tamilnadu

img

27 சதவீத மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் இல்லை? என்சிஇஆர்டி அதிர்ச்சித் தகவல்

புதுதில்லி:
27 சதவீத பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கான ஸ்மார்ட்போ ன்கள், லேப்டாப்கள் கிடைக்கவில்லை என என்சிஇஆர்டி ஆய்வுகள் தெரிவிக்கிறது.கேந்திரியா வித்யாலயாஸ், நவோதயா வித்யாலயாஸ் மற்றும் சிபிஎஸ்இ இணைந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உரிமையாளர்கள் உட்பட 34,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட என்சிஇஆர்டி ஆய்வில் ஆன் லைன் கல்வியை நன்கு அறிந்து இருக்கவில்லை என தெரியவந்து உள்ளது.மேலும் ஆசிரியர்கள் ஆன்லைன் கற்பித்தல் பற்றி நன்கு அறிந்திருக்கவில்லை. இது கற்றலில் பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளன.

கடினம் - சுமை
கல்வி அமைச்சகம் பகிர்ந்து கொண்ட ஆய்வுகளின்படி, அதன் ‘மாணவர்கள் கற்றல் மேம்பாட்டு வழிகாட்டுதலின்’ ஒரு பகுதியாக, ஆன்லைன் கற்றல் “கடினமாக” அல்லது “சுமையாக” இருப்பதாக சுமார் 33 சதவீதம் மாணவர்கள் உணர்ந்து உள்ளனர்.இந்த ஆய்வில் “ஏறக்குறைய 27 சதவீத மாணவர்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் கிடைக்கவில்லையெனக் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா  காலகட்டத்தில் கற்பித்தல்-கற்றல் செய்வதற்கான ஒரு ஊடகமாக அதிகபட்ச  மொபைல் போன்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று என்என்சிஇஆர்டி ஆய்வு தெரிவிக்கிறது.“சுமார் 36 சதவீத மாணவர்கள் பாடப்புத்தகங்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் பிற புத்தகங்களைப் பயன்படுத்தினர். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உரிமையாளர்களின் இரண்டாவது  விருப்பமாக லேப்டாப் உள்ளது. 

கொரோனா காலத்தில் கற்றலுக்காக தொலைக்காட்சி, வானொலி ஆகியவை மிகக்குறைந்தளவே பயன்படுத்தப்பட்டுள்ளது.“பாதி மாணவர்கள் தங்களுக்கு பள்ளி பாடப்புத்தகங்கள் இல்லை என்று கூறினர். மின் பாடப்புத்தகங்கள் என்சிஇஆர்டி வலைத்தளம் மூலம் கிடைத்தாலும், பாடப்புத்தகங்களின் நகல்களைப் படிக்கப் பழகுகிறார்கள்,  கணிதத்தை ஆன்லைன்  வழியாகக் கற்றுக்கொள்வது கடினம் என்று பெரும்பான்மை யானவர்கள் சுட்டிக்காட்டினர்.

கடினமாகும் கணிதம் - அறிவியல்
கணிதத்திற்கு அடுத்ததாக, அறிவியல் கவலைக்குரிய விஷயமாக அடையாளம் காணப்பட்டது, ஏனெனில் இது ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் ஆய்வகத்தில் மட்டுமே செய்யக்கூடியவை. பெரும்பாலானவை நடைமுறை சோதனைகளாக உள்ளன. பெரும்பாலான மாணவர்கள் சமூக அறிவியலைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.17 சதவீத மாணவர்கள் தங்களது தாய்மொழியையே கற்றுக்கொள்வது கடினம் என்கின்றனர். சில மாணவர்கள் ஆன் லைனில் உடற்கல்வி வகுப்பு தேவை. கொரோனா காலத்தில் இதை எதிர்த்துப் போராடுவதற்கு உடல் தகுதியும் அதற்கான கலைகளும் தேவையென தெரிவித்துள்ளனர்.என்.சி.இ.ஆர்.டி கணக்கெடுப்பு  முடிவுகளின் அடிப்படையில், கல்வி அமைச்சகம் மாணவர்களின் கற்றல் மேம்பாட்டு வழிகாட்டுதல்களை வகுத்துள்ளதாம்.

கிராமப்புறமும் நகர்ப்புறமும்
இந்தியாவில் கிராமப்புறங்களில் 4.4 சதவீதம் பேரிடமும், நகர்ப்புறங்களில் 23.4 சதவீதம்பேரிடம் மட்டுமே ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இந்தியா முழுமையுமே 4.4 சதவீதம் என்றால் தமிழகத்தில் இதன் நிலை எப்படியிருக்கும்? கிராமப்புறங்களில் 14.9 சதவீதம் பேரிடமும், நகர்ப்புறங்களில் 42 சதவீதம் பேரிடம் மட்டும் தான் இணையதள வசதி உள்ளது.தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 53 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. சுமார் 1.3 கோடி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 

மாற்று அல்ல
கொரோனா முடக்கம் காரணமாக வேலை இழந்த அல்லது ஊதியம் கிடைக்காத பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி கல்விக் கட்டணம் செலுத்த முடியும் என்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். தொலைதூர கற்றல் அல்லது இணையவழி கற்றல் வழக்கமான வகுப்புகளில் கற்கும் அனுபவத்தை ஒரு போதும் தந்துவிடாது.  கொரோனா பொது முடக்கக் காலத்தில் ஒரு சிறிய மாற்று முயற்சியாகத்தான் இணைய வழி கல்வியைக் கருத முடியுமே தவிர, வழக்கமான கற்பித்தலுக்கு இது மாற்றாக முடியாது. அதற்கான காலம் இன்னும் கனியவில்லை.ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிக் கூடங்கள் உள்பட 99.9 சதவீத கல்விமையங்களிலும், பெரும்பாலான கல்லூரிகளி லும் எதுவும் நடக்காமல் ஸ்தம்பித்துள்ளன. இதனால் மாணவர்கள் மத்தியில் கல்வி பெறும் வாய்ப்பில் ஏற்றத்தாழ்வு உருவாகியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

தகவல்கள் : ஜீ நியூஸ் இணையதளம்

;