tamilnadu

img

மகேந்திர தேவ் குழு அறிக்கையை நிராகரித்து ஏழைகளுக்குத் துரோகம் நூறுநாள் வேலை முடங்க மோடி அரசே காரணம்! காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஏழை விவசாயிகள் பற்றி போலிக்கண்ணீர் வடிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, வேலையுறுதித் திட்டத்திற்கான நிதியைக் குறைத்தது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில், இடதுசாரிக் கட்சிகளின் தலையீட்டின் பேரில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் ‘நூறு நாள் வேலைத்திட்டம்’ எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டமாகும். கிராமப்புற வறுமை ஒழிப்பு நடவடிக்கையாக இது கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு, கிராமங்களில் காடு வளர்ப்பு, மரம் நடுதல், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள், நீர்ப்பாசன வாய்க்கால்களைத் தூர்வாருதல், கிராமச் சாலைகள் அமைத்தல் ஆகிய பணிகள் வழங்கப்பட்டன. இதற்கு கூலியாக முதலில் 133 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டு இருந்தது. பின்னர் அது 214 ரூபாய் என்று மாற்றப்பட்டது.

அதாவது, கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு நூறு நாட்களுக் காவது வேலை கிடைப்பதை உத்தரவாதம் செய்வதும், பட்டினிச் சாவுகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்து

வதும்தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். ஆரம்பத்தில் இத்திட்டம் ஓரளவுக்கு நன்றாகவே செயல்படுத்தப்பட்டு வந்தது. மாநில அரசுகளும் இதில் ஆர்வம் காட்டின. மத்திய அரசும் குறிப்பிடத்தக்க அளவு நிதியை ஒதுக்கியது. ஆனால், மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, திட்டத்தைச் சீர்குலைக்கும் வேலைகளில் இறங்கியது. குறிப்பாக நிதியை கடுமையாக வெட்டிச் சுருக்கியது. தற்போது நூறுநாள் வேலைத்திட் டம் முடக்கம் கண்டுள்ளது.


இடதுசாரிக் கட்சிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் போராட்டம் நடத்தியும் இப்பிரச்சனையை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், தேர்தல் தோல்வியைத் தவிர்ப்பதற்காக, விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்குவதாக ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மோடியின் சூட்சமத்தை உணர்ந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 6 ஆயிரம் அல்ல; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்குவோம் என்று அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரதமர் மோடி, ராகுல் அறிவிப்பு ஏமாற்று என்று கூறி வருகிறார். இதற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரசை குற்றம் சொல்லும் பிரதமர் மோடி, நூறுநாள் வேலைத்திட்டத் திற்கு நிதி ஒதுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர் பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத் தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய கூலித் தொகைக்கான நிதியை மோடி அரசு ஒழுங்காக விடுவிப்பது இல்லை. 2019-20 நிதியாண்டில் இந்த திட்டத்தின் கீழான கூலியை மிகவும் குறைந்த அளவாக 2.16 சதவிகிதம் என்றே நிர்ணயித்து இருக்கின்றனர். இதனால் நடப்பு நிதியாண்டில் நூறுநாள் வேலைத் திட்டத் தின்கீழ் பணியாற்றுகிறவர்கள் 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கூலி உயர்வை எதிர்பார்க்க முடியாது என்றாகி இருக்கிறது. 


கர்நாடகம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உயர்த்தப் பட்ட கூலிக்கான நிதி இன்னும் விடுவிக்கப்படவே இல்லை. 15 மாநிலங்களில் இந்த திட்டத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு தினமும் ரூ. 1 முதல் ரூ. 5 வரை மட்டுமே கூலி உயர்த்தப்படும் நிலை உள்ளது. விவசாயக் கூலித்தொழிலாளர் களின் குறைந்தபட்ச கூலிக்கு நிகராக, நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர் களுக்கும் கூலி வழங்க வேண்டும் என்று மகேந்திர தேவ் குழு பரிந்துரை செய்தது. ஆனால், அதை மோடி அரசு நிராகரித்து விட்டது. கூடுதல் செயலாளர் நாகேஷ் சிங் தலைமையில் மோடி அரசு 2-வது குழுவை அமைத்தது. அந்தக்குழு விவசாயகூலித்தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலிக்கு நிகராக, நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு கூலி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை என்றாலும், நுகர்வோர் பாதுகாப்பு விலை (கிராமப்புறம்) அடிப்படையில் ஆண்டுதோறும் கூலி உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், பிரதமர் மோடி எதையும் செயல்படுத்தாமல், ஏழைத் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல ரூ. 6 ஆயிரத்தை காட்டி ஏமாற்றுகிறார். உண்மையிலேயே ஏழைகள் மீதான அக்கறையுடன் ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்கும் காங்கிரஸ் வாக்குறுதியையும் கேலி செய்கிறார். இவ்வாறு பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.

;