புதுதில்லி, ஜூன் 16- தேசிய மிகை லாப தடுப்பு ஆணையத்தின் ஆயுட்காலத்தை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ஜிஎஸ்டி கவுன்சில் நீட்டிக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 35வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 21 ஆம் தேதி தில்லி யில் நடைபெற இருக்கிறது. அதில், வரி குறைப்பை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தாத நிறுவனங்கள் மீதான புகாரை விசாரிக்கும் தேசிய மிகை லாப தடுப்பு ஆணையத்தின் ஆயுட்காலத்தை 2020 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மதுபான தயாரிப்பில் பயன்படும் எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹாலுக்கு ஜிஎஸ்டி விதிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு என தனியாக ஜிஎஸ்டி மேல்முறையீடு தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்ட உள்ளது.