tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழு

தேசிய வரைவுக் கல்விக் கொள்கை 2019 தொடர்பாக மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ள விமர்சனக் குறிப்பு

கற்பனை ஆகிறதா கல்வி

33 வருடங்களுக்கு பிறகு, தேசிய கல்விக் கொள்கை ஆவணத்தை பரிசீலனை செய்து சில பரிந்துரைகளை வழங்குவதற்கென ஒரு கமிஷனை அரசாங்கம் நியமித்திருந்தது. அது தேசிய கல்விக் கொள்கை 2019ற்கான வரைவினை தற்போது சமர்ப்பித்துள்ளது. இறுதியாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த தேசிய கல்விக் கொள்கையின் சாதனைகள் மற்றும் தோல்விகள் என்னென்னவென்று இந்தக் கமிஷன் பாரபட்சமின்றி பரிசீலனை செய்யும்; இந்த இடைப்பட்ட காலத்தில் எழுந்துள்ள புதிய சவால்கள் எவை எவையென்று மதிப்பீடு செய்யும்; ஒரு செயலூக்கமுள்ள தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கும்; தேசத்தை கட்டியமைக்கக் கூடிய முக்கிய அங்கமான கல்வித் துறை எந்தெந்த ஜனநாயக நோக்கங்களை எட்ட வேண்டுமோ, அந்த நோக்கங்களை எட்டுவதற்கேற்ற வகையில் கல்வித்துறையின் கொள்கை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் சுட்டிக் காட்டியுள்ள வழி முறைகளையும் நெறிமுறைகளையும் அடிமட்டத்தில் உள்ள உண்மை நிலையுடன் இணைத்து ஒரு வலுவான தொலை நோக்குப் பார்வையை அளிக்கும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நம்மிடம் இருந்தது.

