tamilnadu

img

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக

புத்தாண்டிலும்  கிளர்ச்சி

புதுதில்லி, ஜன.2- புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று நாட்டின் தலைநகரான புதுதில்லியின் பல பகுதிகளில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம்

ஜாமியா மிலியா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற கிளர்ச்சியில், கிளர்ச்சி யாளர்கள் ஃபைஸ் அகமது ஃபைஸின் புகழ் பெற்ற பாடல்களைப் பாடி, புத்தாண்டைக் கொண்டாடினார்கள். புதுதில்லியில்  நடைபெறும் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம்  தற்போது குவிமையமாக மாறி இருக்கிறது. கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் தேசியக் கொடி களை ஏந்திய வண்ணம் பல்கலைக் கழகத்தின் வெளியே இருந்த வீதிகளில் முழக்கமிட்டுச் சென்றார்கள். இந்தித் திரைப்பட நடிகை ஸ்வரா பாஸ்கர் மற்றும் அவருடன் திரைப்படங்களில் நடிக்கும் ராஞ்சிஹானா முகமது ஷீஷான் அய்யூப் ஆகியோரும் பல்கலைக் கழகத்திற்கு வெளியே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை யாற்றினார்கள். அப்போது போராட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கிளர்ச்சி யாளர்களை வெகுவாகப் பாராட்டினார்கள்.

ஸ்வாரா பாஸ்கர் பேசும்போது, “நாங்கள் தாமதமாகத்தான் விழித்திருக்கிறோம். எனினும் மாணவர்களாகிய நீங்கள் தூங்கிக்கொண்டி ருந்த இந்த நாட்டையே ஒட்டுமொத்தமாக விழித்துக்கொள்ள வைத்துவிட்டீர்கள். அதற் காக உங்களுக்கு நன்றி சொல்வதற்காகவே இங்கே இப்போது நாங்கள் வந்திருக்கிறோம்,” என்றார்.  மேலும் அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானது என்றும் கூறினார்.  மேலும் அவர் பேசும்போது, பாடலாசிரியர் வருண் குரோவரின் “நாங்கள் உங்களுக்கு ஆவணங்களைக் காட்டமாட்டோம்” என்று பொருள்படும் ‘ஹம் க்காஷ் நஹி திகயாங்கே’ என்ற பாடலை மேடையில் பாடினார். அய்யூப் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்றும் “இந்தியர் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே” என்றும் முழக்கமிட்டார்.

இந்தியா கேட்

இதேபோன்று இந்தியா கேட் முன்பும் கிளர்ச்சியாளர்கள் முழக்கங்களிட்டு, புத்தாண்டைக் கொண்டாடினார்கள். மேலும் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை உரத்துப் படித்துக் காண்பித்தும், இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காத்திடுவோம் எனவும் சபதம் ஏற்றுக் கொண்டார்கள். புத்தாண்டு தினமான புதனன்று, இந்தியா கேட் அருகே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்று சபதம் எடுத்துக் கொண்டார்கள்.

பல்வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து திரண்டு வந்திருந்த மாணவர்களுடன், பல மாநிலங்களிலிருந்து மக்கள் திரளினரும் வந்திருந்தார்கள். அனைவரும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகிய வற்றுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். லக்னோவிலிருந்து வந்திருந்த சிவாலிகா ஆச்சார்யா என்னும் பெண்மணி, தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதற்காகவே தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

“மாணவர்களின் துன்பங்கள் கண்டு என் இதயத்தில் ரத்தம் வடிகிறது. போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருப்பதன் மூலம் அவர்கள் தங்கள் வலுவைக் காட்டி யிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நிலைமை  மிகவும் கடுமையாகும். அதனால்தான் நான் இங்கே வந்து போராடுபவர்களுடன் என்னை  இணைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நடைபெறும் போராட்டம் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுதந்திரத்திற்காகப் போராடிய வர்களின் போராட்டத்தை விடக் எந்தவிதத் திலும் குறைந்ததல்ல,” என்று சிவாலிகா ஆச்சார்யா கூறினார். தில்லியைச் சேர்ந்த ஹன்னா பேசும்போது, “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவை மக்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிடுகின்றன. இவற்றின் மூலமாக சாமானிய ஏழை மக்கள் எந்த அளவிற்குச் சிரமப்படுவார்கள் என்பது இந்த அரசாங்கத்திற்கு வேண்டுமானால் தெரி யாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியது நம் கடமையாகும். குடியுரிமையை மெய்ப்பித்திட நம்மிடம் ஆவணங்கள் இல்லை என்பதுடன் இது நின்று விடாது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட இருக்கும் எழுத்தறிவற்றவர்கள்,  ஏழைகள் பக்கம் நாம் நின்றிட வேண்டும்,” என்றார். ந.நி.

 

;