tamilnadu

img

தில்லி மதவெறி வன்முறை வெறியாட்டம்... சுயேச்சையான விசாரணை நடத்துக...

புதுதில்லி:
தில்லியில் வாழும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், பேராசிரியர்கள், அறிஞர்கள் உட்பட பல்வேறு தரப்பு குடிமக்கள், தில்லியில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் குறித்து, பொருத்தமான அந்தஸ்துடன் உள்ள ஓய்வுபெற்ற நீதிபதியின் கீழ் சுயேச்சையான விசாரணை நடத்த வேண்டும் என்று தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

தில்லியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் குறித்து, தில்லி சிறுபான்மைஆணையத்தின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளுக்கு முற்றிலும் விரோதமான முறையில், தில்லிக் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாகவும், அரசியல் தூண்டுதலின் பேரிலும் அறிக்கைகள் அளித்திருக்கின்றனர். இதுதான் இவ்வாறு சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை குடிமக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இது அவசரகதியில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் அது தில்லி வாழ் மக்கள் மத்தியில் இவ்வன்முறை வெறியாட்டங்களில்  உண்மையாகவே ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து, தண்டித்திட உதவிடும் என்றும், அவ்வாறு தண்டிக்கப்பட்டால்தான் மக்கள் மத்தியில் அரசு மீது நம்பிக்கை ஏற்படும் என்றும் அவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவ்வாறு விசாரணை மேற்கொள்வதற்கு ஆறு காரணிகளை அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.   

இக்கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பவர்களில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மூத்த ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க, மாதர் சங்க மற்றும் மாணவர் சங்கத் தலைவர்களும் அடங்குவர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், ஏர்-வைஷ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) என்.ஐ. ரசாகி, முன்னாள் அயல்துறை செயலாளர் முச்குந்த் துபே, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தேசிய சிறுபான்மை ஆணையத்தின்முன்னாள் தலைவரும் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முதல் முதன்மை ஆணையராக இருந்தவருமான வஜாஹாத் ஹபிபுல்லா, சமூக ஆர்வலர்ஹர்ஷ் மாந்தர், மூத்த இதழாளர் எச்.கே. துவா, மூத்த இதழாளரும், எழுத்தாளருமான மிரிணாள் பாந்தே, திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் டாக்டர் சயீதா ஹமீத், தில்லி, அம்பேத்கர் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஷ்யாம் மேனன், எழுத்தாளர் கீதா ஹரிஹரன், ஸ்வாமி அக்னிவேஷ், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பிரபாத் பட்நாயக் மற்றும் ஜெயதி கோஷ் உட்பட 270க்கும் மேற்பட்டவர்கள் இதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

நேர்மையற்ற,நீதியற்ற புலன்விசாரணை
அவர்கள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:நாட்டின் தலைநகரில் பல்வேறு நிலைகளில் உள்ள குடிமக்களாகிய நாங்கள், வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக,  தில்லிக் காவல்துறையினர், குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினர், மேற்கொண்ட “புலன் விசாரணை” ஒருதலைப்பட்சமாகவும், நீதியற்ற முறையிலும், நேர்மையற்ற முறையிலும் இருப்பது குறித்து மிகவும் கவலையுடன் ஆழ்ந்த மன அமைதியின்மையுடன் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம்.இவற்றின் மீது ஒரு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து, ஒரு பொருத்தமான அந்தஸ்துடன் கூடிய ஓய்வுபெற்ற நீதிபதியின்கீழ் சுயேச்சையான புலன்விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று உங்களைக்கேட்டுக்கொள்வதற்காக இக்கடிதத்தை எழுதுகிறோம். வன்முறையின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அவர்விசாரணை செய்யும் விதத்திலும் அவர் கேட்டுக்கொள்ள ப்பட வேண்டும். வன்முறை வெறியாட்டங்களில் உண்மையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கு ஒரு சுயேச்சையான விசாரணை உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு விசாரணை மேற்கொள்ள வேண்டியதற்கான காரணங்களைக் கீழே தருகிறோம்:

