புதுச்சேரியில், ஒரே நாளில் 27 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில், இன்று புதிதாக 27 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 120 பேர், ஜிப்மரில் 22 பேர், காரைக்காலில் 6 பேர், மாஹே பிராந்தியத்தில் ஒருவர் என மொத்தம் 149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 27 பேரில், 26 பேர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் கோவிட்-19 தொற்றுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று இரவு 10 மணிக்கு மருத்துவர்கள் பரிசோதிக்கும்போது கூட நன்றாக இருந்தார். திடீரென இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் உயிரிழந்தவர்ஜளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.