tamilnadu

img

சரணாகதி அடைந்த அதிமுக கெஜ்ரிவால், சந்திரபாபு, ஜெகன் ரெட்டி, மாயாவதி ஆகியோருக்கு குவியும் கண்டனங்கள்

புதுதில்லி, ஆக. 6- 370வது பிரிவை நீக்கும் மோடி அரசாங்கத்தின் முடிவை சில எதிர்க்கட்சிகள் - அதுவும் மாநிலக் கட்சிகள் ஆதரித்துள்ளன. இந்த ஆதரவுக்கு பின்னால் உள்ள  குறுகிய நோக்கம் கண்டனத்திற்குரியது என இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பலரும் கடும் கண்டனம் எழுப்பியுள்ளனர். இந்த ஆதரவில் முன்னால் நிற்பது அ.இ.அ.தி.மு.க.தான்! ஜெயலலிதா வழியில் இதனை ஆதரிப்பதாக மாநிலங்களவையில் நவநீத கிருஷ்ணன் கூறியுள்ளார். அதே ஜெயலலிதாதான் மின் துறையில் உதய் திட்டத்தையும் ஜி.எஸ்.டி. யையும் எதிர்த்தார். ஆனால் அவற்றை எடப்பாடி அரசாங்கம் மண்டியிட்டு ஏற்றுக் கொண்டது என்பது நினைவுகூரத்தக்கது. தமிழகத்தை இரண்டாக பிரிப்பதை அனுமதிக்க மாட்டோம் எனவும் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நவநீத கிருஷ்ணன் கூறியுள்ளார். பாவம் இவர்!  ஒரு மாநிலத்தை துண்டாக்கும் அதிகாரத்தை மோடியும் அமித் ஷாவும் பறித்து கொண்டனர் என்பதும் அதனை இவர் ஆதரித்தார் என்பதையும் மறந்து பேசியுள்ளார்.

அண்ணா என்ன கூறினார்?
1967ம் ஆண்டு அறிஞர் அண்ணா பதவி யேற்ற பொழுது கீழ்கண்டவாறு கூறினார்: “தேசத்தின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கத் தேவையான அதிகாரங்களை மட்டும் தன் கீழ் வைத்துக் கொண்டால் மத்திய அரசாங்கத்துக்கு போது மானது; மற்ற  அதிகாரங்கள் அனைத்தையும் மாநிலங்களுக்குத் தர வேண்டும்” 

இதன் பொருள் என்ன? 
இராணுவம், வெளியுறவுக் கொள்கை, தகவல் தொடர்பு, தேசம் முழுவதும் அமலாக்க வேண்டிய சில முக்கிய பொருளாதாரக் கொள்கைகள் தவிர மற்ற அனைத்து அதி காரங்களும் மாநிலங்களிடம்தான் இருக்க வேண்டும் என்பதே அண்ணாவின் கொள்கை யாக இருந்தது. இத்தகைய அதிகாரங்களைத் தானே 370 மற்றும் 35ஏ பிரிவுகள் காஷ்மீருக்கு அளித்தன? பின்னர் ஏன், அண்ணாவின் பெயரை தாங்கியுள்ள அ.இ.அ.தி.மு.க. இந்த பிரிவுகளை அகற்றுவதை ஆதரிக்க வேண்டும்? பா.ஜ.க.விடம் சரணாகதி என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க இயலும் என்ற கேள்விக் கனைகள், அதிமுகவைத் துரத்தத் துவங்கியுள்ளன.

ஜெகன் - சந்திரபாபு நாயுடு போட்டி ஆதரவு
ஆந்திராவின் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் இந்த பிரச்சனையில் மோடி அரசாங்கத்தை ஆதரித்துள்ளது. சமீபத்தில்தான் ஜெகன் ரெட்டி அரசாங்கம் ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனங்கள் உட்பட வேலை வாய்ப்புகளில் 75% உள்ளூர் மக்களுக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் என சட்டம் இயற்றியது.  காஷ்மீரில் உள்ள வேலை வாய்ப்புகள் காஷ்மீர் மக்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதைதானே 35ஏ பிரிவு உத்தரவாதப் படுத்துகிறது. பின்னர் ஏன் ஜெகன் ரெட்டி 370/35ஏ பிரிவு நீக்கப்படுவதை ஆதரிக்க வேண்டும்? சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை ஜெகன் ரெட்டியிடமிருந்து பறிமுதல் செய்த சுமார் ரூ.740 கோடியை திருப்பி அளித்தது. இதற்கும் ஜெகன் ரெட்டியின் மோடி ஆத ரவுக்கும் தொடர்பு உள்ளது என எவராவது எண்ணினால் அது அவர்களின் சொந்தக் கற்பனையாகி விடுமா? வினோதம் என்னவெனில், ஜெகனின் பரம அரசியல் எதிரியான சந்திரபாபு நாயுடுவும் மோடி அரசாங்கத்தை ஆதரித்துள்ளார். “காஷ்மீரில் அமைதியும் வளமும் நிலவ வேண்டும்” என விரும்புகிறாராம். 370 பிரிவு நீக்கமும் காஷ்மீர் அமைதியும் நேர் கோட்டில் பயணிக்க வாய்ப்பு இல்லை என்பது அனுபவ அரசியல்வாதியான சந்திரபாபு நாயுடு  அறியாததா என்ன? பா.ஜ.க.வின் கருணைப் பார்வைக்கு போட்டியிடும் ஜெகன் ரெட்டியும் சந்திரபாபு நாயுடுவும் ஆந்திராவின் உரிமை களுக்கு, அதுவும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் உரிமைக்கு பாதகத்தை விளைவிக்கின்றனர் என்பது மட்டும் உண்மை!

