tamilnadu

img

அதிக விலைக்கு வாங்கி... குறைந்த விலைக்கு... வெங்காய ஏற்றுமதி செய்யும் மோடி அரசின் கேலிக்கூத்து

புதுதில்லி:
கனமழை - வெள்ளம் காரணமாக இந்தியாவில் வெங்காயத்தின் விலை உச்சத்திற்குப் போனது, 1 கிலோ வெங்காயம் 200 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. இவ்வளவு விலை கொடுக்க முடியாது என்பதால், பலர் வெங்காயம் பயன்படுத்தி சமைப்பதையே மறந்து விட்டனர். வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், அந்த வெங்காயம் வந்துவிட்டால் விலை குறைந்து விடும் என்றும் மோடி அரசு கூறி வந்தது. அதேபோல, ‘இதயத்திற்கு இதமான’ எகிப்து வெங்காயம் உட்பட அனைத்து நாடுகளின் வெங்காயமும் சுமார் 18 ஆயிரம் டன் அளவிற்கு இந்தியாவுக்கு வந்தது. ஆனால் விலைதான் குறையவில்லை.

இந்நிலையில்தான், வெளிநாடுகளிலிருந்து வாங்கிய வெங்காயத்தை, இந்தியா வங்கதேசத்திற்கு விற்க உள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.அதாவது, மத்திய அரசு இறக்குமதி செய்த வெங்காயத்தை மாநிலங்கள் வாங்க மறுத்து விட்டதாகவும், வெங்காயத்தை ரொம்ப நாளைக்கு வைத்துப் பாதுகாக்க முடியாது என்பதால், அதனை உடனடியாக வங்கதேசத்திற்கு விற்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
ஒரு டன் வெங்காயத்தை 600 முதல் 800 டாலர் அளவிற்கு விலை கொடுத்து இந்தியா வாங்கியுள்ளது. தற்போது அதனை 550 முதல் 580 டாலர் என்ற குறைவான விலைக்கு வங்கதேசத்திற்கு விற்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே நேபாளம் மூலமான சீன வெங்காயத்தை வாங்கி வருவதால், அதைக்காட்டிலும் குறைந்த விலைக்கு தருவதாக இருந்தால் மட்டுமே இந்தியாவின் வெங்காயத்தை வாங்குவோம் என்று வங்கதேசம் பேரம் பேசுவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

;