புதுதில்லி:
மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக 303 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. மத்திய ஆட்சியையும் தக்க வைத்துள்ளது. ஆனால், பாஜக தலைவர் தமிழிசை வார்த்தைகளில் கூறுவதானால், சில ‘வெற்றிகரமான தோல்வி’களையும் அக்கட்சி பெற்றுள்ளது.
நாடு முழுவதும் 300 இடங்களுக்கு மேல் பாஜக வென்றாலும், 6 மாநிலங்கள் 4 யூனியன் பிரதேசங்களில் பாஜக-வுக்கு ஒரு இடம்கூட கிடைக்காமல் ‘முட்டை’ வாங்கிய சாதனையையும் பாஜக படைத்துள்ளது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் ஏற்கெனவே வெளியாகி இருந்தன.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் 18 மக்களவைத் தொகுதிகளில் பாஜக நோட்டாவோடு போட்டிபோட்டு தோற்றுப் போயிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதுபற்றிய விவரங்கள் வருமாறு:
அமலாபுரம் தொகுதியில் பாஜக பெற்றது 11 ஆயிரத்து 516 வாக்குகள் (0.94 சதவிகிதம்) ஆகும். இங்கு நோட்டா பெற்றது, 16 ஆயிரத்து 449 (1.34 சதவிகிதம்) வாக்குகள். அனக்காபள்ளியில் பாஜக 13 ஆயிரத்து 276 வாக்குகளை (1.07 சதவிகிதம்) பெற, நோட்டா மூன்று மடங்கு அதிகமாக 34 ஆயிரத்து 897 வாக்குளைப் (2.82 சதவிகிதம்) பெற்றுள்ளது. அனந்தபூரில் பாஜக பெற்றது, 7 ஆயிரத்து 604 (0.57 சதவிகிதம்) வாக்குகள் என்றால், நோட்டா அதைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக, 16 ஆயிரத்து 466 (1.23 சதவிகிதம்) வாக்குகளைப் ஆகும்.
இதேபோல அரக்கு தொகுதியில் பாஜக பெற்றது 17 ஆயிரத்து 867 (1.66 சதவிகிதம்) வாக்குகள் மட்டுமே. நோட்டாவோ, 30 ஆயிரம் வாக்குகள் அதிகமாக- 47 ஆயிரத்து 977 ( 4.46 சதவிகிதம்) வாக்குகள் அளவிற்குப் பெற்றுள்ளது. பாபட்லா தொகுதி பாஜக வேட்பாளருக்கு 10 ஆயிரத்து 351 (0.82 சதவிகிதம்) வாக்குகளே விழுந்துள்ளன. நோட்டாவோ 13 ஆயிரத்து 218 (1.04 சதவிகிதம்) வாக்குகளைப் பெற்றுள்ளது.
சித்தூரில் பாஜக-வை விட இரண்டு மடங்கு அதிகமான வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. சித்தூரில் பாஜகவுக்கு விழுந்திருப்பது 10 ஆயிரத்து 496 (0.8 சதவிகிதம்) வாக்குகள்தான். ஆனால் நோட்டாவுக்கு 20 ஆயிரத்து 556 (1.56 சதவிகிதம்) வாக்குகள் விழுந்துள்ளன. எலுரு தொகுதியில் பாஜகவுக்கு பதிவான வாக்குகளை விட, சுமார் 3 மடங்கு வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளது. இங்கு பாஜக 8 ஆயிரத்து 412 ( 0.63 சதவிகிதம்) வாக்குகளைப் பெற்றுள்ளது என்றால், நோட்டா 23 ஆயிரத்து 880 (1.8 சதவிகிதம்) வாக்குகளை அள்ளியிருக்கிறது.
இதுபோலவே, இந்துபூரில் பாஜகவுக்கு - 13 ஆயிரத்து 805 (1.03 சதவிகிதம்) வாக்குகள், நோட்டாவுக்கு 17 ஆயிரத்து 428 (1.3 சதவிகிதம்) வாக்குகள், கடப்பா தொகுதியில் பாஜகவுக்கு 4 ஆயிரத்து 85 ( 0.33 சதவிகிதம்) வாக்குகள், நோட்டாவுக்கு 14 ஆயிரத்து 692 (1.2 சதவிகிதம்) வாக்குகள், காக்கிநாடா தொகுதியில் பாஜகவுக்கு 9 ஆயிரத்து 596 ( 0.78 சதவிகிதம்) வாக்குகள், நோட்டாவுக்கு 17 ஆயிரத்து 153 (1.3 சதவிகிதம்) வாக்குகள், மசூலிபட்டணத்தில் பாஜகவுக்கு 6 ஆயிரத்து 462 (0.52 சதவிகிதம்) வாக்குகள், நோட்டாவுக்கு 14 ஆயிரத்து 77 (1.13 சதவிகிதம்) வாக்குகள், நந்தியால் தொகுதியில் பாஜகவுக்கு 9 ஆயிரத்து 66 (0.7 சதவிகிதம்) வாக்குகள், நோட்டாவுக்கு 9 ஆயிரத்து 791 (0.75 சதவிகிதம்) வாக்குகள், நெல்லூரில் பாஜகவுக்கு 12 ஆயிரத்து 513 (0.93 சதவிகிதம்) வாக்குகள், நோட்டாவுக்கு 17 ஆயிரத்து 161 (1.33 சதவிகிதம்) வாக்குகள், ஒங்கோலில் பாஜகவுக்கு 8 ஆயிரத்து 229 (0.61 சதவிகிதம்) வாக்குகள், நோட்டாவுக்கு 20 ஆயிரத்து 865 (1.55 சதவிகிதம்) வாக்குகள், ராஜமுந்திரியில் பாஜகவுக்கு 12 ஆயிரத்து 334 (0.99 சதவிகிதம்) வாக்குகள், நோட்டாவுக்கு 18 ஆயிரத்து 087 (1.45 சதவிகிதம்) வாக்குகள், ஸ்ரீகாகுளத்தில் பாஜகவுக்கு 8 ஆயிரத்து 390 (0.72 சதவிகிதம்) வாக்குகள், நோட்டாவுக்கு 25 ஆயிரத்து 545 (2.21 சதவிகிதம்) வாக்குகள், திருப்பதியில் பாஜகவுக்கு 16 ஆயிரத்து 125 (1.23 சதவிகிதம்) வாக்குகள், நோட்டாவுக்கு 25 ஆயிரத்து 781 (1.96 சதவிகிதம்) வாக்குகள், விஜயநகரத்தில் பாஜகவுக்கு 7 ஆயிரத்து 266 (0.6 சதவிகிதம்) வாக்குகள், நோட்டாவுக்கு 29 ஆயிரத்து 501 (2.42 சதவிகிதம்) என வாக்குகள் பதிவாகியுள்ளன.