டும்.
இந்த அரசாங்கம் தேசிய மக்கள் பதிவேடு (NPR-National Population Register) தயாரிப்பைப் புதுப்பித்திருக்கிறது. ஓர் அரசிதழ் அறிவிக்கை, 2020 ஏப்ரலிலிருந்து செப்டம்பர் 30 முடிய, ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து கணக்கிடும் பணி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கிறது. தேசிய மக்கள் பதிவேடு என்பது குடியுரிமை சட்டம் மற்றும் விதிகளில் திருத்தங்களை ஏற்படுத்தி, 2003இல் வாஜ்பாய் அரசாங்கத்தின் காலத்தில் தொடங்கப்பட்டது. அரசாங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் இது தொடர்ந்தது. ஆனால், ஆதார் வந்தபின் அதன் அமலாக்கம் தொடங்கியபின்னர், தேசிய மக்கள் பதிவேடு திட்டம் என்பது இரட்டிப்பு வேலையாக மாறிவிட்டதால், அது கைவிடப்பட்டது. ஆனால் மிகவும் விசித்திரமானமுறையில் இப்போது மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் அடிப்படையில் அகில இந்திய தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான தயாரிப்புப் பணியாக இது செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதேபோன்று, தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் தங்கள் பெயர்களை இணையத்தின் மூலம் (on line) பதிவு செய்திட வேண்டும் என்று கேட்டிருப்பதன் மூலம், வாக்காளர் சரிபார்த்தல் செயல்முறையை (Elector Verification Process) அறிவித்திருக்கிறது. நாட்டின் கிராமப்புறங்கள் மற்றும் உட்புறப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது சாத்தியமே இல்லை. இதன் விளைவாக வாக்காளர்களில் பெரும்பகுதியினர் விடுவிக்கப்படுவதற்கே இது இட்டுச்செல்லும். ஏற்கனவே அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது தேர்தல் ஆணையம் இவ்வாறு மீளவும் ஒரு ‘வாக்காளர் சரிபார்த்தல் செயல்முறை’யை அறிவித்திருப்பது, ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை மனதில் கொண்டே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் குடியுரிமை திருத்தச் சட்டமுன்வடிவு (CAB-Citizenship Amendment Bill) அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதன்மூலம் அவர், நம் நாட்டிலேயே பிறந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் உண்மையான முஸ்லீம்களுக்கு குடியுரிமை மறுக்கப்படும் அதே சமயத்தில், தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத முஸ்லீம் அல்லாதவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் கொடுத்திருக்கிறார்.
இந்த நான்கு செயல்முறைகளையும் ஒருங்கே இணைத்துப்பார்க்கும்போது, நாட்டில் மக்களில் ஒருபகுதியினரைக் குறிவைத்துத் தாக்கி, மதவெறித்தீயைக் கூர்மைப்படுத்திட வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் நோக்கம் என்பது தெளிவாகப் புலனாகும். மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அடித்தளங்களையே மீறும் செயலாகும். ஏனெனில் அது, சாதி, மதம், இனம், ஆண்-பெண் வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் குடியுரிமைகளை மட்டுமல்ல, அடிப்படை உரிமைகளையும் வழங்குகிறது.
இவை அனைத்துமே தேவையில்லாத செயல்முறைகளுமாகும். ஏனெனில் இவை அனைத்துமே ஆதார் அட்டையிலும் இடம் பெற்று அது இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப் பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் நாட்டிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் அது ஒவ்வோராண்டும் முறையாக திருத்தப்பட்டுக்கொண்டுமிருக்கிறது. இவ்வாறாக இவை அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், அஸ்ஸாமிற்கும் அப்பால் தேசியக் குடிமக்கள் பதிவேடு விரிவாக்கப்படும் என்றும், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு புதிதாக எடுக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையமானது வாக்காளர் சரிபார்த்தல் செயல்முறையை மீளவும் இணையத்தின் மூலம் அளித்திட வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டமுன்வடிவு கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி அளித்திருப்பதெல்லாம், ஆர்எஸ்எஸ்-இன் மதவெறி வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மதவெறியைக் கூர்மைப்படுத்துவதற்கான முயற்சிகள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
ஆதார் அட்டைகள் மற்றும் தேர்தல் ஆணையம் அளித்துள்ள வாக்காளர் அட்டைகள் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்தப் புதிய செயல்முறைகள் அநாவசியமான இரட்டிப்பு வேலைகளேயாகும். இவற்றின் விளைவாக அரசாங்கத்தின் கஜானாவிலிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிவரும். இன்று நாடு பொருளாதார மந்தத்தால் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவை தேவையில்லை. இவை நிறுத்தப்பட வேண்டும்.