கெஜ்ரிவாலின் விநோத நிலை
மோடி அரசாங்கத்தின் செயலை ஆம்  ஆத்மி கட்சியும் ஆதரித்துள்ளது. மாநிலங் களவையில் காலையில் ஆம் ஆத்மி உறுப்பின ர்கள் எதிர்த்தனர். ஆனால் மதியம் கெஜ்ரிவால்  தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரி வித்தார். ஆதரவுக்கான காரணத்தை தெரிவிக்க வில்லை. தில்லி யூனியன் பிரதேசத்தை மாநில மாக உயர்த்த வேண்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் தொடர் போராட்டமாக இருந்து  வருகிறது. ஆனால் மாநிலமாக இருந்த ஜம்மு  - காஷ்மீரை மோடி அரசாங்கம் யூனியன் பிரதேச மாக தரம் தாழ்த்தி உள்ளது. இதனை கெஜ்ரி வால் ஆதரிப்பது என்ன அரசியல் என்பது  அவருக்கே வெளிச்சம். “பாரத் மாதா இப்பொழுதுதான் வலு வடைந்துள்ளார்” என பிஜு ஜனதா தளம் கூறி யுள்ளது. 370வது பிரிவை நீக்கியதன் மூலம் பாரதமாதா பலவீனமடைந்துள்ளார் என்பதே உண்மை. மாயாவதியின் கட்சியும் 370 பிரிவு அகற்றுவதை ஆதரித்துள்ளது. ஆனால் காரணம் என்ன என்பதைக் கூறவில்லை.

நாகா மக்களின் கவலை
மோடி அரசாங்கத்தின் இந்த செயல் காஷ்மீருக்கு எதிரானது மட்டுமல்ல; மாநில சுயாட்சிக்கு மதிப்பு அளிக்கிற ஒவ்வொரு இயக்கத்தின் மீதும் நாளையோ அல்லது பின்னரோ தாக்குதல் நிகழ்த்தப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனை நாகாலாந்து மக்கள் வெளிப்படுத்துகிற கவலையிலிருந்து புரிந்து கொள்ளலாம். 370வது பிரிவு போல தமது கலாச்சாரம், பண்பாடு மற்றும் நில உரிமைகளை காக்கும் 371ஏ பிரிவும் அகற்றப்படுமோ எனும் பயமும் கவலையும் நாகா மக்களுக்கு உருவாகியுள்ளது. இந்த பிரிவின்படி நாகா மக்களின் பண்பாடு, கலாச்சாரம், நிர்வாக முறை, நீதி முறை மற்றும் நில உரிமை உட்பட ஏனைய இயற்கை வளங்களின் உரிமை ஆகியவற்றில் இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரம் செல்லுபடியாகாது. அப்படி செல்லுபடியாக வேண்டும் எனில் நாகாலாந்து சட்டமன்றம் அனுமதிக்க வேண்டும். நாகாலாந்தை ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் மெரன்டோஷி ஜமீர் “370வது பிரிவு நீக்கப்பட்டது குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம்; எனினும் நாகா பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடக்கும் இந்த தருணத்தில் (371ஏ குறித்து) மத்திய அரசாங்கம் எந்த பாதகமான நடவடிக்கையும் எடுக்காது என நம்புகிறோம்” எனக் கூறுகிறார். எதிர்க்கட்சியாக உள்ள நாகா மக்கள் முன்னணியின் தலைவர் அச்சும்பெமோ கிக்கோ “ 371ஏ பிரிவை நீக்க முயன்றால் நாகா மக்கள் கோபம் அடைவர். இது பல மோசமான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும். எனவே 371ஏ பிரிவில் கை வைக்கும் தைரியம் மத்திய அரசாங்கத்திற்கு வராது என நம்புகிறோம்” என எச்சரித்துள்ளார். முட்சிகியோ யோபு எனும் இன்னொரு நாகா தலைவர் “ இந்த அரசாங்கம் எந்த ஒரு சமூகம் அல்லது மாநிலமும் எவ்வித விசேட உரிமையும் பெறக்கூடாது என எண்ணுகிறது. அனைவருக்கும் ஒரே சிவில் சட்டத்தை  புகுத்துவதில்தான் கவனம் செலுத்தப்படு கிறது” என குற்றம் சாட்டுகிறார். ஆகவே மோடி அரசாங்கத்தின் இந்த செயல்  காஷ்மீருடன் நின்றுவிடுமா எனும் உறுதியை எவரும் கூற இயலாது. ஏனெனில் பாசிச ஆர்எஸ்எஸ்-சின் வழிகாட்டுதலில் இந்து ராஷ்ட்ராவை நோக்கிய ஒரு முக்கிய நகர்வு இது என்பதும் மறுக்க முடியாத உண்மை.  இன்று தமது சுயநலனுக்காக அல்லது அர சியல் லாபத்திற்காக மோடி அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் நாளை நிச்சயம் தமது தவறை உணரும் தருணம் வரும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க இயலாது.

தொகுப்பு : அ. அன்வர் உசேன்
தகவல்கள் : நியூஸ் கிளிக்/ இந்தியன்
எக்ஸ்பிரஸ்/ தமிழ் இந்து