tamilnadu

img

கட்டுமான தொழிலாளர்களுக்கு  ரூ.2 ஆயிரம்: புதுவை முதல்வர்

 புதுச்சேரி,ஏப்.21- கட்டுமானத் தொழிலாளர் களின் குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயண சாமி அறிவித்துள்ளார்.  இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவுகளை கடுமைப்படுத்தி உள்ளோம். தொழிற்சாலைகளை அவசியம் இன்றி திறக்க வேண்டாம். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை மண்டிக்கு எடுத்துசெல்ல எந்த தடை உத்தரவும் இல்லை. புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது. ஊரடங்கால் வரி வருவாய் பாதிப்பு ஏற்பட்டு கடுமை யாக நெருக்கடியை அரசு சந்தித்துள்ளது.

ஏழைகளின் பசியை போக்க மத்திய அரசு அரிசி கொடுத்தால் மட்டும் போதாது, வருவாய் இழப்பை சரி செய்ய உரிய நிதி உதவி வழங்க வேண்டும்.  புதுச்சேரி பொருளாதாரம் பாதிப்பு சரி செய்ய பல மாதங்களாகும். மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள ரூ.10 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். அதேப்போல், அன்னிய செலவானி கையிருப்பும் அதிகமாக உள்ளது. எனவே மத்திய அரசு உதவினால் மட்டுமே பொருளாதார பாதிப்பு சரியாகும். கொரோனா தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள புதுச்சேரி கட்டுமான தொழிலாளர்களின் குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரமும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்ப அட்டைக்கு ரூ.1000 என மொத்தம் 70 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இந்த நிவாரணம் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் கூறினார். இச்சந்திப்பின் போது நலத்துறை அமைச்சர் கந்தசாமி உடனிருந்தார்.

;