tamilnadu

img

மத்திய அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெறச் செய்திடும் முடிவை விலக்கிக்கொள்க!

புதுதில்லி:
மத்திய அரசு தன் ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வு பெறவைத்திடும் முடிவினை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் மத்திய அரசு ஊழியர்கள்-தொழிலாளர்கள் தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் – தொழிலாளர்கள் மகா சம்மேளனம் எச்சரித்துள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் செக்ரடரி ஜெனரல் ஆர்.என். பரசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு ஊழியர்கள்-தொழிலாளர்கள் மகா சம்மேளனம், மத்திய அரசு தன்னிச்சை யாகவும், ஒருதலைப்பட்சமாகவும் முப்பது ஆண்டுகள் பணிநிறைவடைந்தது, 50/55 வயது நிறைந்த மத்திய அரசு ஊழியர்கள் எவராக இருந்தாலும்,  மத்திய அரசு விருப்பப்பட்டால், ஊழியர் ஓய்வு பெறும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, “அரசு ஊழியர் திறமையற்றவர்” என்றோ, “சந்தேகத்திற்குரிய முறையில் நேர்மையற்றவர்”  என்றோ அல்லது அற்பக் காரணங்கள் வேறெதையாவது கூறியோ, வலுக்கட்டாயமாக முன்கூட்டியே ஓய்வு பெறச் செய்வதற்கு வகை செய்யும் விதத்தில் ஆகஸ்ட் 28 அன்று ஓர் அரசுக் குறிப்பாணை வெளியிட்டிருக்கிறது. இதனை மத்திய அரசு ஊழியர்கள் – தொழிலாளர்கள் மகா சம்மேளனம் கடுமையாக எதிர்க்கிறது.

இவ்வாறு ஊழியர்களை வெளியேற்றுவதற்கு, அரசு அதிகாரிகளுக்கு வகைதொகையின்றி அதிகாரங்களை இந்தக் குறிப்பாணை வழங்கியிருக்கிறது. இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் அரசு ஊழியர் இது தொடர்பாக முன்கூட்டியே கேட்கப்படுவதற்கு எவ்வித வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. இது இயற்கை நீதிக்கு எதிரானது. அவ்வாறு பணியிலிருந்து வெளியேற்றப்படுபவர், விரும்பினால் இது தொடர்பாக அரசாங்கத்தால் அமைக்கப்படும் ஆலோசனைக் குழு (Advisory Committee)முன்பு ஆஜராகி தன் குறையைத் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.இத்தகைய அரசாங்கத்தின் எதேச்சதிகார அணுகுமுறையை மத்திய அரசு ஊழியர்கள் – தொழிலாளர்கள் மகா சம்மேளனம் கடுமையாக எதிர்க்கிறது. இதனை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது. அவ்வாறு விலக்கிக்கொள்ளப்படாவிட்டால், மத்திய அரசு ஊழியர்கள் தொடர்  போராட்டங்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.          (ந.நி.)

;