tamilnadu

img

சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் பன்மொழி வித்தகர் ராகுல் சாங்கிருத்யாயன் - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 8

திபெத்திய நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலி, சமஸ்கிருத நூல்கள் இருந்தன. அவற்றில் பல முக்கிய நூல்களை ராகுல் பிரதி எடுத்து கொண்டு வந்து பாட்னா மியூசியத்திற்கு வழங்கினார். தாந்ரீக மற்றும் சூத்திர கிரந்தங்களின் பட்டியல் நூல்கள் ஜப்பானில் வெளியிடப்பட்டன. பௌத்த தர்க்க ஞானிகள் நாகார்ஜூனரின் மாத்தியாமிகம், அசங்காவின் யோகாச்சாரம், பத்மசம்பவா, புசிதான், தாராநாத் ஆகியோர் எழுதிய கிரியா, தந்திரா, சார்யா தந்திரா, யோக தந்திரா நூல்களை ராகுல் எடுத்து வந்தார். ராகுல் அரசியலில் தீவிரப் பங்கேற்றார். 1939ல் பீகாரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் அவர் பூரணமாக ஈடுபட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையின் மோசமான நிலைமைகளை எதிர்த்து இரண்டு தடவை உண்ணாவிரதம் இருந்தார். ஒருமுறை 10 நாட்களும், மறுமுறை 17 நாட்களும். சில மாதங்களுக்கு பின் விடுதலை பெற்றார். 1940-42ல் 29 மாதங்கள் ஹஜாரிபாக், தேவாலி சிறைகளில் இருந்தார். ராகுல், தர்ஷன்- திக்- தர்ஷன் (847 பக்கங்கள்) போன்ற மகத்தான நூல்களை எழுதுவதில் இத் தண்டனை காலத்தைச் செலவிட்டார். 

கிரேக்க, இஸ்லாமிய, ஐரோப்பிய, இந்திய தத்துவ முறைகளை விமர்சன ரீதியில் ஆய்வு செய்து, மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கவுரை தரும் இம்முயற்சியை அவர் முதல் முறையாக இந்தியில் எழுதினார். மூவாயிரம் வருடத்திய தத்துவ சிந்தனைகளை, ஒரு புதிய பகுத்தறிவுவாத - மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் ஆராயும் மிகப் பெரிய படைப்பு ஆகும் அது. அவர் எழுதிய நவ இந்தியாவின் புதிய தலைவர்கள் பற்றிய நயே பாரத் கே நயே நேதா இரண்டு பாகங்கள் ஆகும். காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா, தோழர்கள் யூசுப், பரத்வாஜ், எஸ்.ஜி.சர்தேசாய், சுவாமி சகஜானந்த், எஸ்.ஏ. டாங்கே, கல்பனா தத்- ஜோஷி, பங்கிம் முகர்ஜி, பி.சுந்தரய்யா, கே.கேரளீயன், ஆர்.பி.மூர், டாக்டர் ஜி.அதிகாரி, டாக்டர் கே.எம்.அஷ்ரப், பி.சி.ஜோஷி, எஸ்.எஸ்.பாட்லிவாலா, முகம்மத் ஷாகித், சையத் ஜமாலுதின் புகாரி, பஸ்ல் இலாஷி குர்பான், முபாரக் சாகர், டாக்டர் இஸட். ஏ.அகமத், மகமது ஜப்பார், ‘நிராலா’, பந்த் மற்றும்பலரின் வாழ்க்கைக் குறிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. இப்புத்தகத்திற்காக ராகுல் ஒவ்வொருவரையும் பேட்டி கண்டு, அவரவருடைய குடும்ப வரலாறு, பிள்ளைப் பருவம், வாழ்வுத் தொழில், சமூக- அரசியல் போராட்டங்கள் மற்றும் செயல்கள் பற்றிய விவரங்களை சேகரித்தார். இந்தியாவின் சோசலிஸ்ட் சிந்தனை இயக்கத்தின் வரலாறு சம்பந்தமாக ஆய்வு செய்கிறவர்களுக்கு இது மதிப்புமிகுந்த ஆதார நூலாகப் பயன்படும். துரதிர்ஷ்டவசமாக, இந்தப்புத்தகம் இப்போது கிடைப்பதில்லை. பல வருடங்களாக இதன் மறு பதிப்பு அச்சிடப்படவேயில்லை.

