tamilnadu

img

பிஎம்கேர்ஸ் நிதியத்திலிருந்து 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பிஎம்கேர்ஸ் நிதியத்திலிருந்து, 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அரசு அறிக்கை ஒன்று கூறுகிறது. இதில் 2000 கோடி ரூபாய் வெண்டிலேடர்கள் வாங்குவதற்கும், 1000 கோடி ரூபாய் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், 100 கோடி ரூபாய் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் அலுவலகத்திலிருந்து புதன் அன்று மாலை வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில், வெண்டிலேடர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பது தொடர்பான வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

பிஎம்கேர்ஸ் நிதியம் மே 27 அன்று உருவாக்கப்பட்டபின் முதன்முதலாக இப்போதுதான் இதன் மீதான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆயினும் இந்த நிதியத்திற்கு இதுவரை வந்திருக்கிற நிதி எவ்வளவு என்று இது தொடர்பான இணையத்தில் காணப்படவில்லை.

50 ஆயிரம் வெண்டிலேடர்கள் வாங்குவதற்காக 2000 கோடி ரூபாய்

கொரானா வைரஸ் தொற்றைச் சமாளித்திடத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்காக, பிஎம்கேர்ஸ் நிதியம் அறக்கட்டளை, 50 ஆயிரம் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெண்டிலேடர்களை 2 ஆயிரம் கோடி ரூபாயில் வாங்குவதற்காக, செலவிடத் தீர்மானித்திருப்பதாகவும்,  இவ்வாறு வாங்கப்படும் வெண்டிலேடர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள  அரசாங்க மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 1000 கோடி ரூபாய்

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மாநிலங்கள் நல நடவடிக்கைகளை ஆதரித்திட 1000 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும் என்றும், இது அவர்கள் தங்குவதற்கு, உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் போக்குவரத்துக்கு உதவிடும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்தத்தொகை மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் 50 சதவீதமும், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையின் அடிப்படையில் 40 சதவீதமும், 10 சதவீதம் குறைந்தபட்சம் அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கும் விதத்திலும் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை, மாவட்ட நிர்வாகத்திற்கு, மாநில பேரிடர் நிவாரண ஆணையர்கள் மூலமாக விடுவிக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

100 கோடி ரூபாய் தடுப்பூசி கண்டுபிடிப்புக்காக

இந்திய அறிவியலாளர்கள், கோவிட்-19க்கு எதிராக ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்து வடிவமைப்பதற்கான பணிகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கப்படும் என்றும், இந்தத் தொகை தலைமை அறிவியல் ஆலோசகர் (Principal Scientific Adviser) மேற்பார்வையின்கீழ் செலவிடப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

(ந.நி)

;