மான்ய விலையில் உணவு தான்யங்களை ஒதுக்குவதை அதிகரித்திடுக
2019 ஆகஸ்டு 19 தேதிய அரசாங்கத்தின் அறிக்கைகளின்படி, அரசாங்கத்தின் கிடங்குகளில் 713 லட்சம் டன் உணவு தான்யங்கள் இருப்பில் இருக்கின்றன. இது வழக்கமாக இருப்பதைவிட அதிகமாகும். அதேசமயத்தில் மக்களின் உண்மையான வருமானங்கள் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், மக்கள் மத்தியில் ஊட்டச்சத்துக் குறைவும் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. 2018 உலக பசி-பஞ்சம்-பட்டினி அட்டவணையின்படி (Global Hunger Index, 2018) உலகின் 119 நாடுகளின் வரிசையில் இந்தியா 103ஆவது நாடாக வந்திருக்கிறது. இதிலிருந்து நாட்டு மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்பது தெளிவாகும்.
இந்நிலையில், உணவு தான்ய ஒதுக்கீடு மான்ய விலைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 35 கிலோ கிராம் வழங்கப்படும் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துக
உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளால் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்கள் வனங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படலாம் என்கிற அச்சுறுத்தல் என்னும் கத்தி அவர்களின் தலைகளுக்குக் கீழ் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகையில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், அவர்கள் தரப்பில் வாதிடவும், அரசுத்தரப்பில் மூத்த வழக்குரைஞர் எவரையும் அரசாங்கம் நியமித்திடவில்லை.
எவ்விதத்திலும் நீர்த்துப்போகச் செய்திடாது, வன உரிமைகள் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
குண்டர் கும்பல்களைப் பாதுகாத்திடும் பாஜக
சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அப்பாவி தலித்துகள் மற்றும் முஸ்லீம்களைக் கொலை செய்திடும் குண்டர் கும்பல்களைப் பாதுகாப்பதற்கு, இந்த அரசாங்கமும் அதன் அமைப்புகளும் துணை போய்க்கொண்டிருக்கின்றன. கூட்டு வன்புணர்வுக் குற்றங்கள் உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்ட கயவர்களையும் கூட இவர்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர். தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களைப் போலவே பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. 2016க்குப்பின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தரவு எதையும் அரசாங்கம் வெளியிட முன்வரவில்லை.
குற்றஞ் சாட்டப்பட்ட குண்டர்கள், சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது. இத்தகைய கிரிமினல்களுக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதை மோடி அரசாங்கம் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
மக்கள்மீது ஏற்றப்படும் பொருளாதாரச் சுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள பொருளாதார மந்தம், மிகப் பெரிய அளவில் வேலைகள் இழப்பு, லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளமை, தொடரும் விவசாய நெருக்கடி – இவை அனைத்தும் மக்களின் மீது மிகப்பெரிய அளவில் துன்ப துயரங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
எதிர்ப்பு இயக்கங்களையும், நிவாரணத்திற்கான கோரிக்கைகளையும் வடிவமைத்திட இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் செப்டம்பர் 20 அன்று புதுதில்லியில் அகில இந்திய சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இதில் பங்கேற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்), புரட்சி சோசலிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் கூட்டு அறிக்கை வெளியிடும்.
கொல்கத்தா பிளீனத்தின் முடிவுகள் அமலாக்கம் மறுபரிசீலனை
மத்தியக்குழுவால் தீர்மானித்தபடி, 2015 டிசம்பரில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஸ்தாபனப் பிளீனத்தின் முடிவுகள் மீது, அரசியல் தலைமைக்குழு, அனைத்து மாநிலங்களாலும் அனுப்பப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை விவாதித்திருக்கிறது. இந்த விவாதங்களின் அடிப்படையில், அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கையைத் தயார் செய்யும். அது, 2019 அக்டோபர் 2 – 4 தேதிகளில் புதுதில்லியில் நடைபெறும் மத்தியக்குழுக் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்.
(தமிழில்: ச.வீரமணி)