tamilnadu

img

பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்குக....

புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியது.இது குறித்து சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் அ. ஆனந்த், செயலாளர் ப. சரவணன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் முன்னணியில் நின்று போராடுபவர்கள் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள்,  காவல்துறை, துப்புரவு ஊழியர்களின் பணியை போற்றும் விதத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மக்கள் வீதிகளில் நின்று கை தட்ட வேண்டும், 

விளக்கு ஏற்ற வேண்டும்  என பிரதமர் கேட்டுக்கொண்டார்.அதன்படி புதுச்சேரியிலும் ஆளுநர், முதலமைச்சர், எதிர்க் கட்சி தலைவர் என அனைவரும்  தங்களின் வீடுகளுக்கு முன்னால் நின்று கைதட்டினர். புதுச்சேரி  முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களும் தினந்தோறும் சமூக வலைதளத்தில் தவறாமல் மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் காவல்துறையினர் பேரிடர் மற்றும் வருவாய் துறையினர் அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார். கொரோனா நோய் தடுப்பு பணியில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் 50 லட்சம் ரூபாய் வரை காப்பீடும் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  கொரோனா தடுப்பு பிரிவில் பணிபுரியும் பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு அத்து கூலிகளை போல்  உதவித்தொகையாக மாதம் ரூ. 5000 வீதம்  நாளொன்றுக்கு ரூ.163 மட்டுமே வழங்கப்படுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.மகாத்மா காந்தி கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் மக்களுக்கு கூட குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.256 வழங்கப் பட்டு வருகிறது.
அதே போன்று அண்டை மாநிலமான கேரளாவில் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகையாக  மாதந்தோறும் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுவதை போல் புதுச்சேரி  கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

;