tamilnadu

img

கொரோனா தடுப்புக்கு குறைவான நிதி ஒதுக்கீடு... தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு

புதுதில்லி;
கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 15-வது நிதிக்குழுபரிந்துரையின்படி தமிழகத்திற்கு 6-வது தவணையாக 335.41 கோடி நிதியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. தேசிய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும் குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முதன்முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக ரூ.3,000 கோடி, கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக ரூ.9000 கோடி சிறப்பு நிதி, மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க ரூ.4,000 கோடி என மொத்தம் 16,000 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் எடப்பாடிபழனிசாமி ஏற்கெனவே கோரிக்கைவிடுத்திருந்தார்.  கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு உடனடியாக 3000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 10 மாநில முதல்வர்களுடன்  பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து, இக்கோரிக்கையை முன்வைத்தார்.தமிழகத்தில் தினமும் சராசரியாக 65 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இதற்கு ஒவ்வொரு நாளும் 5 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த தொகையில் 50 சதவீதத்தை பிரதமர் கேர்ஸ்நிதியிலிருந்து மத்திய அரசு வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் மத்திய பாஜக அரசு, தமிழக அரசின் கோரிக்கைக்கு எந்தவித மதிப்பும் அளிக்காமல் வெறும் 335.41 கோடி ரூபாயை  ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி அரசின் செயலுக்கு  அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப் பட்டிருக்கும் தமிழகம், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நிதி அமைச்சகம் ரூ. 6,195 கோடியை ஒதுக்கீடுசெய்துள்ளது. கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. பஞ்சாப்புக்கு ரூ.638.25கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.417.75 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மேகாலயாவிற்கு ரூ.40.91கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.கொரோனா நெருக்கடியில் உள்ள மாநில அரசுகளுக்கு உதவும் வகையில், 15வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.

;