tamilnadu

img

எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையை மூடவேண்டும்....

விசாகப்பட்டினம் அருகில் செயல்பட்ட வந்த பன்னாட்டு எல்ஜி பாலிமெர் கம்பெனி விபத்து குறித்து  அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கக் கூட்டமைப்பிற்காக பொதுச் செயலாளர் பேரா. பி. இராஜமாணிக்கம்  விடுத்துள்ள அறிக்கை:
விசாகப்பட்டினம் அருகில் செயல்பட்டு வந்த எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் மே 7ஆம்தேதி அதிகாலையில் ஸ்டைரீன் எனும் ரசாயனம் ஆவியாகி காற்றில் கலந்து பெரும் விபத்தை உருவாக்கியது. இந்தக் கம்பெனி ஸ்டைரீனிலிருந்து பிளாஸ்டிக்ஸ், பாலிஸ்டீரீன் போன்ற பொருட்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலை ஆகும். இந்தக் கம்பெனி தயாரிப்பு, சேமித்து வைத்தல்,  இறக்குமதி செய்தல் ஆகியவற்றை உள்ளடங்கிய தீங்கு விளைவிக்கும்  ரசாயனச் சட்டம் 1989ன் கீழும் ரசாயன விபத்துச்சட்டம் 1996ன் கீழும் ஒப்புதல் பெற்ற கம்பெனி ஆகும்.  மார்ச் 25 தேசிய ஊரடங்கின் போது மூடப்பட்டு மே 7ல் அதிகாலையில் மீண்டும் செயல்பாட்டிற்காகத் திறக்கப்பட்ட போது இந்த விபத்து நடந்துள்ளது .

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்லை
இத்தொழிற்சாலையில்  பல ஆயிரம் டன் கணக்கில் ஸ்டைரீன் திரவ வடிவில் கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திரவப் பொருள். 22 டிகிரி செல்ஷியசில் சேமித்து வைக்கப்பட வேண்டும். ஆனால் வெப்பத்தைத் தக்க வைக்கும் சாதனம் தவறிழைத்திருக்க வேண்டும். ஸ்டைரீனை பாலிமராகாமல் தடுக்கும் டெட்ரா பியூட்டைல் கேட்டகால் என்ற ராயனம் இந்த கொள்கலனில் சேர்க்கப்படவில்லை எனத் தெரிகிறது. உரிய அளவில் இந்த ராயனமும் தொழிற்சாலையில் வைத்திருக்கப்படவில்லை. இவ்விரண்டும் இது போன்ற தொழிற்சாலைகளில் கட்டாயம் வைத்திருக்கப்பட வேண்டும். இது தவிர உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ விபத்து உணர் கருவிகளோ பராமரிப்புப் பணிகளோ கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் தொழிற்சாலை நீண்ட நாட்களுக்குப் பின் திறக்கப்படும் பொழுது செய்யப்படும் பாதுகாப்பு ஆய்வுகள், பாதுகாப்பு செயல்பாடுகள், சோதனை ஓட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.

ஊரடங்கும் கம்பெனியும்
அவசரகதியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இந்த பிரச்சனைக்கு ஒரு காரணமாய் இருந்திருக்கிறது. இந்த எல்.ஜி தொழிற்சாலை விபத்துக்குப் பின் தற்போது மத்திய அரசு  தொழிற்சாலைகளுக்கு வெளியிட்டுள்ள  வழி காட்டுதல் நெறிமுறைகளில் இருந்து தெரிய வருகிறது. அதே போல் தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகளும் வழிகாட்டுதலும் காணப்படவில்லை. மொத்தத்தில் எல்ஜி பாலிமர்ஸ் கம்பெனியின் ஒட்டுமொத்த அக்கறையின்மையும் பல குறைபாடுகளுமே இந்த மிகப்பெரிய விபத்திற்குக் காரணம் ஆகும்.மே 7 அன்று ஸ்டைரீன் சேமிக்கப்பட்டிருந்த கொள்கலனில் வெப்பம் உயர்ந்து ஸ்டைரீன் திரவம் படியாக்கம் செல்லும் நிலையில் வெப்ப உமிழ் நிலையின் காரணமாக  வெப்பம் அதிகரித்து ஆவியாதல் நிலைக்குச் செல்ல பாதுகாப்பு வால்வு பிய்த்துக் கொண்டு செல்ல ஸ்டைரீன் ஆவி காற்றில் கலந்தது. இது வாயுவின் கசிவை தடுத்து நிறுத்தும் வரை ஆவியாகி காற்றில் கலந்து கொண்டே இருந்தது.
 ஸ்டைரீன் ஆவி காற்று அடிக்கும் திசை வழியில் மூன்று கி.மீ பயணித்துள்ளது. தொழிற்சாலைக்கருகில் 1100 பிபிஎம், ஒரு கிமீ அளவில் 130பிபிஎம் 2-3 கிமீ அளவில் 20 பிபிஎம் காற்றில் நிரம்பியிருக்கிறது என மாடலின் முறைகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக 13 நபர்கள் உடனடியாகவும் 1000 நபர்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதன் உடனடி பாதிப்புகளும் நீண்ட காலப் பாதிப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் பொழுதே தெரிய வரும். விலங்குகள், தாவரங்கள், நீர் நிலைகள், மண் ஆகிய அனைத்திலும் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன எனத் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.

