tamilnadu

img

கங்கை நதியில் 40 படகுகளில் சைமன் கமிஷனை எதிர்த்துப் போராட்டம் - பி.ராமமூர்த்தி

காங்கிரஸ்,  காங்கிரஸ் சோசலிஸ்ட்,  கம்யூனிஸ்ட்   2

1926ஆம் ஆண்டு நடைபெற்ற பள்ளி இறுதி வகுப்புத் தேர்வில் மிக அதிகமான மதிப்பெண்களுடன் தேர்வடைந்து மாநிலக் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரியில் நான் சேர்ந்து மூன்று மாத காலத்திற்குள்ளாக தேர்தல்கள் நடைபெறவிருந்தன. அக்காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் வோட்டளிக்கும் உரிமை அனைவருக்கும் கிடையாது. சொத்துரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே அந்த உரிமை இருந்தது. அந்த நிலைமையிலும் நீதிக் கட்சியை விட அதிகளவு இடங்கள் ‘சுயராஜ்யக் கட்சி’க்கு கிடைத்தது. ஆனால் அமைச்சர் பொறுப்பை ஏற்பதில்லை என்ற சுயராஜ்யக் கட்சி முடிவுக்கிணங்க, அவர்கள் அமைச்சரவை அமைக்கவில்லை. இந்தத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சியின் வெற்றிக்காக நான் தீவிரமாக உழைத்தேன்.

தேர்தல் முடிந்தவுடன், மாநிலக் கல்லூரி பிரின்சிபால், பைசன் என்னைக் கூப்பிட்டுக் கண்டித்தார். ‘இனிமேல் இம்மாதிரி அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டால் இக்கல்லூரியைவிட்டு வெளியேற்றுவதோடு வேறெந்தக் கல்லூரியிலும் நீ சேர முடியாத படி செய்துவிடுவேன் என்று எச்சரித்தார். இது எனக்கு மிகுந்த வெறுப்பை அளித்தது. இந்த எச்சரிக்கை கொடுத்த ஒரு வார காலத்திற்குள்ளாக, எனக்கு தகுதியினடிப்படையில் அரசாங்க உபகாரச் சம்பளம் கிடைத்தது. ஆதலால் நான் கல்லூரியில் சேரும் பொழுது செலுத்திய, முதல் மூன்று மாத காலத்து கட்டணமான ரூபாய் முப்பத்திரண்டை எனக்கு திருப்பியளித்தார்கள். அந்தப் பணம் கையில் வந்தவுடன் இனிமேல் இந்தக் கல்லூரியில் படிக்கக்கூடாதென்று முடிவு செய்தேன். கையிலிருந்த ரசாயன, பௌதீகப் புத்தகங்களை மூர் மார்க்கெட்டில் கொண்டுபோய் விற்றுவிட்டு அதில் கிடைத்த எட்டு ரூபாய் பணத்துடன் மொத்தம் நாற்பது ரூபாய் கையிருப்புடன் காசி நகரத்திற்கு (பெனாரஸ்) டிக்கெட்டில்லாமல், வீட்டில் யாருக்கும் தெரியாமல் புறப்பட்டுவிட்டேன். டிக்கெட் இல்லாததால் பல ரயில் நிலையங்களில் வண்டியிலிருந்து வெளியே அனுப்பினார்கள். அடுத்து வரும் ரயில்களில் நுழைந்து, சில நாட்களில் காசி நகரத்திற்கு வந்து சேர்ந்தேன்.

காசி சர்வகலாசாலையில்...

காசி நகரத்தில் அப்பொழுது பிரபல தேசபக்தரான பண்டித மதன் மோகன் மாளவியா, பெனாரஸ் ஹிந்து சர்வகலா சாலையை நடத்தி வந்தார். தேசிய எண்ணங்கொண்ட மாணவர்களின் புகலிடமாக இருந்தது அது. எனவே ரயில்நிலையத்திலிருந்து நேராக சர்வ கலா சாலைக்குச் சென்று பண்டித மதன் மோகன் மாளவியாவைச் சந்தித்து நடந்த விபரங்கள் அனைத்தையும் கூறி, என்னையும், சர்வகலா சாலையில் சேர்த்துக் கொள்ளும்படி மன்றாடினேன். சென்னையிலிருந்து செல்லும் பொழுது கல்லூரியிலிருந்து என்னுடைய எஸ்எஸ்எல்சி சர்டிபிகேட் கூட இல்லாது சென்றிருந்தேன். நான் கூறிய விபரங்களனைத்தையும் பொறுமையுடன் கேட்ட மாளவியா நான் தேசிய மனப்பான்மையுள்ளவன் என்று திருப்தியடைந்து, இரண்டாமாண்டு இறுதிக்குள் என்னுடைய எஸ்எஸ்எல்சி சர்டிபிகேட்டை கொடுத்தால் போதுமென்று கூறி என் மீது அனுதாபங்கொண்டு இண்டர் மீடியட் விஞ்ஞான வகுப்பில் சேர்ந்து கொள்ளும்படி அனுமதித்தார். என்னுடைய சாப்பாட்டுச் செலவுக்காக மாதம் பனிரெண்டு ரூபாய் உபகார சம்பளத்தையும் வழங்கினார். ஹாஸ்டலில் தங்கியிருக்கவும் அனுமதித்தார். என் குடும்பத்தினர் திடீரென்று நான் காணாமற் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பல இடங்களிலும் தேடியிருக்கிறார்கள். காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரிடம் போய் நான் திரும்பி வருவேனா என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். ஒன்றரை வருட காலத்திற்குப்பின் என்னுடைய எஸ்எஸ்எல்சி சர்டிபிகேட்டை வாங்கி அனுப்பும்படி நான் காசியிலிருந்து கடிதம் எழுதிய பின்புதான் என்னைப் பற்றிய விபரங்கள் அவர்களுக்கு தெரியவந்தது.