மனிதகுல வரலாறு பற்றி அவர் கூறும்போது, “பல கோடி வருடங்களாக மனிதன் பூமி மீது வசித்துவந்த போதிலும், அவனது அறிவு முன்னேற்றத்தின் மிக உயர்வான மகிமை பொருந்திய காலம் கி.மு.5000 முதல் கி.மு.3000 க்கு உட்பட்டதேயாகும். மனித சமுதாயத்தின் தோற்ற அமைப்பை மாற்றிய விவசாயம், பாசனமுறை, ஞாயிறு பஞ்சாங்கம் மற்றும் இவை போன்ற முக்கியமான கண்டுபிடிப்புகளையும் அப்போது தான் அவன் செய்தான். பின்பு கி.பி.1760க்குப் பின்னர் தான் மீண்டும் இத்தகைய அறிவார்ந்த வேகத்தை நாம் காண்கிறோம். நவீன கண்டுபிடிப்புகள் தொடர் சங்கிலியாகத் தொடங்குகின்றன. அப்போது முதல் காலகட்டத்தில் தத்துவம் இருந்ததில்லை. இரண்டாவது கட்டத்திலோ, தத்துவம் தனது வயது எல்லையையும் மீறி உயிரோடிருக்கிற ஒரு கிழவன் போல் தோன்றுகிறது. அவன் அவனுடைய வயதுக்காக மதிக்கப்படுகிறான்; ஆனால், அவன் அறிவியலை- சோதனைரீதியாக உண்மைப்படுத்தப்பட்ட சிந்தனையை, தனக்குத்துணை கொள்கிறபோது தான் அவனுடைய வார்த்தைகள் மக்களின் கவனத்தைக் கவர்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

வால்காவிலிருந்து கங்கை வரை ராகுலின் மகத்தான கற்பனை படைப்பாகும். இந்தி முற்போக்கு இலக்கியத்தில் அது ஒருமைல் கல் என்று அநேக வருடங்களாகப் பேசப்படுகிறது. இந்திய வரலாற்றின் உண்மைகளைத் தன்னிச்சையாகத் திருத்தி மாற்றி எழுதியிருப்பதை மறை பொருள் வாத மற்றும் புதுப்பிக்கும் போக்குகளைச் சேர்ந்த விமர்சகர்கள் எதிர்த்திருக்கிறார்கள். வரலாற்று மற்றும் இயங்கியல் பொருள் முதல் வாதத்தை ஆதாரமாகக் கொண்டு மறுவிளக்கம் செய்யப்பட்டுள்ள சித்திரம் என்று மார்க்சியவாதிகள் அதைக் கூறுகிறார்கள். இந்தப் படைப்பைப் பற்றிய ஒரு விளக்கமான விவரிப்பை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும். உண்மையில், அது கற்பனை வடிவத்தில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் படைப்பேயாகும்.  “ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்திருக்கக்கூடிய இந்திய சமுதாயத்தின் சரியான சித்திரங்களைத் தருவதற்கு நான் முயன்றிருக்கிறேன். ஆனால் இந்தவித முதல் முயற்சிகளில் தவறுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் எப்போதும் உண்டு. இதை விடச் சரியான திட்டவட்டமான சித்தரிப்பை வருங்கால எழுத்தாளர்கள் தருவதற்கு நான் உதவியாக இருப்பேன். ஆனால் அதை எனது பெரும் பேறு ஆகவும் சாதனையாகவும் மதிப்பேன் என்று ராகுல் கூறினார். சிறுவனாய் இருந்தபோது அவரது சொந்தக் கிராமத்தில் பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டார். பெயருக்கு இருந்த அந்த மனைவியை 34 வருடங்களுக்கு பிறகு இவரது கிராமத்திற்கு போனபோது முதல் மனைவி அவரை சந்திக்க வந்தார். அது பெரும் துயரம் தந்ததாக ராகுல் வருந்தினார்.

ராகுல் 1944- 47 ரஷ்யாவில் லெலின்கிராடு பல்கலைக்கழகத்தில் நான்காண்டுகள் பேராசிரியாக பணியாற்றினார். ரஷ்யாவில் பணியாற்றிய போது ஒரு ரஷ்ய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஜெயா என்ற மகளும், ஜேடா என்ற மகனும் பிறந்தனர். 1959-61 வரை ஸ்ரீலங்காவில் தத்துவ பேராசிரியராக மூன்றாண்டுகள் பணியாற்றினார். 1961 இறுதியில் ராகுல் தனது நினைவாற்றலை இழந்தார். 1962ல் சிகிச்சைக்காக சோவியத் ரஷ்யாவில் ஏழுமாதக் காலம் தங்கியிருந்தார். சிகிச்சை பலனிக்காமல் 14- 4- 1963ல் ராகுல் டார்ஜிலிங்கில் காலமானார்.   அவர் எழுதியவற்றில் 12 ஆயிரம் பக்கங்கள் அச்சு ஏறாமலே உள்ளன என்றும் இந்தியில் எழுதப்பட்ட அவருடைய ஆயிரக்கணக்கான பக்கங்கள் வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்படாமலே உள்ளன என்றும் கூறப்படும் செய்தி நமக்கு வருத்தம் அளிக்கிறது.