சுற்றுச்சுழல் அனுமதியின்றி...
இதில் மிகவும் அதிர்ச்சிதரக் கூடிய சம்பவம் என்னவெனில்  சுற்றுச்சூழல் தாக்க அளவிட்டுச்சட்டப்படி 2004 முதல் 2017 வரையிலான காலக் கட்டத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசின் சுற்றுச் சூழல்  காடுகள் பருவ நிலைமாற்றத் துறையிடம் இருந்தோ மாநில அரசின் சூழல் தாக்க அளவிடும் ஆணையத்திடமிருந்தோ பெறவில்லை என்பது தான். மேலும் 2018ல் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும் சுற்றுச் சூழல் அனுமதி கேட்டிருக்கிறது. ஆனால் ஆந்திர மாநில அரசு ஏற்கனவே அனுமதி இல்லாத காரணத்தால் இந்த புதிய அனுமதிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்றதாகக் கூறியது. எனவே இந்த தொழிற்சாலை வரன்முறைகள் மீறிய  தகுதியில் வருவதால் மத்திய அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையறிந்த எல்ஜி தனதுவிரிவாக்கப் பரிந்துரையைக் கைவிட்டதாக அறிவித்ததால் மத்திய அமைச்சகம் இக் கம்பெனியின் வேண்டுகோளை தனது வெப் சைட்டில் இருந்து கம்பெனியின் விருப்பமின்மையைக் காரணம் காட்டி நீக்கியது. இருப்பினும் சுற்றுச் சூழல் அனுமதி பெறாமலேயே மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு தொழிற்சாலையை இயக்கி வந்திருக்கிறது.

சட்டத்துக்குப் புறம்பாக
ஆனால் மத்திய அமைச்சகத்திடம் இருந்தோ மாநில சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கைக் குழுவிடம் இருந்தோ 2006 சட்டப்படி அனுமதி பெறாமல்சட்டத்திற்குப் புறம்பாக இயங்கி வந்துள்ளது. தற்போது மத்திய அரசு கொண்டு வரவுள்ள 2020 சுற்றுச் சூழல் தாக்க அறிவிக்கை இது போன்ற சட்ட வரம்புகள் மீறிய தொழிற்சாலைகள் அனைத்தையும் ஏதேனும் ஒரு வகையில் வரன்முறைப்படுத்தும் வகையில் மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது. எல்ஜி கம்பெனி விபத்து சட்ட வரம்புகளை மீறியதால் வந்த விளைவுகளே இந்த விபத்து என்பதைப் புரிந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வரும் 2020- சுற்றுச் சூழல் தாக்க வரையறைச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து அதை விலக்கிக் கொள்ளும் அளவிற்கு நாம் போராட வேண்டியுள்ளது என தில்லி அறிவியல் இயக்கத்தின் டாக்டர் ரகுநந்தன் குறிப்பிடுகிறார்.  எனவே மத்திய, மாநில அரசுகள்,  அதன் துறைகள் அமைப்புகள் தலையீடில்லாத  பாகுபாடற்ற,விரிவான, சுதந்திரமான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உருவாக்கும் ஒரு வல்லுநர் குழு விசாரணை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;