சைமன் கமிஷன் வருகை

இந்த சமயத்தில் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபின், இந்திய அரசியலில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் பயங்கரவாத இயக்கம் தோன்ற ஆரம்பித்தது. மறுபுறத்தில் ஆங்கிலேய அரசு ஏழு வெள்ளைக்காரர்களைக் கொண்டதும் சைமன் என்பவரால் தலைமை தாங்கப் பெற்றதுமான ஒரு அரசாங்க கமிஷனை இந்தியாவிற்கு அனுப்பியது. சைமன் கமிஷன் என்ற பெயரில் அழைக்கப்பட்ட அந்தக் கமிஷன் இந்தியா சுயாட்சிக்கு எவ்வளவு தகுதிபெற்றுள்ளது; எவ்வளவு உரிமைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை விசாரித்து, ஆங்கிலேய அரசுக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அனுப்பப்பட்டது. காங்கிரஸ் கட்சி இந்தக் கமிஷனை புறக்கணிக்கும்படி அறைகூவல் விடுத்தது. ஆனால் காங்கிரஸ் மிதவாதிகளும், நீதிக்கட்சியினரும் இந்தக் கமிஷனுடன் ஒத்துழைத்து சாட்சியம் கூறினார்கள்.

சைமன் கமிஷன் விஜயம் செய்த நகரங்களில் எல்லாம் அதை எதிர்த்து ஹர்த்தால்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.  பல இடங்களில் போலீஸ் தடியடி நடைபெற்றது. லக்னோவில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த பண்டித கோவிந்த வல்லப பந்தும் இதர ஆர்ப்பாட்டக்காரர்களும் கடுமையான தடியடிக்குள்ளானார்கள். அவர் அப்பொழுது, உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் சுயராஜ்யக் கட்சியின் தலைவராயிருந்தார். லாகூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டவர்கள் மீது பலத்த தடியடிப் பிரயோகம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த லாலா லஜபதிராய் பலத்த காயத்திற்குள்ளானார். அதனால் பின்னர் மாண்டார். இந்தச் சம்பவங்களெல்லாம், மாணவர்களாகிய எங்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியிருந்தது. அப்பொழுது காசி நகரத்திற்கும் சைமன் கமிஷன் விஜயம் செய்வதாயிருந்தது. எனவே அதற்கெதிராக நாங்களும் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டோம். எங்களது திட்டத்தைத் தெரிந்து கொண்ட அரசாங்கம், அதைத் தவிர்ப்பதற்காக, சைமன் கமிஷன் குழுவினர் தங்குவதாயிருந்த இடமான ராம்நகர் மாளிகைக்கு அவர்களை கங்கை நதியில் படகுகள் மூலம் கொண்டு செல்லத் திட்டமிட்டது. இதையறிந்த நாங்கள் 40 படகுகளை வாடகைக்கு அமர்த்தி சைமன் கமிஷன் சென்ற படகுகளுக்குப் பின் எங்களது படகுகளைச் செலுத்தி ‘சைமனே திரும்பிப் போ’ என்ற கோஷத்தையும், ஆங்கில அரசுக்கெதிரான கோஷங்களையும் முழக்கி, ராம்நகர் மாளிகை வரை சைமன் கமிஷனை துரத்திச் சென்றோம். இந்த ஆர்ப்பாட்டத்தை மாணவர்களிடையே உருவாக்குவதில் நான் குறிப்பிடத்தக்க பங்காற்றினேன்.

ஜாதி ஒழிப்பு சபை

1927ம் ஆண்டு டாக்டர் எம்.ஏ.அன்சாரி தலைமையில் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு “பூரண சுயராஜ்யம்” வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த மாநாட்டின் முடிவுகள் நாட்டு மக்களிடையே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கினாலும், அந்த லட்சியத்தை அடைவதற்காக காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித வேலைத் திட்டமோ, செயல் முறையோ இருக்கவில்லை. சாதாரண ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. இதன் காரணமாக பயங்கரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களைக் கொண்ட வாலிபர் குழுக்கள் பல தோன்றலாயின. ‘நவ ஜவான் பாரத் சபா’ என்ற பெயரில் வாலிபர் இயக்கத்தின் வெகுஜன அமைப்பு ஒன்று தோன்றியது. இந்த சபாவின் உறுப்பினர்களில் முக்கியமான சிலர் சேர்ந்து ‘இந்துஸ்தான் குடியரசுப்படை’ என்ற ரகசிய இயக்கத்தை உருவாக்கினார்கள். இந்தக் குடியரசுப் படையைச் சேர்ந்தவர்கள் இந்த இயக்கத்தை நடத்த தேவையான பணத்திற்காக பல இடங்களில் அரசாங்க உப - கஜானாக்களை கொள்ளையடித்தார்கள். காகோரி என்ற இடத்தில்  ரயிலில் அரசாங்க கஜானா கொள்ளையடிக்கப்பட்டது. காசி நகரத்தில் நவஜவான் பாரத் சபையின் உறுப்பினராக நான் தீவிரப் பங்காற்றினேன். அத்தோடு ‘ஜாத் பாத், தோடக் மண்டல்’ என்ற ஜாதியை நொறுக்கும் சபையை நவ்ஜவான் பாரத் சபா ஆரம்பித்தது. இது ஜாதியை ஒழிப்பதற்காக பாடுபட்டது. இதனால் வாலிபர் குழுக்கள் ஆகர்ஷிக்கப்பட்டன.


 

;