tamilnadu

img

ஜிடிபி சரிவால் இந்தியாவுக்கு ரூ. 6 லட்சம் கோடி இழப்பு!

புதுதில்லி:
உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 5 சதவிகிதமாக சரிந்ததன் மூலம், இந்தியா ரூ. 6 லட்சம் கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளதாக பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து, கருத்து கூறிய பீகாரின் நிதியமைச்சர் சுஷில் மோடி, ‘மழைக்காலம் காரணமாகவே மந்த நிலை நிலவுகிறது’ என்று தெரிவித்துள்ளார். மத்திய வர்த்தகத்துறை அமைச்சரோ ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விதி பற்றி பேசுகிறார் (நியூட்டன் ஈர்ப்பு விதி). மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓலா,  உபேரால் ஆட்டோமொபைல் துறை  வீழ்ச்சியடைந்தது என்று கூறியிருக்கிறார். பாஜக அமைச்சர்களின் இது போன்ற வேடிக்கையான பேச்சுகள் இந்தியாவை நல்வழிப் பாதைக்கு எடுத்துச் செல்லாது. மாறாக, இவை இந்தியாவின் மீதான நன்மதிப்பை குறைக்கும். ஓலா, உபேர் வாடகைக் கார்களால், பயணிகள் வாகன விற்பனை குறையலாம், ஆனால் டிரக்குகள் விற்பனை ஏன் குறைந்துள்ளது? என்ற கேள்விக்கு அமைச்சரிடம் பதிலில்லை.

துபாயில் நடக்கும் ஷாப்பிங் திருவிழா போல், இந்தியாவிலும் நடத்தப்போவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தியாவின் நிதி நிலைமை வேறு, துபாயின் நிதி நிலைமை வேறு என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் விவசாயிகளின் வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும்போது, இந்தியாவும் வளர்ச்சி பெறும். எடுத்துக்காட்டாக விவசாயிகள் அதிகம் உள்ள மத்தியப்பிரதேச மாநிலம் மண்ட்சோர் போல் மாற வேண்டும்.இந்தியாவின் வளர்ச்சி, தற்போதைய சூழலில் 8 சதவிகிதத்தை எட்டியிருக்க வேண்டும். மாறாக கடந்த ஜூன் காலாண்டில் ஜி.டி.பி விகிதம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெறும் 5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. 3 சதவிகித வளர்ச்சி காணாமல் போய்விட்டது. இதனால் அரசுக்கு 6 லட்சம் கோடிரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.வங்கிகள் இணைப்பை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த வங்கிகளின் இணைப்பால் வராக் கடன்களின் மதிப்புதானாகக் குறைந்து விடாது. மாறாக இந்தத் திட்டம் வங்கிகளுக்கு  தீங்கினையே விளைவிக்கும். ஏனெனில் வங்கி அதிகாரிகள் வங்கிகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, வங்கிகளை முழுமையாக இணைப்பதிலேயே கவனத்தைச் செலுத்துவார்கள்.இவ்வாறு யஷ்வந்த் சின்கா குறிப்பிட்டுள்ளார்.

;