tamilnadu

img

ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்படுவது ரத்து செய்யப்பட வேண்டும் - சிபிஎம்

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மோடி அரசாங்கத்தால் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் ஆட்சேபணை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு மேலும் தெரிவித்திருப்பதாவது:

மாநிலங்களவைக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்திருப்பதன்மூலம் மோடி அரசாங்கம் வெட்கங்கெட்ட முறையில் நீதித்துறையின் சுயாட்சித் தன்மையை அரித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது. நம் அரசமைப்புச்சட்டத்தால் பொறிக்கப்பட்டிருந்த அசுத்தப்படுத்தப்படக்கூடாத கொள்கையாக இருந்த அரசமைப்புச்சட்டத்தின் கீழ் தனித்தனியாக அதிகாரங்களுடன் இருந்த அமைப்புகளை அழித்துக்கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இதே ரஞ்சன் கோகோய், “நீதிபதிகள் ஓய்வுபெற்றபின்பு அரசின் நியமனத்தைப்பெறுவது,  நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஒரு கறையாக (scar) இருக்கிறது,” என்று இதற்கு நேர்முரணாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் நீதித்துறை என்பது சுதந்திரமானதும்,, சுயேச்சையானதும் மட்டுமல்ல சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாத்திட வேண்டிய முக்கிய பங்கினையும் அது பெற்றிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எவ்விதமான ஊசலாட்டமுமின்றி ஏற்கனவே கூறியிருக்கிறது. நீதியை வழங்குவதில் தற்போது ஏற்பட்டுவரும் தாமதங்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நள்ளிரவில் மாற்றல் செய்யப்படுதல், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்தும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும் வந்துள்ள வழக்குகளை விசாரிக்காது தாமதப்படுத்தி வருதல் மக்கள் மத்தியில் நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தாது, மற்றும்  அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துப்போகவில்லை.

நீதித்துறையானது அரசு எந்திரத்தால் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது மற்றும் அதன் பொறுப்புகளை கைவிடச் செய்து கொண்டிருக்கிறது என்று விரிவான அளவில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருப்பதை அரசியல் தலைமைக்குழு உறுதியான முறையில் எதிர்க்கிறது.  அரசமைப்புச்சட்டத்தின் உன்னதமான நலன்களுக்காக, இந்தப் போக்கு உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். எனவே, குடியரசுத் தலைவர், திரு. ரஞ்சன் கோகோயை நியமனம் செய்வதை ரத்துசெய்ய வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அரசியல்தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.) 

;