tamilnadu

img

ஆயுத தளவாட இறக்குமதியில் உலகில் 2-ஆம் இடத்தில் இந்தியா... ‘சிப்ரி’ நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

புதுதில்லி:
உலகில், ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நாடுகள் பட்டியலில், கடந்த 5 ஆண்டுகளில் சவூதி அரேபியா முதலிடத்தையும், இந்தியா இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளன.சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ள ‘சிப்ரி’ எனப்படும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace ResearchInstitute -SIPRI)  நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்தியாவின் எதிரி நாடாக காட்டப்படும் பாகிஸ்தான் ஆயுத இறக்குமதியில் 11-ஆவது இடத்தையே பெற்றுள்ளது.கடந்த 5 ஆண்டுகளில், உலகளவில் நடைபெற்ற ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் சவூதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய 5 நாடுகள் மட்டும் 36 சதவிகித ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளன.

2010-14  காலகட்டத்தில் 5.6 சதவிகிதமாக இருந்த சவூதி அரேபியாவின் ஆயுத இறக்குமதி,2015-19 காலகட்டத்தில் 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஐந்தாண்டுகளைக் காட்டிலும், 130 சதவிகித உயர்வாகும்.இதேபோல, 2010-14க்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் ஆயுத இறக்குமதி 14 சதவிகிதமாக இருந்தது. 2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இது 9.2 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதாவது, முந்தைய 5 ஆண்டுகளைக் காட்டிலும் இது 32 சதவிகித குறைவுஎன்றாலும், உலகளவில் இந்தியா இரண்டாமிடத்தை பெற்றுள்ளது. ராணுவத்தை வலுப்படுத்தும் வகையில், ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பீரங்கித் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை, சமீபகாலமாக இந்தியா அதிகளவில்கொள்முதல் செய்து வருவதே இதற்குக் காரணமாகும். இந்தியாவிற்கான மிகப்பெரிய ஆயுதவிநியோகிப்பாளராக ரஷ்யா தொடர்கிறது.ஆயுத ஏற்றுமதி குறித்த பட்டியலில், இந்தியா உலகளவில் 23-ஆவது இடத்தில் உள்ளது. மியான்மர், இலங்கை மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

;