tamilnadu

img

மக்களவை தேர்தல் – 4302 பெய்டு நியூஸ் வழக்குகள் பி.ஆர்.நடராஜன் எம்பி கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி:
பணம் செலுத்தி செய்திகள் வெளியிடும் ‘பெய்ட் நியூஸ்’ சம்பந்தமாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மக்களவையில் எழுப்பிய கேள்விகளுக்கு, அதற்கு மத்திய தகவல் மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்விகள், இந்தியாவில் பணம் கொடுத்து செய்திகள் வெளியிடச் செய்யும் ‘பெய்ட் நியூஸ்’  முறை ஊடக உலகில் தோன்றி நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு தெரியுமா? அப்படியெனில், இது பற்றி அரசாங்கத்தின் எதிர்வினை என்ன. இது சம்பந்தமாக அரசின் கவனத்திற்கு புகார்கள் ஏதேனும் வந்திருக்கிறதா. அதன் எண்ணிக்கை மற்றும் இந்தப் புகாரில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்கள் தெரியப்படுத்த வேண்டும். இந்திய ஊடகங்களில், இது போன்ற பிரச்சனைகளை தடை செய்ய அரசு எடுத்த/ எடுக்க இருக்கின்ற நடவடிக்கைகள் என்னென்ன. இவ்வாறு பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பினார். 

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பதிலில், பெய்ட் நியூஸ் புகார்கள் உட்பட, எந்த ஒரு புகாரையும் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் இந்திய பத்திரிக்கை கவுன்சிலிடம் உள்ளது. விசாரணைக்கான நடைமுறை ஒழுங்குமுறைகள்  1979ன் படி  இந்தப் புகார்கள் கையாளப்படுகின்றன. இந்த ஒழுங்குமுறை, ஒரு செய்தித்தாள், செய்தி நிறுவனம், ஆசிரியர், பத்திரிக்கையாளர் யாரையும் இந்த புகார் தொடர்பாக எச்சரிக்கவும், அல்லது  அச்சமூட்டி எச்சரிக்கவும், வழி செய்கிறது.  இந்திய தேர்தல் ஆணையம், மாவட்ட, மாநில, தேசிய நிலைகளில் , இத்தகைய பெய்ட் நியூஸ் சம்மந்தமான புகார்களை பெறுவதற்காக நன்கு கட்டமைக்கப்பட்ட நெறிமுறையைக் கொண்டுள்ளது. இதன்மூலம், தேவையான தீர்வு நடவடிக்கைகளை எடுக்கிறது. இந்த நிகழ்வுகளில் செலவிடப்பட்ட தொகையானது, பெய்ட் நியூஸ் வழக்கு உறுதிசெய்யப்பட்ட  செலவினை செய்யத வேட்பாளரின் செலவில் சேர்க்கப்படும். 2017 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான பெய்ட் நியூஸ் நிகழ்வுகள் தங்கள் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் சம்பந்தமாக வந்த பெய்ட் நியூஸ் வழக்குகளின் எண்ணிக்கை 799. மக்களவை 2019 தேர்தல்கள் சம்பந்தமாக வந்த பெய்டு நியூஸ் வழக்குகளின் எண்ணிக்கை 4302 என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

;