tamilnadu

img

இமாச்சல் சுகாதாரத் துறை ஊழல்; பாஜக மாநிலத் தலைவர் சிக்கினார்

சிம்லா:
ஊழல் முறைகேட்டுப் புகாரில் சிக்கிய இமாசல பிரதேச  முன்னாள் அமைச்சர் ராஜீவ் பிண்டால்,பாஜக மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இமாச்சல பிரதேச சுகாதாரத்துறை இயக்குநரான ஏ.கே. குப்தா என்பவர், சுகாதாரத்துறைக்குத்தேவையான கருவிகளை கொள்முதல் செய்வதற்காக ‘சப்ளையர்’ ஒருவரிடம் தொலைபேசியில்பேசும் ஆடியோ அம்மாநில சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பைக் கிளப்பியது. அந்த உரையாடலில், ‘5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் கொள்முதல் டெண்டரை உறுதி செய்துவிடலாம்’ என்று இயக்குநர் குறிப்பிட்டு இருந்ததால், சுகாதாரத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. போராட்டங்களையும் அறிவித்தன. அதைத்தொடர்ந்து, மே 20-ஆம் தேதி, ஏ.கே. குப்தா கைது செய்யப்பட்டார். 

எனினும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்காமல், நீதிமன்றக் காவலுக்கேபோலீசார் அனுப்பி வைத்தனர். இது எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஏ.கே. குப்தாவை விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையோ, மாநில காவல்துறையோ ஏன்கோரிக்கை வைக்கவில்லை என்று கேள்விகளை எழுப்பினர்.இதன்மூலம் ஊழல் அதிகாரிக்குப் பின்னால் மாநில அரசின் பாஜக தலைவர்கள் பலர் இருப்பதுஉறுதியாகிறது என்றும் குற்றம் சாட்டினர்.இந்நிலையில் இமாசல பிரதேச மாநில பாஜகதலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான ராஜீவ் பிண்டால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தார்மீக அடிப்படையில் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

;