tamilnadu

img

2014-இல் போலி வாக்குறுதிகள்; 2019 இல் போலி தேசியவாதம்...மோடியால் ஏமாற்றப்பட்ட இந்திய மக்கள்

புதுதில்லி:
2014-ஆம் ஆண்டு தேர்தலில், போலிவாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட இந்தியமக்கள், 2019-இல் போலி தேசியவாதத்தால் ஏமாற்றப்பட்டார்கள் என்றுகலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியரான பிரணாப் பர்தன் கூறியுள்ளார்.இதுதொடர்பாக பிரணாப் பர்தன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:

2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி அடைந்த வெற்றி என்பது,நிச்சயமாக ஒரு சாதனைதான். தனிப் பட்ட மனிதர் ஒருவரின் பிரச்சார யுக்தி மற்றும் பேச்சுத் திறன் (அவ்வப்போது விஷத்தைத் தோய்த்துப் பேசுவது) ஆகியவற்றுக்குக் கிடைத்த வெற்றி என்றே எடுத்துக் கொண்டாலும், அவற்றில் வேறுபல துணைக் காரணிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.மோடிக்கு இருந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவானது, மற்ற தலைவர்களின் பிரச்சாரம் பெற்ற முக்கியத்துவம் மற்றும் கவனத்தைக் காட்டிலும், அவரின் பிரச்சாரம் மிக அதிக கவனமும் விளம்பரமும் பெற உதவியது. மேலும், பல பிரபலமான பத்திரிகைகளை தமக்கு சாதகமாக மாற்றி வைத்திருந்ததால், அவர்கள் மோடியிடம் எந்தவித கடினமான கேள்வியையும் கேட்காமல் தவிர்த்துக் காப்பாற்றினர். 

அத்துடன் ஊழலற்ற மனிதராகவேமோடி தொடர்ந்து சித்தரிக்கப்பட்டார். அவரின் ஆட்சியில் இந்திய நன்மதிப்பு சர்வதேச அளவில் மிகவும் குறைந்தபோதும், வெளிநாடுகளில் இந்தியாவின் பெருமை ஓங்குகிறது என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு, மோடியால் வெற்றிபெற முடிந்தது. மோடியின் ஆட்சியில் மோசமான வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழிற்துறை முடக்கம், வேளாண்மைச் சீர்கேடு போன்ற ஏராளமான அவலங்கள் நிறைந்திருந்தும், மக்களைத் தேசியவாதத்தின்பால் திருப்பி ஏமாற்ற முடிந்தது. இந்திய அரசியல் சாசனத்தை புனிதநூல் என்று கூறிய மோடி, அதை ஒருபோதும் மதித்ததில்லை. தனது முந்தைய 5 ஆண்டுகால ஆட்சியில் தொடர்ந்து அதனை பலவீனப்படுத்தவே செய்தார்.கடைசியாக பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ- முகம்மது என்ற பயங்கரவாத இயக்கம் நடத்தியதாக சொல்லப் படும் புல்வாமா தாக்குதல், மோடிக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. ஒட்டுமொத்தமாக, கடந்த 2014-இல் இந்தியா போலி வாக்குறுதிகளால் ஏமாந்தது என்றால், 2019-இல் போலி தேசியவாதத்தால் ஏமாந்துள்ளது. இவ்வாறு பிரணாப் பர்தன் கூறியுள்ளார்.

;