30 கோடி மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்

ஆனால், அது அவ்வாறு அமையவில்லை. அதனுடைய பரிந்துரைகள் நமது எதிர்பார்ப்புகளை ஏமாற்றுவதாக உள்ளது. உதாரணத்திற்கு, நமது நாட்டில் இன்னும் கிட்டத்தட்ட 30 கோடி மக்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர். தேசிய எழுத்தறிவு இயக்கம் (National Literacy Mission), கல்வி உரிமைச் சட்டம், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு போன்ற முக்கிய குறிப்பிடத்தக்க முயற்சிகளெல்லாம் மதிப்பீடு செய்யப்படவில்லை. விளைவு இவை அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளன.  இந்தியா கல்வியில் முன்னேறுவதை தடுக்கக்கூடிய சமூகப் பொருளாதார ரீதியாக உள்ள அச்சுறுத்தும் சவால்களை முக்கியமாக இந்த தேசிய கல்விக் கொள்கை அடையாளப்படுத்தத் தவறியுள்ளது. தரமான கல்விக்கான செலவினம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, கட்டாயக் கல்வியை முடிக்கும் முன்பே தங்களது படிப்பை நிறுத்திக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. விஞ்ஞானப்பூர்வமான மனோநிலை குறைந்து கொண்டே செல்கிறது. வாழ்வியல் மாண்புகள் அல்லது பொதுமக்களின் மதிப்புகள் – விழுமியங்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகின்றன. அறிவுபரப்புதல் என்பது வேண்டுமென்றே தடுக்கப்படும் சூழல் உள்ளது. சமூகப் பிரிவினைகள் ஆழப்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பிரிவினரை மேலும் பின்னோக்கித் தள்ளும் நிகழ்ச்சி நிரல்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றன. கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் ஒரு பாதுகாப்பான, சமநீதியுடன் கூடிய, நியாயமான சூழலை உத்தரவாதப்படுத்தி, கல்வித் திறனை தக்க வைக்கக் கூடியவையாக இல்லை. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. மத்திய அரசாங்கம் பொது நிதியிலிருந்து நடத்தப்படும் ஆரம்ப மற்றும் அங்கன்வாடி பள்ளிகளை மூடவும், இணைக்கவும் உத்தரவு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மத ரீதியான கல்விக் கூடங்கள் சிசு மந்திர்கள் என்ற பெயரிலும், ஏகலைவன் வித்யாலயா என்ற பெயரிலும், மதரசாக்களாகவும் வேக வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நகராட்சிப் பள்ளிகள் தனியார் கார்ப்பரேட் அமைப்புகளுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றன. வசதியுள்ள செல்வந்தர்கள் சமூக ரீதியாக, கலாச்சார ரீதியாக நிறுவனப்படுத்தப்படும் பள்ளிகளுக்குப் பதிலாக வீட்டுப் பள்ளிகளை விரும்புகின்றனர்.  இதையெல்லாம் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, தேசிய வரைவு கல்விக் கொள்கையானது அனைத்தையும் அதிகரிக்கும் வகையில், திருத்தம் செய்யப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளது. உயர்கல்வியும், கல்வியில் ஆராய்ச்சித் துறையும் வர்த்தகமயமாகிக் கொண்டிருப்பதையும், தனியார்மயமாகிக் கொண்டிருப்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் சரியாக மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக, அந்தரத்தில் கோட்டை கட்டும் ஏற்பாடாக, தேசிய வரைவு கல்விக் கொள்கை உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தோற்றத்தை ஏற்படுத்துகிறது. 2035க்குள் 50 சதம் மொத்த சேர்க்கை விகிதத்தை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த இலக்கு அரசின் எந்த நிதி ஒதுக்கீடும் இன்றி நிறைவேற்றப்பட வேண்டுமாம். நிதி ஆயோக்கின் நிகழ்ச்சி நிரலில் இருந்து வருவிக்கப்பட்டதாக, ஒரு தலைப்பட்சமான கண்டறிதல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தேசிய வரைவு கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் அமைந்துள்ளன. கல்வியில் தனியார் மூலதனத்தை அது நியாயப்படுத்துகிறது. பொது நிதியில் நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களுக்கும், தனியாரால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் ஒரேவிதமான ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளையும், தர மதிப்பீட்டு அளவுருக்களையும் நியாயப்படுத்துகிறது. கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்பு மற்றும் மூலதனச் சந்தைகள் மூலம் கார்ப்பரேட்டுகளின் தயவில் அமைக்கப்படும் தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. ஆசிரியர் நியமனங்கள் மற்றும் பணி உயர்வுகளில் அதிக அளவில் காத்திருப்போர் பட்டியல் வைக்கப்படுவதால், பணிப் பாதுகாப்பின்மையும், சமத்துவமின்மையும் எழுகிறது. பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதன் காரணமாக, அதில் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் தரம் உயர்த்தலும், திறன் வளர்த்தலும் மறுக்கப்படுகிறது, அழிக்கப்படுகிறது. 

மிகப் பெரிய தோல்வி

உள்ள, அரசியலமைப்புச் சட்டத்தால் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள சம அதிகாரத்தினை இந்த தேசிய வரைவு கல்விக் கொள்கை அங்கீகரிக்கவில்லை என்பதே இதனுடைய மிகப் பெரிய தோல்வியாகும். கல்விக் கொள்கையின் மீது மாநிலங்களுக்கு தனிச்சிறப்பு அதிகாரங்கள் உண்டு. இந்த அதிகாரங்கள் மாநிலங்களின் தன்மைக்கேற்ப அந்தந்த மாநிலங்களில் இருக்கும் வேற்றுமைகளை மனதில் கொண்டு அந்தந்த மாநிலத்தின் நலன்களையும் தேவைகளையும் உத்தரவாதப்படுத்துவதற்கான ஏற்பாடாகும். ஆனால், தற்போது அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, கல்வியை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீர்மானிக்கும் பொதுப் பட்டியலில் இணைத்துவிட்டனர். இதனால் மாநிலங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு மற்றும் நிதி ஒதுக்கீட்டு அதிகாரம் மத்திய அரசிற்கு அளிக்கப்பட்டுவிட்டது. இந்த தேசிய வரைவு கல்விக் கொள்கை மாநிலங்களின் மேன்மை பொருந்திய அதிகாரங்களைத் திருடி மத்திய அரசிற்கு கொடுத்துவிடுகிறது எனலாம். இது அளவிற்கதிகமான அதிகாரம் படைத்த ஒரு மத்திய அமைப்பை உருவாக்குவதன் மூலமும், இந்த அமைப்பிற்கு பிரதம மந்திரியின் தலைமையிலான ராஷ்ட்ரிய சிக்சா ஆயோக்கின் (RSA) மூலம் அதிகமான அதிகாரங்களை அளிப்பதன் மூலமும் நிறைவேற்றப்படுகிறது. மாநிலங்கள் இந்த ராஷ்ட்ரிய சிக்சா ஆயோக்கின் கிளைகளாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலங்கள் தங்களுக்கான முன்னுரிமைகள் பற்றி நினைக்கவோ அல்லது மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஏதேனும் நிலைப்பாடுகளை எடுக்கவோ முடியாது. நமது அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள, மத்திய - மாநில அரசுகளின் உறவுகளை மிகத் தெளிவாக வரையறுத்துள்ள கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான நிலைப்பாடாக, இந்த ஆர்எஸ்ஏ-வின் முடிவெடுக்கும் அதிகாரப் படிநிலை உள்ளது. 
 