1  தில்லி காவல்துறையினர் கூறுவதற்கு முற்றிலும் விரோதமான முறையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து ஓர் ஆழமான அறிக்கையை தில்லி சிறுபான்மை ஆணையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. ஒரு சுயேச்சையான விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. மாநில அரசு இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வெறுப்பை கக்கிய பாஜக தலைவர்கள்-அமைச்சர்கள்

2 தில்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகிறது. வன்முறை நிகழ்வுகளுக்குப் பீடிகை போன்று தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு அமைந்திருந்தது. உண்மையில் அவர் என்ன பேசினார் என்பது தில்லி சிறுபான்மை ஆணையத்தின் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியின் தலைவர்களைப் பாதுகாப்பதற்கும் உண்மைக்கும் இடையே முற்றிலும் முரண்பாடுகள் இருப்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட பல பாஜக தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கபில் மிஸ்ரா போன்ற தலைவர்கள் வெறுப்பு உரைகளைமேற்கொண்டார்கள். ஆனாலும் அவர்களுக்கு எதிராகஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்பட வில்லை. மாறாக, தில்லிக் காவல்துறையினர், அவர்களின்அத்தகைய பேச்சுக்கள் “கைதுசெய்தற்குரிய குற்றங்களை” (“cognizable offences”) ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு வன்முறையைத் தூண்டவில்லை என்றும் இருசமூகத்தினருக்கும் இடையே பகைமையை விதைக்க வில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனினும், ஆர்வலர்கள் பேசிய பேச்சுக்களின் சாராம்சங்கள் குற்ற அறிக்கையில் அவர்களின் பெயர்களுடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு தில்லி காவல்துறை இரட்டை நிலையுடன் செயல்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பு அரசியல் செயற்பாட்டாளர்களின் பங்கினைக் கறாராகக் காட்டுவதற்கு சுயேச்சையான விசாரணை உதவிடும்.

3 தில்லி காவல்துறையினர், தாங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதில் இரு சமூகத்தினரையும் “சமமாகத்தான் பாவிக்கின்றோம்” என்று கூறியிருக்கிறார்கள். ஆயினும், சம்பவங்களினால் ஏற்பட்டுள்ள இழப்புகளும்,
சேதங்களும் மிக அதிகமான அளவில் சிறுபான்மை யினருக்கு என்பதை அவர்களின் சொந்தப் புள்ளி விவரங்களே காட்டுகின்றன. இத்தகைய நிலையில், “சமமாகத்தான் பாவிக்கின்றோம்”  என்பதன் பொருள், உண்மைகளை மூடி மறைத்திடுவது என்பதேயாகும்.

மேலும், தில்லி காவல்துறையினர் அனைத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது. அதில், மதத் தலைவர்களிடமிருந்து “புகார்கள்” வந்திருப்பதால், இந்துக்களைக் கைது செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. எனவே, இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டக் கயவர்களை, அவர்களின் பெயர் புகார்களில் இடம்பெற்றிருந்தாலும்கூட,  கைது செய்யக் கூடாது என்று நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் “சமமாகப் பாவிக்கப் படவில்லை” என்பதற்கு இது ஓர் அதிர்ச்சிதரத்தக்க அம்சமாகும். மதவெறி வன்முறை வெறியாட்டங்களில் பாஜக தலைவர்கள் பங்களிப்பினை மூடிமறைத்திடும் அரசியல் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தவே காவல்துறையினர் கோரப்பட்டிருக்கின்றனர் என்கிற இரட்டை நிலைப்பாட்டை இவை காட்டுகின்றன. இவ்வாறு ஒரு சுயேச்சையான விசாரணையின் முக்கியத்துவம் தேவைப்படுகிறது. 

