tamilnadu

img

இருந்தது இங்கிலாந்தில்... சிந்தித்தது இந்தியா பற்றி! - ப.முருகன்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு மட்டுமல்லாது உலக கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்த இங்கிலாந்து கம்யூனிஸ்ட் தலைவர் ரஜினிபாமிதத். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு உதவி செய்த இங்கிலாந்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெஞ்சமின் பிராட்லி, பிலிப் ஸ்பிராட். ஆனால் இந்தியாவில் பிறந்த சக்லத்வாலா இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு உதவியதோடு இங்கிலாந்தின் தொழிலாளி வர்க்கத்துக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் பாடுபட்டு அங்கேயே காலமானார். ஆனால் இங்கிலாந்தில் பிறந்த இந்தியரான ரஜினி பாமிதத் (1896) இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் கம்யூனிஸ்ட் அகிலத்துக்காகவும் பணியாற்றியதோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்கவும் மார்க்சிய வழிப்படுத்தவும் பேருதவி புரிந்த பெருந்தகையாவார்.

சக்லத்வாலா இந்தியாவுக்கு மூன்று முறை வருகை புரிந்தார். தத் அவர்களோ ஒரே ஒரு முறை மட்டுமே வருகை தந்தார். ஆனால் அவரது நூல்களும் கருத்துக்களும் நேரடி ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகவும் உதவிகரமாக அமைந்திருந்தன. ரஜினி பாமிதத் எல்லோராலும் ஆர்.பி.தத் என்றே தோழமையுடன் அழைக்கப்பட்டார். அவரது தந்தை டாக்டர் உபேந்திரா தத், தாயார் சுவீடன் நாட்டைச் சேர்ந்த அன்னா பால்மே. இவரது தந்தையாரின் வீடு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய விருந்தினர்களுக்காக எப்போதும் திறந்திருந்தது. அதனால் இயல்பாகவே தத்துக்கும் இந்திய சுதந்திரத்தின் மீது நாட்டம் அதிகரித்தது. அவர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே முதல் உலகப் போரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனாலும் கல்வியில் சிறந்து விளங்கினார். அதனால் கூர்த்த மதியும் ஆழ்ந்த அறிவும் கொண்டிருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே (1914) இஸ்டிபெண்டண்ட் லேபர் பார்ட்டியில் இணைந்து செயல்பட்டார். இடதுசாரி புள்ளியியல் நிலையமான தொழிலாளர் ஆய்வு துறையில் 1919ல் சேர்ந்தார். பின்னர் 1921ல் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அது முதல் தனது வாழ்நாள் இறுதிவரை கம்யூனிஸ்ட் லட்சியத்துக்காக அரும்பாடுபட்டார்.

அதே 1921ல் தொடங்கப்பட்ட லேபர் மன்த்லி பத்திரிகையின் ஆசிரியராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் - அவர் இறக்கும் வரை சிறப்பாகச் செயல்பட்டார். அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியின் வார பத்திரிகையான ஒர்க்கர்ஸ் வீக்லியின் ஆசிரியராகவும் 1922ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தக் காலத்தில்தான் பின்லாந்தைச் சேர்ந்த சல்மே முர்ரிக் என்பவரை மணம் புரிந்தார். அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதியாக 1920ல் கிரேட் பிரிட்டன் வந்தார். அவரும் சிறந்த கம்யூனிஸ்ட் என்பதால் தத் எழுதும் கட்டுரைகள், பிரசுரங்கள், நூல்களை சல்மே படித்துத் தருவது வழக்கமாக இருந்தது.

தத் மிகச் சிறந்த மார்க்சிய அரசியல் தத்துவ அறிஞராகத் திகழ்ந்தார். 1923-1965 வரை கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை தத்துவாசிரியராக விளங்கினார். 1923ல் முதல்முறையாக சோவியத் யூனியனுக்குச் சென்றார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழுவில் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக இடம்பெற்றார். 1924ஆம் ஆண்டு அகிலத்தின் மாற்றுத் தலைவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 1925ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவு காரணமாக ஒர்க்கர்ஸ் வீக்லி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். கம்யூ. அகிலத்தில் பெல்ஜியம் மற்றும் சுவீடன் நாடுகளுக்கான பிரதிநிதியாக பல ஆண்டுகள் செயல்பட்டார். அதுபோலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டும் பொறுப்பில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் சார்பில் முக்கியப் பங்காற்றினார்.

அத்தகைய வழிகாட்டுதலின் ஒரு பகுதிதான் பெஞ்சமின் பிராட்லியுடன் இணைந்து உருவாக்கிய பிராட்லி - தத் கோட்பாடு. அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சரியான வழியில் செயல்படச் செய்ய பேருதவியாக இருந்தது என்பதை கட்சியின் பொதுச் செயலாளர்களாகச் செயல்பட்ட பி.சி.ஜோஷி, ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்றோர் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர். 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் துவங்கிய போது கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் அது பற்றிய நிர்ணயிப்பில் குழப்பம் இருந்தது. அதில் தத் மிகத் தெளிவாக முடிவு எடுத்தார். சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் படைகள் தாக்குதலை தொடுத்ததும் அவரது முடிவு சரியாக இருந்தது நிரூபணமானது. இந்தக் காலத்தில் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஹாரி பாலிட் பதவி விலக நேர்ந்ததும் ரஜினி பாமிதத்தே 1941 வரை பொதுச் செயலாளராக செயல்பட்டார்.

தத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று பாசிசமும் சமூகப் புரட்சியும். இந்தியா பற்றிய அவரது முக்கியமான புத்தகம் ‘இன்றைய இந்தியா’. இதில் அன்றைய இந்தியாவின் அரசியல் நிலையையும் இந்திய கம்யூனிஸ்ட கட்சி செயல்பட வேண்டிய வழியையும் மிகத் தெளிவாக விளக்கியிருந்தார். அவரது முந்தைய நூலான ‘நவீன இந்தியா’ எனும் நூலும் குறிப்பிடத் தகுந்ததாகும். மார்க்சிய - லெனினிய தத்துவத்தில், கம்யூனிஸ்ட் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்ததால் தான் அவரால் இத்தகைய நூல்களை எழுத முடிந்தது. 1920 முதல் 1967வரை 34 புத்தகங்கள் அவரால் எழுதப்பட்டன. அவற்றில் ஒன்றிரண்டு மட்டுமே சிறு பிரசுரங்கள். பொது வேலை நிறுத்தத்தின் பொருள் என்ன? (1926), பிரிட்டனில் முதலாளித்துவ சோசலிசமா? (1931), ஜனநாயகமும் பாசிசமும் (1933), இந்த போர் ஏன்? (1939) ஆகியவை அத்தகைய பிரசுரங்கள். இந்தியா எழுகிறது (1928), இந்தியாவில் இடதுசாரி தேசியம் (1936) ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. சக தோழராய் செயல்பட்ட சக்லத்வாலா பற்றி எழுதிய நூல் சாபுர்ஜி சக்லத்வாலா பற்றிய நினைவுகள் (1936) குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். அவரது செயல்பாடுகளும் எழுத்துக்களும் இன்றைய இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் வழிகாட்டக் கூடியவையாகும்.

;