tamilnadu

img

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்.... இடதுசாரி சிந்தனையாளர்கள் எதிர்ப்பால் புளூம்ஸ்பரி நிறுவனம் நடவடிக்கை

புதுதில்லி:
வடகிழக்கு தில்லியில் நடத்தப்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே குற்றம் சாட்டி ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரங்களின் கூற்றுக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தில்லி கலவரம் தொடர்பான புத்தகத்தை புளூம்ஸ்பரி பிரிட்டிஷ் புத்தக நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது.  இடதுசாரி சிந்தனையாளர்கள், கல்வியாளர்களின் எதிர்ப்பால் புளூம்ஸ்பரி நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரங்களின் கூற்றுக்களின்படி வெளியாகவிருந்த, தில்லி கலவரங்கள் தொடர்பான ‘பிரிட்டிஷ் பப்ளிஷர்ஸ்’ வெளியிட்ட புத்தகம், அது தொடர்பாக கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, புத்தக நிறுவனம் அதனை வெளியிடாமலேயே திரும்பப் பெற்றது.வடகிழக்கு தில்லியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாக முழுமையாக அவர்களையே குற்றம்சாட்டி, ஆர்எஸ்எஸ்- பாஜகவினர் சார்பில் வெள்ளிக்கிழமையன்று தில்லியில் இப்புத்தகம் வெளியிட ஏற்பாடாகி இருந்தது.

“தில்லிக் கலவரங்கள் 2020:
கூறப்படாத கதை” (“Delhi Riots 2020:The Untold Story”) என்ற தலைப்புடன் பிரிட்டிஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனமான புளூம்ஸ்பரி (Bloomsbury) சார்பில் இது வெளியிடப் படுவதாக இருந்தது. பாஜக தேசிய பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான பூபேந்திர யாதவ் இப்புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மேலும் இவ்வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ்/பாஜகவின்கீழ் இயங்கும் இணையதளமான ஓபிஇண்டியா (OpIndia)-வின் ஆசிரியர்  நுபர் ஷர்மா, திரைப்படத் தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி, (இந்த நபர்தான்‘அர்பன் நக்சல்’ என்னும் சொற்றொடரை உருவாக்கிய பேர்வழி), தில்லிக் கலவரத்தைத் தூண்டிய, தில்லி சிறுபான்மை ஆணையம் குற்றம்சாட்டியுள்ள கபில் மிஸ்ரா, 2003 தில்லி சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக வேட்பாளராக நின்ற அரோரா முதலானவர்கள் இதில் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொள்ள இருந்தனர்.இதுதொடர்பாகத் தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததையடுத்து, இடதுசாரி  சிந்தனையாளர்கள் கொதித்தெழுந்தனர். புளூம்ஸ்பரி நிறுவனத்திற்கு எதிராகத் தங்கள்முகநூல், டிவிட்டர் முதலான சமூக ஊடகங்களில் பதிவுகளை ஏற்படுத்தினர். சமூக வியலாளர் நந்தினி சுந்தர், வரலாற்றாசிரியர் சுசேதனா சட்டோபாத்யாயா, ஜேஎன்யூ பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் ஜெயதி கோஷ், இதழாளர் ஸ்டான்லி ஜானி முதலானவர்கள் இதில் குறிப்பிடத்தக்க வர்கள்.இப்புத்தகம் குறித்து தில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் சுந்தர், தன்னுடைய டுவிட்டர்பக்கத்தில், இந்தப்புத்தகம் குறித்து புளூம்ஸ்பரி நிறுவனம் தன் ஆய்வுரையைக் கேட்டிருந்ததாகவும், இந்தப் புத்தகத்தில் கலவரங்கள் குறித்தும்,தில்லிக் கல்வியாளர்கள் குறித்தும் முழுமையாகப் பொய்த்தகவல்கள் நிரம்பியிருந்ததால், தான் ஆய்வுரை அளிக்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.  

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றாசிரியராக இருக்கும் சட்டோபாத்யாயா, தில்லியில் சமீபத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகநடைபெற்ற இனப்படுகொலைகளை நியாயப்படுத்தி இந்தப் புத்தகத்தை புளூஸ்பரி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது என்று தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்தப் புத்தகத்தை எழுதியவர்கள், ‘அறிவுஜீவிகள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் குழு’ என்ற பெயரில் உள்ள ஒரு அரசு சாரா நிறுவனத்தின் பெயரில், ஆய்வு செய்ததாகவும், அப்போது தில்லிக் கலவரங்கள் “புரட்சியின் இடது-ஜிஹாதி மாடல்” என்றும் “சிறுபான்மையினரை படிப்படியாக இடதுசாரி அர்பன் நக்சல்களாக மாற்றும் நடவடிக்கை” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.மேலும் இந்தப் புத்தகத்தில் “ஜிஹாதி கும்பல்கள் கொலைசெய்தல், சூறையாடுதல், வரலாற்றுச் சின்னங்களையும், கடைகளையும் அழித்தொழித்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்” என்றும், கலவரங்கள் நடைபெறு வதற்கு சற்று முன்னர்தான் கபில் மிஸ்ரா குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களுக்கு காலிசெய்துவிட வேண்டும் என்று கெடு விதித்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.நீதிமன்றத்தின் முன் தில்லிக் காவல்துறையினர், கபில் மிஷ்ராவிற்கு எதிராக சாட்சியம் இல்லை என்று பதிவுசெய்துள்ளனர். தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியே, கபில் மிஸ்ராவின் கலவரத்தைத் தூண்டும் பேச்சை வீடியோவில் போட்டுக்காண்பித்தபோதுகூட, தில்லிக் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. மாறாக அந்த நீதிபதியே மாற்றம் செய்யப்பட்டார்.கடும் எதிர்ப்பு சென்றதையடுத்து, புளூம்ஸ்பரி நிறுவனம் இப்புத்தக வெளியீட்டைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.  இதுதொடர்பாக புளூம்ஸ்பரி நிறுவனம் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“புளூம்ஸ்பரி இந்தியா, பேச்சுரிமையை வலுவாக ஆதரிக்கிறது. சமூகம் குறித்தும் ஆழமான பொறுப்புணர்வுடன் இருக்கிறது. நாங்கள் இந்தப் புத்தகத்தைத் திரும்பப்பெறத் தீர்மானித்திருக்கிறோம்.”

நன்றி: தி டெலிகிராப்

தமிழில்: ச.வீரமணி

;