4 தில்லிக் காவல்துறையினர் தற்போது புலன்விசாரணைகள் அனைத்தையும் மூன்று சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் மூலமாகச் செய்துகொண்டிருக்கின்றன. வன்முறை வெறியாட்டங்களின்போது நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை யினருக்குக் காயங்கள் ஏற்பட்டன என்று கூறப்பட்ட போதிலும், தில்லி காவல்துறையினரே மக்களைக் காப்பதற்குப் பதிலாக, கடமையாற்றாது நழுவியிருந்ததும், சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்து சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றதும் நடந்திருக்கிறது.  இவற்றில் பெரும்பாலானவை குறித்தும், முஸ்லிம் இளைஞர்கள் அடித்து நொறுக்கப்படும் காட்சிகள் வீடியோக்கள்மூலம் காட்டப்பட்டது உட்பட  பொது வெளியில் வீடி யோக்கள் மற்றும் பத்திரிகை செய்திகள் மூலமாக வெளிவந்திருக்கின்றன. ஒரு வீடியோவில், போலீஸ் சீருடையில் இருந்தவர்கள் சில முஸ்லிம் இளைஞர்களை தேசிய கீதம் பாட கட்டாயப்படுத்தி, அடித்து நொறுக்கி, காவல்நிலை யத்திற்கு இழுத்துச் செல்வதும், பின்னர் அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதும் காட்டப்பட்டிருக்கிறது. எனினும், நீதிமன்றத்தில், காவல்துறையினர் இதற்கு சாட்சியம் எதுவும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கின்றனர். எனவேதான் ஒரு சுயேச்சையான விசாரணை தேவை என்கிறோம்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க  சுயேச்சையான விசாரணை தேவை 

5 இவ்வாறு ஒருதலைப்பட்சமாக விசாரணை செய்யப்பட்டிருப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பவர்களின் ஜனநாயக உரிமைக்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. தில்லிக் காவல்துறையினரின் ஒட்டுமொத்த ஜோடனையும், பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்களை, சென்ற ஆண்டு டிசம்பரில் துவங்கிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான இயக்கத்துடனும், குறிப்பாக ஜாமியா மிலியா பல்கலைக் கழக நிகழ்வுகளுடன் இணைத்திருப்பதையும் காட்டுகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராடிய சமூக செயற்பாட்டாளர்கள் பிப்ரவரியில் நடைபெற்ற வன்முறை வெளியாட்டங்களுடன் அதிர்ச்சியை உண்டாக்கும் விதத்தில் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பலர் மிகவும் கொடூரமான சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் பிணைக்கப்பட்டு, அவர்களுக்குப் பிணை மறுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களும் பல்வேறுவகை காவல்துறை பிரிவினரால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் துன்புறுத்தப்படுவதும், அற்பக் காரணங்களைக் கூறி இழுத்துச் செல்லப்படுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. தில்லிக் காவல்துறையினருக்கு அவர்களின் அரசியல் எஜமானர்கள் அளித்திடும் ஆணைகளுக்கேற்ப இவை அனைத்தும் நடந்துகொண்டிருக்கின்றன. எனவேதான் ஒரு சுயேச்சையான விசாரணை, நம் அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடவும், வலுப்படுத்திடவும் ஒரு சுயேச்சையான விசாரணை உதவும் என்று கூறுகிறோம்.

6 இதுபோன்ற வழக்குகளில் இதற்கு முன்பும் பலதடவைகள் மாநில அரசாங்கங்கள் சுயேச்சையான விசாரணைகளை வழக்கமாக நடத்தி இருக்கின்றன. தில்லியில், துணை நிலை ஆணையர் மத்திய அரசாங்கத்திற்குப் பதில்   சொல்லக் கடமைப்பட்டவர் என்ற முறையில் தில்லி  அரசாங்கத்திற்குப் பிரச்சனைகள் உண்டு என்பது உண்மைதான். எனினும், இப்போதுள்ள அரசமைப்புச்சட்டத்தின்படி, மாநில அரசாங்கம், இவ்வாறு ஒரு சுயேச்சையான விசாரணையை அமைத்திட அதிகாரங்களும் உரிமையும் உண்டு.  எனவேதான், வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் குறித்து ஒரு காலக்கெடு குறித்து, ஒரு சுயேச்சையான விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும் என்று மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கடிதத்தில் தெரி வித்துள்ளனர்.                                  

(ந.நி.)
 

;