அறிவுச் சமூகமாக இந்தியா மலருமா?

இந்த தேசிய வரைவு கல்விக் கொள்கை உலக அளவிலான சவால்களை எதிர்கொள்வதையும், அறிவு சமூகத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிலையை உத்தரவாதப்படுத்தவதையும் வலியுறுத்துகிறது. ஆனாலும், ஆன்லைன் கற்றல் மற்றும் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையில் உள்ள வழக்கமான வகுப்புகளுக்கு மாற்றாக வந்துள்ள ஏராளமான ஆன்லைன் திறந்தவெளி கற்றலின் (Massive Open Online Courses) நம்பகத்தன்மை குறித்தும், மதிப்பின்மை குறித்தும் சமீபத்திய ஆய்வினை அது நிராகரிக்கிறது. இந்தியாவை விட பல நாடுகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகமிருந்த போதும் உலக அளவில் கல்வியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கான அவசியம் பற்றி அதிகம் பேசப்படவில்லை. ஆனால், இந்தியாவில் இந்த தேசிய வரைவு கல்விக் கொள்கையில் அதற்கு அதிக அழுத்தம் அளிக்கப்படுகிறது. அது ஆன்லைனில் தொலை தூரக் கல்விக்கு பரிந்துரைக்கிறது. இந்த பரிந்துரையின் கீழ் சொல்லப்படாத இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம் செய்யப்பட வேண்டியதில்லை. இன்னொன்று அதிக ஆசிரியர் நியமனம் தேவையில்லை என்பதே ஆகும். இவை இரண்டும் இல்லாமலே செலவினங்களை குறைத்து, அதிக அளவில் மாணவர் சேர்க்கையை உத்தரவாதப்படுத்திவிட முடியும் என்பதே இதில் சொல்லப்படாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலாகும்.

வேதகாலத்திற்கு இழுக்கும்...

அரசே கல்வியை தனியார்மயப்படுத்துவதையும், நெகிழ் திறனுடன் கூடிய கல்வித் திட்டங்களையும் ஊக்குவிப்பது என்பதையும் இது நியாயப்படுத்துகிறது. இதனால் சமூக நீதி, சமத்துவம், மற்றும் கல்வியை அடைவதற்கான ஜனநாயகக் கூறு, அதன் உள்ளடக்கம் போன்றவை இந்த தேசிய வரைவு கல்விக் கொள்கையால் குறைத்து மதிப்பிடப்படுகிறது. இந்த தேசிய வரைவு கல்விக் கொள்கை, வேத கால நம்பிக்கை முறையுடன் மதிப்பு மிக்க கல்வியை இணைப்பதன் மூலம், வழக்கத்திற்கு மாறான, விமர்சன சிந்தனையை, கேள்வி கேட்கும் திறனை தடுக்கிறது. மேலும் இது தற்போதைய காலத்திற்கும், அரசியலமைப்பு கொள்கைகளுக்கும் ஒவ்வாததாக இருக்கிறது. மேலும் மையப்படுத்தப்பட்ட ஒரு தேசிய ஆய்வு அமைப்பை (NRF) உருவாக்குவது என்றும், அதன் மூலம் அனைத்து ஆய்வுத்திட்டங்கள் மற்றும் ஆய்விற்கான தலைப்புகளை அடையாளப்படுத்தி, தீர்மானித்து, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வது என்றும் இந்த தேசிய வரைவு கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. 

