tamilnadu

img

ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளித்திடுக!

புதுதில்லி / கோயம்புத்தூர்:
ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இடதுசாரிக் கட்சிகளின் எம்பிக்கள் நடத்திய தர்ணா போராட்டத்திற்கு கோவை தொழிற்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்புக் கொள்கையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள எங்களுக்கு இப்போராட்டம் ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு கொள்கையால் சிறுகுறுந்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிற்கூடங்கள் மூடப்பட்டன. இது கோவையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனைக்கண்டித்து பெரும் போராட்டத்தை கடந்த காலத்தில் தொழில் அமைப்புகள் மேற்கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலின்போது இடதுசாரி கட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அப்போது, மத்திய அதிகாரத்தில் இருந்த பாஜகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வருவோம் என்கிற வாக்குறுதியை அளித்தது. கோவை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியும் இத்தகைய கருத்தை தெரிவித்தார். 

இந்நிலையில் மீண்டும் மத்தியில் அதிகாரத்தில் பாஜக அரசு அமர்ந்துள்ளது. ஆனால், ஜிஎஸ்டி பாதிப்பில் இருந்து தொழிற்துறையை பாதுகாக்க வேண்டும் என்கிற சிறு சமிக்கைக் கூட மத்திய அரசிடம் இருந்து வெளியாகவில்லை. இந்நிலையில் புதனன்று நாடாளுமன்ற வளாகத்தில், ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து இடதுசாரி எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்திசிலை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், எளமரம் கரீம், மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், ஏ.எம்.ஆரிப், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் து.ராஜா, திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் எம்பிக்கள் மற்றும் ஈரோடு மதிமுக மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி பங்கேற்றனர். அப்போது ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்கிற பதாகையை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தொழிற்துறையினர் வரவேற்பு
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட இடதுசாரி எம்பிக்கள் நடத்தும் போராட்டத்திற்கு கோவை தொழிற்துறையினர் வரவேற்பையும் நன்றியும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறுகையில், “மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது சிறுகுறுந்தொழில்களுக்கு சுமக்கமுடியாத கடும் சுமை. இதனாலேயே கோவையில் பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. வரியை குறைக்க வேண்டும் என்பதுதான் தொழிற்துறையின் கோரிக்கை. கோயம்புத்தூரில் உள்ள தொழில்முனைவோர் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தொழிலாளர்களின் கோரிக்கையும் இதுதான். ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பல தொழில்முனைவோர்கள் அனைத்தையும் இழந்து கூலித் தொழிலாளிகளாக மாறியுள்ளனர். ஏற்கனவே மோட்டார் பம்ப் செட் வகைகளுக்கு 5 சதவீதம் இருந்ததை நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாப் ஆர்டர்களுக்கு அறவே ஜிஎஸ்டி கூடாது என்கிற நிலைப்பாட்டை கம்யூனிஸ்டுகள் முன்வைத்தனர். இதன்காரணமாக நாங்கள் அனைவரும் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்தோம். கோவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி  பெற்ற அவர் எங்களின் நிலையை உணர்ந்து ஜிஎஸ்டியில் இருந்து ஜாப் ஆர்டர்களுக்கு விலக்கு வேண்டும் என நாடாளுமன்றத்தில் போராடுவது வரவேற்கத்தக்கது. இந்த கொள்கைக்காக இதர கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் இணைந்து போராடி வருவதற்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தொழிற்துறையினர் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசு இக்குரலுக்கு செவிசாய்த்து சிறுகுறுந்தொழில்களை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் (டேக்ட்) ஜே.ஜேம்ஸ் கூறுகையில், “இந்திய நாட்டின் அரசியல் வரிவிதிப்புக் கொள்கை அமலான காலத்தில் இருந்து சிறு-குறுந்தொழில்களுக்கு வரிவிதிப்பை மேற்கொண்டதில்லை. இத்தொழில்களுக்கும் மத்திய அரசு அதிகபட்ச வரிவிதிப்பு நடைமுறைப்படுத்தியதால், லட்சக்கணக்கான தொழில்கள் நாடுமுழுவதும் மூடப்பட்டுள்ளன. இருக்கிற தொழில்களும் ஜாப் ஆர்டர்கள் கிடைக்காமல், தொழிலை நடத்தமுடியாமல் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் நிலையை உணர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடதுசாரி எம்பிக்களின் போராட்டம் எங்களுக்கு நம்பிக்கையையும், ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிற்துறையினரின் கோரிக்கையை முன்வைத்து போராடும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியாயத்தை உணர்ந்து மத்திய அரசு உடனடியாக ஜிஎஸ்டியில் இருந்து ஜாப் ஆர்டர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல இன்ஜினியரிங் தொழில்களுக்கு அதிகபட்சமாக உள்ள 18 சதவீத ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார். இதேபோல பல தொழில் முனைவோர்களும் இடதுசாரி கட்சியினரின் போராட்டத்திற்கு ஆதரவையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர்.

;