tamilnadu

img

10, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி 

தில்லி 
ஆசியாவின் புதிய கொரோனா மையமாக முளைத்துள்ள இந்தியாவில் தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிப்பதால் கொரோனாவை விரட்ட மத்திய அரசு 4-ஆம் கட்ட ஊரடங்கு விதித்துள்ளது. இந்த 4-ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் சில கட்டுப்பாடுகளுடன் அடங்கிய நெறிமுறைகளை அறிவித்துள்ளார்.

அதில்,"கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது என்றாலும் சிவப்பு மண்டலங்களிலும் தேர்வு நடத்தலாம். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்த பின்னர் தான் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்க வேண்டும். முக்கியமாகத் தேர்வு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். வெப்ப (தெர்மல்) சோதனை, சானிடைசர், தனி நபர் இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும். தேர்வு மையங்களுக்குச் செல்லும் ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளார். 
மாணவர்களின் நலன் கருதியே ஊரடங்கில் இந்த தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12-ஆம் வகுப்புத் தேர்வு நிறைவுபெற்ற நிலையில், 10-ஆம் வகுப்புத் தேர்வு வரும் ஜூன் 15-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

;