பயன் அல்லது பலன் அடிப்படையிலான மாதிரி வேண்டுமென அது வலியுறுத்துகிறது. உண்மையில் ரீகன் காலத்தில் ஒழுங்குபடுத்தும் கட்டடமைப்பு இப்படி அமைக்கப்பட்டு, அது அநீதியானது என்றும், அது தேவையற்றது என்றும் முன்னேறிய நாடுகளில் கைவிடப்பட்ட முறை இது. இந்த முறையை தேசிய வரைவு கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. இதன் மூலமாக அது அழுத்தத்தை மாற்றுகிறது. குறைந்தபட்சம் கொடுக்கப்பட வேண்டிய உள்ளீடுகள் மற்றும் மற்றும் அவற்றின் தரம் குறித்து அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். (இந்த இடத்தில் உள்ளீடுகள் என்பது கல்வியின் தரம், ஆய்வு, அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர் ஆய்வாளர்கள் உள்ளிட்ட நியமனம் உட்பட அனைத்தும்). மாறாக வளங்களை இயந்திர கதியில் பயன்படுத்துவது குறித்தும், நிறுவனங்களின் நிதி பொறுப்புகள் குறித்தும் அழுத்தம் கொடுக்கிறது. இதன் மூலமாக, கற்றலில் உள்ள அனைத்து பன்முகத் தேவைகளுக்கும், நுணுக்கமான கொள்கை ரீதியான செயல்பாடுகள் தேவைப்படும் சூழல்களுக்கும், ஒரே மாதிரியான தீர்வினை இந்த தேசிய வரைவு கல்விக் கொள்கை அளிக்க முயல்கிறது.  இந்த தேசிய வரைவு கல்விக் கொள்கை அதிக பரிமாணங்களுடன் உள்ளது. அதே போன்று கடுமையான வாதங்களையும் விவாதங்களையும் கிளப்புவதாக உள்ளது. இந்த வரைவு எதை விரும்புகிறது என்ற அகநிலை வெளிப்பாட்டுடன் ஒப்பிடும்போது, உண்மையில் எது விரும்பத்தக்கதோ, எது தேவையோ அந்த புறநிலைத் தேவையை நிறைவேற்றுவதில் எந்த உறுதியும் இல்லாததாக உள்ளது. இது ஒரு பொதுமக்களுக்கான கொள்கை ஆவணம். ஆனால், பொது நிதி செலவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படை பொறுப்பை (பக். 33, DNEP.) தெளிவாக கைவிடுகிறது. அதற்கு பதிலாக, கற்பனையான நன்மைகளையும், அரசாங்கங்களே செய்யும் என்ற கற்பனையான அர்ப்பணிப்பையும் நம்பி இந்த தேசிய வரைவு கல்விக் கொள்கை வரையப்பட்டுள்ளது. இதனால், இது வெறும் வழிகாட்டும் ஆவணமாகவே உள்ளதே தவிர, அரசாங்கங்களை கட்டாயமாகச் செயல்படுத்த வற்புறுத்துகிற செயல்பாட்டுக் கொள்கைக்கான ஆவணமாக இது இல்லை. 

எங்களது முக்கியமான விமர்சனங்களை கருத்து வாரியாக விவரித்துள்ளோம். அந்த அடிப்படையில், குறிப்பாக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி குறித்து தேசிய வரைவு கல்விக் கொள்கை அளித்துள்ள பரிந்துரைகள் பற்றிய விமர்சனங்களை அளிக்கிறோம்.
 

;