tamilnadu

img

ஜாதவ்பூர் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் நகலை கிழிந்து எறிந்து மாணவி ஆவேசம்

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு

கொல்கத்தா, டிச.25-  மத்திய பாஜக அரசுகொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து  கொல்கத்தா வில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் மாணவி ஒருவர் சட்ட  நகலை கிழிந்து எறிந்து, இன்குலாப் ஜிந்தாபாத் என முழக்கமிட்டார்.  மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை திரும்பப்பெறக்கோரியும் நாடு முழு வதும் எதிர்க்கட்சியினர், மாணவர்கள் , பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.   புதுச்சேரியில்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவு சட்டத்தை எதிர்த்து அருண்குமார், கார்த்திகா, ரபீஹா போன்ற மாணவர்கள் தங்கப் பதக்கத்தை பெற மறுத்தார். 

இதேபோல் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள  ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த ஆளுநர் ஜகதீஷ் தன்கருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், ஆளுநர் திரும்பிச் சென்றார். இதனையடுத்து துணைவேந்தர் சுரஞ்சன் தாஸ் தலைமையில் பட்ட மளிப்பு விழா நடைபெற்றது. அப்போது சர்வதேச உறவுகள் துறையில் எம்.ஏ. பட்டமும், தங்கப்பதக்கமும் பெற்ற  மாணவி டெபோஸ்மிதா சவுத்ரி, தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை எதிர்ப்பதாக மேடையில் நின்றவாறு தெரிவித்தார். தன்னுடைய ஆவணங்கள் எதையும் காட்ட முடியாது என மாணவர்களை பார்த்து முழங்கிய அவர், தனது கையில் வைத்திருந்த குடியுரிமை சட்டத்திருத்த நகலை கிழித்து எறிந்து, இன்குலாப் ஜிந்தாபாத் என முழக்கமிட்டார்.

இது குறித்து மாணவி கூறுகை யில், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் எனக்கு  எந்த அவமரியாதையும் நடக்க வில்லை. எனக்கு பிடித்த நிறுவனத்தில் இந்த பட்டம் வழங்கப்பட்டதில் பெரு மைப்படுகிறேன். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான எனது ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்ய நான் இந்த மேடையைத் தேர்ந்தெடுத்தேன். எனது நண்பர்கள்  விழா அரங்கின் வாயில் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.   குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து அவரது நண்பர்கள் சிலர் துணைவேந்தரிடமிருந்து பட்டம் பெற மறுத்து விட்டதாக  மாணவி டெபோஸ்மிதா சவுத்ரி கூறினார்.  குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு  எதிராக   ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

;