கெஜ்ரிவால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிருந்தாகாரத் - கே.எம். திவாரி கடிதம்
புதுதில்லி, பிப்.28 முஸ்லீம்கள் மீதான வன்முறை வெறி யாட்டங்களில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சித்தலை வர்கள் மீது தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பிருந்தா காரத்தும், கே.எம்.திவாரியும் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக கெஜ்ரிவாலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், தில்லி மாநில செயலாளர் கே.எம். திவாரி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தில்லியில் மக்கள் மத்தியில் அமைதியை யும், மத நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் எங்கள் கட்சி முழு ஒத்துழைப்பு நல்கும் என தங்களுக்கு உறுதி அளிப்பதற்காக இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறோம். இது தொடர்பாக வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறோம். தில்லி காவல்துறை, உங்கள் அதி காரவரம்பெல்லைக்குள் இல்லை என்பதாலும் மாறாக அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் உங்களுக்கு உள்ள சிரமங்களை நாங்கள் முழுமையாக அறிவோம். இருப்பினும், உங்கள் அரசாங்கத்தால் கூடுதலாக சில நடவடிக்கைகளை எடுக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். தலை நகரில் மத நல்லிணக்கத்தையும், அமைதியை யும் எப்படி அனைவரும் ஒன்றுபட்டு நின்று உத்தரவாதப்படுத்திட முடியும் என்பதனைத் தீர்மானிப்பதற்காக, தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்.
பொதுவெளியில் வெளியாகியுள்ள காணொலி ஒன்றில், ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் ஒருவர் தன்னுடைய வீட்டின் மாடியில் நின்று கொண்டு, அவர்முன்னிலையில் பலர் பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசிக்கொண்டி ருந்த காட்சி மிகவும் கவலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நபருக்கு எதிராக காவல்துறையினரால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் விலக்கு அளிக்கப்படக்கூடாது என்று அறிக்கை விடுத்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. எனவே வன்முறையில் ஈடுபட்ட உங்கள் கட்சி நபர்கள்மீது கட்சியின் தலைவர் என்ற முறையில் நீங்கள் நடவடிக்கை எடுத்தால் தில்லி மக்கள் மத்தியில் அது ஒரு வலுவான செய்தி யாகச் சென்றடையும். இவ்வாறு அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
(ந.நி.)