tamilnadu

img

6 மூத்த அமைச்சர்களின் பதவியைப் பறித்த மோடி!

புதுதில்லி:
கேபினட் அமைச்சர்கள் 25 பேர், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் 9 பேர், இணையமைச்சர்கள் 24 என மொத்தம் 57 பேர் கொண்ட அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தியுள்ளார்.

இவர்களில் 23 பேர் புதுமுகங்கள், 6 பேர் பெண்கள் என்றெல்லாம் கூறப்படும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பது, பாஜக தொண்டர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.பிரதமர் மோடியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்கு இம்முறை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

66 வயதான அருண் ஜெட்லி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னணியில், கடந்த ஓராண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோன்று உடல்நலமின்மையைச் சொல்லியே, சுஷ்மா ஸ்வராஜின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற ராஜ்யவர்தன் ரத்தோருக்கு 49 வயதுதான் ஆகிறது. கடந்த ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த அவருக்கும், தற்போது புதிய அமைச்சரவையில் இடமில்லை. ரத்தோர், சொந்த மாநிலமான ராஜஸ்தானில் போட்டியிட்டு 2-வது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மோடியின் முந்தைய அமைச்சரவையில், விமானப் போக்குவரத்து துறை இணைஅமைச்சராக பதவி வகித்த ஜெயந்த் சின்காவின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. முதலில் அவர் நிதித்துறை இணை அமைச்சராகத்தான் இருந்தார். பின்னர் அவருக்கு விமானப் போக்குவரத்துத் துறை வழங்கப்பட்டது. இவரது தந்தை பாஜக-வின் மூத்தத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது. 

மோடியின் முந்தைய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இடம் பெற்றிருந்த ஜே.பி. நட்டாவுக்கும் இந்த முறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. இவர் இமாசலப்பிரதேசத்தில் வெற்றிபெற்றுள்ளார். ஒரே ஆறுதல் என்னவென்றால், இவருக்கு பாஜக தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருப்பதுதான்.

;